கலையின் கைபற்றி…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் நவம்பர் மாத ஆலய கலை வகுப்பில் கலந்து கொண்டேன். வகுப்பில் ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் அஜந்தா மற்றும் எல்லோராவை பற்றி இவ்வாறு கூறுவார், “இந்திய ஓவிய மற்றும் சிற்பக் கலையின் உச்சம் அஜந்தா மற்றும் எல்லோரா”. அஜந்தாவின் ஓவிய சிறப்பையும், எல்லோராவின் சிற்பங்களை பற்றியும் கூறிய வண்ணமே இருப்பார். எல்லோராவின் கைலாசநாதர் ஒற்றை கல் கோவிலை பற்றி அவர் கூறும் போதே நாம் எப்படியாவது சென்று அதை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் முளைக்க ஆரம்பித்து விடும். அத்துடன் ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் ஒரு குழுவாக அழைத்து செல்வார் என்பது ஒரு வர பிரசாதமே. எங்களின் வகுப்பில் ஆசிரியர் முதலில் காஞ்சிபுரம், மாமல்லை, புதுக்கோட்டை இந்த மூன்று பகுதிகளில் ஏதேனும் ஒன்று செல்வோம், பின் அஜந்தா பயணம் பற்றிய அறிவிப்பு வரும் என்று கூறினார்.

வகுப்பு முடிந்தபிறகு ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தேன், எந்த குழு பயணம் என்றாலும் உடனடியாக பதிவு செய்து, ஆசிரியருடன் செல்ல வேண்டும் என்று. ஆனால் முதல் குழு பயணமே அஜந்தா பயண அறிவிப்பு. அடித்தது முதல் பரிசு என்ற கொண்டாட்டத்தில் உடனடியாக பெயரை பதிவு செய்து விட்டேன். ஆலயக்கலை வகுப்புகளுக்கு பிறகு, வீட்டில் வகுப்பு பற்றிய கலந்துரையாடல் நடந்து கொண்டே இருக்கும். அதனால் என் கணவரும் மகனும் குழு பயணத்திற்கு ஆர்வமாகவே இருந்தார்கள். ஆசிரியர் நாள்களை உறுதி செய்தவுடனேயே விமான டிக்கெட்களை பதிவு செய்து விட்டேன். ஆசிரியரின் பரிந்துரைபடி புத்தஜாதக கதைகளை வாசித்து முடித்திருந்தோம். ஆனாலும் ஆசிரியர் பரிந்துரைத்த புத்தகத்தை முழுவதுமாக முடிக்க முடியவில்லை.

ஒன்றரை மாதத்திற்கு முன்பே அறிவுப்பு வந்தது. நாட்கள் நெருங்க நெருங்க ஆவலும் ஆர்வமமும் அதிகரித்து கொண்டே இருந்தது. பதினொன்றாம் தேதி இரவு சென்னையில் இருந்து பயணம், பனிரெண்டாம் தேதி காலையில் அவுரங்காபாத்தில் இறங்கி, நண்பர்கள் விக்னேஷ் மற்றும் ரவீந்திரன் அவர்களுடன் சற்று இளைப்பாறி காலை உணவுக்கு பிறகு ஆசிரியருடன் அஜந்தா அருகில் இருக்கும் MTDC நோக்கி பயணம். சுமார் மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அனைவருமே சிறிது இளைப்பாறினோம். பின் மாலை தேநீருடன் நண்பர்கள் அனைவருடனும் ஓவியங்களை எவ்வாறு ஜாதக கதைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கலந்துரையாடினோம். இரவு உணவிற்கு பிறகு ஆசிரியரின் சிறிய முன்னோட்டம் மறுநாள் என்ன என்ன பார்ப்போம் என்று. ஏற்கனவே இரண்டு நாள் இணைய வகுப்பு மூலமாக ஒரு முன்னோட்டம் எங்களுக்கு கொடுத்துஇருந்தார். அனைவரும் ஓரளவு தயார் நிலையில் இருந்தோம். ஆசியரின் அறிவுரைபடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜாதக கதைகளை விவரிப்பதாக ஒத்துக்கொண்டு அதற்காகவும் தயார் படுத்திக்கொண்டோம். என் மகனின் வயதை ஒத்த மேலும் இரண்டு பேர் குழுவில் இருந்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது. அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கதைகளை விவரிக்க ஒத்துகொண்டது மிக்க மகிழ்ச்சி அளித்தது.

பதின்மூன்றாம் தேதி காலை 8.30 மணிக்கு உணவிற்கு பின் அஜந்தாவிற்கு கிளம்பினோம். சுமார் 10 மணிக்கு அஜந்தாவின் முதல் குகையின் முன்பு, குகைகளின் முகப்பிலேயே புத்தரின் மூப்பு, நோய், மரணம் பற்றிய சிறிய சிற்பங்களின் விளக்கங்களை ஆசிரியர் கூற ஆரம்பிக்க, முதல் குகைக்கான ஜாதகதைகளின் விளக்கத்துடன் உள்ளே சென்றோம். இருண்ட குகைகளின் சுவர்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஓவியங்கள் கண்ணுக்கு புலப்பட ஆரம்பித்தது. முதல் குகையில் ஓவியங்கள் சற்று சிதைந்த நிலையில் இருந்த போதும், ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் ஜாதக கதைகளை அறிந்து ஓவியங்களுக்குள் செல்ல ஆரம்பித்தோம். கதையினூடாக ஓவியத்தை ரசித்து ரசித்து மெதுவாக கதை மாந்தர்களின் முக பாவங்களை அறிந்து முன்னேறி சென்றேன். ஒவ்வொரு ஓவியங்களின் கண்களும் அவ்வளவு அழகு, எனக்கு சொல்ல தெரியவில்லை. பெண்களின் கண்கள், ஆடை ஆபரணங்கள், வளைவுகள், விலங்குகள், விலங்குகளின் முக பாவனைகள் காண காண வந்து கொண்டே இருந்தது. உச்சமாக பத்மபாணியின் ஓவியம்.. கையில் மலருடன், ஆசிரியர் அதை விவரிக்கும் பொழுது மலர் போன்ற கைகளில் மலருடன் என்று விவரித்தார். அவ்வளவு அற்புதம், அவ்வளவு நளினம்.. அனைத்திற்கும் நடுநாயகமாக புத்தரின் சிலை, அதில் தான் எவ்வளவு அமைதி, சாந்தம்.. காண காண இரு கண்கள் போதவில்லை.

ஒவ்வொரு குகை ஓவியங்களையும் ரசிக்க ஆரம்பித்தோம், ஒவ்வொரு ஓவியமாக நாங்களாக உள்வாங்கி ரசிக்க, உதவினார் ஆசிரியர். இந்திராணியின் ஊஞ்சல் ஓவியம், பின்பக்கமாக அமர்ந்து இருந்த பெண்களின் ஓவியங்கள், பெண்களின் சிகை அலங்காரங்கள், விலங்குகள், வித விதமான மலர்கள், எங்கும் மலர்கள்.. அனைத்தும் ஓவிய கலையின் உச்சம். அந்த இருண்ட குகைகளில் அந்த கண்கள் எங்களுடன் ஏதோ பரிமாறிக்கொண்டே இருந்தது போல்… ஒரு கால இயந்திரத்தில் அந்த நூற்றாண்டுக்கே பயணித்த அனுபவம். ஒரு குழந்தை போல ஜாதக கதைகளை அறிந்து கொண்டேன், ஓவியங்களின் மூலமாக. அனைத்து ஓவியங்களின் முக பாவனைகளிலும், புத்தரின் முகத்தில் மட்டும் ஒரு பேரமைதி. இப்பொழுது கண்களை மூடினாலும் அந்த அமைதியை பார்க்கவும், உணரவும் முடிகிறது. முதல் பதினாறு குகைகளை முதல் நாள் முடித்து திரும்பினோம்.

இரண்டாம் நாள் பதினேழாவது குகையில் ஆரம்பம். பதினேழாம் குகையை பார்ப்பதற்கு மட்டும் ஒரு நாள் வேண்டும். அவ்வளவு ஓவியங்கள்… சுமார் நான்கிற்கும் மேற்பட்ட ஜாத கதைகள்.. சிறிதே சிதைவுற்ற நிலையில் உள்ளதால் அனைத்தும் தெளிவாக இருந்தது. அவ்வளவு ஆச்சரியம், நடக்கும் தரை பகுதியை தவிர அனைத்து பகுதிகளிலும் ஓவியங்கள். சுவர்களில், மேல்கூரைகளில், தூண்களில் என்று எங்கும் ஓவியங்கள். சிம்மல ஜாதக கதையில் தேவதைகளுக்கும், இராட்சசிகளுக்கும் உள்ள வேறுபாடுகள், சிறு ஏணி முதல், மாடங்கள் வரையிலான வித்தியாசங்கள், அசந்து போய்விட்டோம். காண காண திகைப்பு. திகட்ட திகட்ட கண்டு களித்தேன். அனைத்து ஓவியங்களுக்கு பின் கடைசி குகையில் புத்தரின் பரிநிர்வாண சிற்பம். அதில் இருந்த அமைதியும் சாந்தமும் மனதை ஏதோ செய்தது. அந்த அமைதியுடன் அஜந்தா பயணம் முடிந்தது.

மறுநாள் காலை எல்லோரா… கைலாசநாதருடன் ஆரம்பம். அஜந்தாவில் அமைதியுடன் இருந்த மனது கைலாசநாதர் ஆலய முகப்பிலேயே பறக்க ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் தெரிந்த பாடம். சிற்பங்களை அடையாளம் காண முடிந்தது. ஆலயக்கலை வகுப்பின் பலன். வராக அவதாரம், சிவனின் ஊர்த்துவஜானு, சதுரங்காட்டம், கஜசம்ஹாரம், யோகேஸ்வரர், கங்காதரர் என்று பார்த்து பார்த்து வியந்தோம். அவ்வளவு பிரம்மாண்டமான பெரிய பெரிய சிலைகள். நங்கள் பெரிய சிலைகள் மட்டும் அல்ல ஒரு அடியில் கூட மஹாபாரத ராமாயண பாகவத புராணங்களை செதுக்குவோம் என்று பறை சாற்றி இருந்தார்கள். காண காண பிரம்மாண்டம் விரிந்து கொண்டே இருந்தது. பின் புத்த குகைகள், பெரிய பெரிய பத்மபாணி வஜ்ரபாணி சிலைகள். எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்த போதிலும் புத்தரின் சிலையில் அமைதியே. அன்றைய நாளின் உச்சமாக மலையின் உச்சியில் இருந்து கைலாசநாதர் கோவிலை பார்த்தது. வார்த்தைகளே இல்லை, அந்த உணர்வுகளை வெளிப்படுத்த. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கலாம்… வியந்து வியந்து சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கலாம். அந்த வியப்பிலேயே அன்றைய நாள் முடிந்தது.

கடைசி நாள் இந்து கடவுளின் சிற்பங்களில் இருந்து தொடங்கி சமண சிற்பங்கள் வரை அனைத்தையும் கண்டும் கற்றும் களித்தோம் ஆசிரியரின் கைகளை பிடித்தவாறே. சமண குகைகளின் ஓவியங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கண்டு களித்தோம். அனைவரின் கண்களிலும் கற்றலின் இன்பத்தை காண முடிந்தது. சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு அஜந்தாவும் எல்லோராவும் எவ்வளவு வண்ணமயமாக இருந்திருக்கும் என்று நினைக்க நினைக்க வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

நாற்பத்துஐந்து பேருடனான முதல் குழு பயணம். ஒரு பெரிய நட்பு வட்டம் கிடைத்தது. இந்த பயணம் மிகச்சிறப்பாக அமைய காரணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. அனைத்திற்கும் மேலாக நங்கள் கேட்ட சிறு சிறு வினாக்களையும் சந்தேகங்களையும் மிக தெளிவாக விளக்கிய ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களுக்கு எத்துணை முறை நன்றிகள் சொன்னாலும் தீராது. அடுத்த பயணத்திற்காகவும், இரண்டாம் நிலை ஆலயக்கலை வகுப்பிற்க்காகவும் காத்திருக்கிறேன்.

இவை அனைத்திற்கும் முதற்கண் காரணமான ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகள். ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் கிடைக்கும் ஒவ்வொரு கற்றலுக்கும் உங்களுக்கு பல நன்றிகள். இவை அனைத்தும் கிடைக்க பெற்றமை இந்த வாழ்வின் நல்லூழ் என்றே சொல்ல வேண்டும்.

நன்றியுடன்,

ஈஸ்வரி

முந்தைய கட்டுரைஆயுர்வேதப் பயிற்சி எதற்காக?
அடுத்த கட்டுரைதீராத இன்பங்கள்