அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
பேராசிரியை லோகமாதேவியை பல விஷ்ணுபுர விழாக்களில் சந்தித்திருக்கிறேன். தாவரங்கள் பற்றிய அவரது பல கட்டுரைகளை சொல்வனம் இதழில் வாசித்திருக்கிறேன். ஆனாலும், கடந்த ஆண்டு குருபூர்ணிமா நிகழ்வின்போதுதான் அவரிடம் பேசுவதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. அவர் சுவாரசியமாக உரையாடக் கூடியவர் என்பது தெரிந்தது.
எனவே, தாவரியல் அறிமுக வகுப்பு பற்றிய அறிவிப்பு வந்ததும் செல்வதென முடிவு செய்தேன். விடுமுறைக்கு எங்காவது அழைத்துச் செல்லக் கோரிய மகளையும் வெள்ளிமலைக்குச் செல்லலாம் என சம்மதிக்க வைத்தேன். வேறு இடத்திற்கு செல்வதாகவும் ஆயிற்று புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதாகவும் ஆயிற்று.
சென்னையிலிருந்து நீலகிரி விரைவு ரயிலிலிருந்து அதிகாலை மூன்றரைக்கு ஈரோடில் இறங்கியபோது நல்ல குளிர். பேருந்து நிலையத்திற்கு சென்றால் அந்தியூர் செல்லும் பேருந்து நான்கு ஐம்பதிற்குதான் வந்தது. அந்தியூரில் வெள்ளிமலைக்கு வரும் அந்த முதல் பேருந்தை பிடிக்கவேண்டும் என்ற ஆவல் இம்முறையும் நிறைவேறவில்லை. அங்கேயே காத்திருக்காமல் தாமரைக்கரை வரை செல்லும் பேருந்தில் ஏறினோம். தாமரைக்கரையில் டீ குடித்துவிட்டு பேருந்திற்காக காத்திருந்தபோது பறவை பார்த்தல் வகுப்பு நடத்தும் நண்பர் விஜயபாரதி தன் குடும்பத்தினருடன் காரில் வந்தார். ஒருவருக்கு மட்டுமே இடமிருந்த அக்காரில் என் மகளை அனுப்பியபோது ஓர் ஆசுவாசம் தோன்றியது. அப்போதுதான் அவ்வளவு நேரம் மனம் பதட்டமாக இருந்திருப்பதை உணர்ந்தேன். பிள்ளைகளோடு செல்லும்போது உள்ளுக்குள் ஓர் பதட்டம் இயல்பாக ஏற்பட்டுவிடுகிறது.
தாமதமாக வந்த பேருந்தேறி நித்யவனத்தை அடைந்தபோது ஆலமரத்தடி வகுப்பு முடித்து வகுப்பறையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். சற்று வருத்தம் ஏற்பட்டாலும் தாமதத்திற்கு நான் காரணமல்லவே என்று சமாதானப்படுத்திக் கொண்டு தயாராக இருந்த தேநீரை ஒரு கப் எடுத்து குடித்தபடியே வகுப்பறைக்குச் சென்றேன்.
வகுப்பறையில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும் ஆச்சர்யம் தோன்றியது. மிக மூத்தவர்களில் இருந்து மிக இளம் பிராயத்தவர்வரை பெண்கள் இருந்தார்கள். சிலபேரைத் தவிர அநேகர் இதுவரை விஷ்ணுபுர விழாக்களில் காணாத புதியவர்கள். காணொலிகள் பார்த்து வந்திருப்பார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.
பேராசிரியை லோகமாதேவி இலைகளின் அமைப்புகளிலிருந்து தொடங்கினார். இல்லையில்லை நான் சென்றபோது அதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். இலைகளின் அமைப்பையும் அவற்றின் வடிவத்தையும் வரைந்து அதற்கான தாவரவியல் பெயர்களை கூறினார். கண்முன்னே வேறொரு உலகம் விரியத் தொடங்கியது. நாள்தோறும் சாதாரணமாக கடந்து செல்கிற தாவரங்களில் எத்தனை விதங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் எத்தனை சிறப்பானவற்றை தன்னுள் கொண்டுள்ளன. அவற்றை அறியத் தொடங்கினால் வியப்பிலேயே வாழ்நாள் கழிந்துவிடும் எனத் தோன்றியது. அல்லது வாழ்நாளை இனிமையாகக் கழிக்க தாவரங்களை நோக்கிக் கொண்டிருந்தாலே போதும் என்றும்.
சிறிது நேரத்திலேயே வகுப்பறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார் பேராசிரியை. உள்ளே வரைந்து காட்டியவற்றை நேரடியாக செடிகளில் காட்டினார். சிலவற்றை மாணவர்களிடம் இது எவ்வகையானது என வினவி சொல்ல வைத்தார். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது பெரியவர்கள் சிறியவர்கள் வித்தியாசமின்றி அத்தனை பேரும் உற்சாகமாக அவரைத் தொடர்ந்ததும் அவரது வினாக்களுக்கு பதிலளித்ததும்தான். பிற வகுப்புகளில் போலல்லாது இக்குழுவில் பெண்களின் எண்ணிக்கையே மிகுந்திருந்ததால் ஆண்கள் சற்று ஒதுங்கியே நிற்க வேண்டியிருந்ததைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.
வகுப்பறையில் அமர்ந்திருந்ததைவிட மரங்களுக்கிடையே நடந்ததும் ஆலமரத்தடி மாமரத்தடி மற்றும் வேப்பமரத்தடிகளில் அமர்ந்தும் நின்றும் உரையாற்றியதே மிகுதி. இவ்வகுப்பின் முதன்மையான சிறப்பென்பது இதுவே.
மரங்களின் செடிகளின் தன்மையையும் அதன் அறிவு மற்றும் உணர்வுத் திறனையும் கேட்கக் கேட்க அனைவருமே மலைத்துவிட்டோம் என்றே கூறவேண்டும். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உறங்கும் பொழுதென்று உண்டு, ஆனால் மரங்கள் இருபத்துநான்கு மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற விபரம் அவற்றின் மேல் மரியாமையை ஏற்படுத்தியது. பேராசிரியை லோகமாதேவி பல தடவை கூறியதுபோல மனித இனத்தைவிட தாவரங்கள் உயர்ந்தவைதான் என உணர்ந்தோம்.
தன் இனத்தை தக்க வைக்கவும் பெருக்கவும் தாவரங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் திகைக்க வைக்கின்றன. மகரந்தத்தூள்கள் பல மைல் தூரம் கடந்து வந்து இனப்பெருக்கம் செய்ய உதவுகின்றன என்ற செய்தி இதுவரை அறியாதவை. பாடங்களுக்கு வெளியே உரையாடல்களில் பேராசிரியை பகிர்ந்து கொண்ட விசயங்கள் மிக அதிகம். ஆசிரியரின் உடன் இருந்து கற்பது என்பதன் முதன்மைப் பயன் இதுதான்.
மறுநாள் காலை அருகில் படுத்திருந்த விஜயபாரதி எழுந்து தயாரானபோதே நானும் கிளம்பினேன். அன்பரசி, சரண்யா போன்ற அவருடைய மாணவர்களுடன் அவர் மனைவி மற்றும் பிள்ளைகள் அகல்யா மதுமஞ்சரி மேலும் என் மகள் திவ்யபாரதி இன்னும் சிலரும் சேர்ந்து பறவை பார்த்தலுக்குச் சென்றோம். தூரத்தில் சிறு அசைவாகத் தெரியும் பறவையை அன்பரசி தன் விலையுயர்ந்த கேமராவில் மிக அருகே வண்ணமயமாகக் காட்டினார். மிக உற்சாகமாக பறவைகளின் பெயரையும் முதல் முறை அவற்றைப் பார்த்த இடங்களையும் சொல்லிக் கொண்டிருந்தார். விஜயபாரதி தொலைதோக்கி மூலம் பறவைகள் இருக்குமிடத்தை சுட்ட அன்பரசி அவற்றைப் பல கோணங்களில் புகைப்படமெடுத்து உடன் வந்தவர்களுக்கு காட்ட காலைப் பொழுது மிக உற்சாகமானதாக அமைந்தது. இதே போலவே மாலையும் மறுநாள் காலையும் பறவை பார்க்கும் வைபவம் சிறப்பாக அபைந்தது. இதில் பேராசிரியை லோகமாதேவின் மாணவர்களான முனைவராகப்போகும் மேனகா மற்றும் கதிரும் இணைந்திருந்து மகிழ்ந்தார்கள்.
பேராசிரியை கல்லூரியில் பணியாற்றுபவர் என்பதால் நுண்ணோக்கள், பல்லாயிர வருடப் பழமையான படிவக்கற்கள், இலைகளின் வடிவங்கள் பற்றிய அச்சடித்த தாள்கள் மற்றும் கேள்வித்தாள்கள் என தாவரவியல் வகுப்பிற்கு முழுத் தயாரிப்புடன் வந்திருந்தார். அதற்கு ஏற்றாற்போல அடம்பிடிக்காத இளம்பிள்ளைகளும் அர்த்தமற்ற கேள்விகள் கேட்காத பெரியவர்களும் கருத்தூன்றி கவனிக்கும் இளையவர்களுமாக வகுப்பு அமைந்திருந்தது. பேராசிரியையின் சளைக்காத சுவாரசியமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. தாவரங்களின் தொடர்புகொள்ளும் திறன் குறித்து கூறியவை வியக்க வைத்தன. உதாரணமாக மூங்கில்கள் எழுபது வருடங்கள் வாழ்ந்து ஒரேமுறை பூக்கும்போது பல்லாயிரம் மைல்களுக்கப்பால் வேறு நாடுகளில் இருக்கும் அவ்வினத்தைச் சேர்ந்த மரங்களும் அதே சமயத்தில் பூக்கின்றனவாம்.
உலகில் சின்னச் சின்னதாய் பல்லாயிரம் ஆச்சர்யங்கள் நம்மைச் சுற்றி நிறைந்துள்ளன. தீர்ந்து போகாத இன்பத்தை அடைய பார்வையை சற்று விசாலமாக்கி சற்று கூர்ந்து நோக்கினால் மட்டும் போதும் என்பதை பேராசிரியை உணரவைத்தார். அவருக்கும் அவரது மாணவி மேனகாவிற்கும் நன்றி. நித்யவனத்தை தன் உற்சாகத்தால் கட்டுக்குள் வைத்திருக்கும் அந்தியூர் மணிக்கு எத்தனை நன்றிகள் கூறுவது…
ஒரு வகுப்பிற்கு வந்துவிட்டு இரு பயிற்சிகள் பெற்றுக்கொண்ட மகிழ்வோடு கிளம்பினோம். தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூருக்கு காரில் சென்ற நண்பர் ராகவ் எங்களை பவானியில் இறக்கிவிட்டார். அந்தியூர் மணியின் யோசனைப்படி சங்கமேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றோம். அவ்வாலயம் எனக்கு மிகவும் பிடித்த ஆலயக்கலைக்கான பயிற்சி இடமாக அமைந்தது. அங்குள்ள பிரமாண்டமான தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களிலிருந்து பார்வையை விலக்க முடியவில்லை. வெவ்வேறு சாமிகளுக்கு மாலையணிந்து வழியிலிருக்கும் இவ்வாலயத்திற்குள் கூட்டமாக நுழைந்தவர்கள் மூலவரை மட்டும் தரிசித்து வரங்களைப் பெற்றுக்கொண்டு நிற்காமல் சென்று கொண்டிருந்தார்கள். தூண்களையோ சிற்பங்களையோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர்களைக் காண பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கும் உங்களைப்போல ஜெயக்குமார்போல ஆசிரியர் வாய்த்தால் கலைக்கண் திறக்கக்கூடும். வாய்க்கட்டும் என வேண்டிக்கொண்டேன்.
தாவரவியல் வகுப்பிற்கு சென்று வந்ததைப் பற்றி யோசிக்கும்போது சிலிர்ப்பாக உள்ளது. நம்மைச்சுற்றி படர்ந்தும் வளர்ந்தும் கிளைத்தும் நிற்கும் லட்சக்கணக்கான தாவரங்கள் எனும் குட்டிக்குட்டி இன்பங்களை அனுபவிக்காமல் இருந்துவிட்டோமே. இவற்றை அறியாமல் எங்கோ தொலைதூர கானல்நீர் இன்பங்களை எண்ணி மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் வதைத்துக் கொள்கிறானே. உலகிலுள்ள ஒவ்வொன்றையும் ரசிப்பதற்கான பல விழிகளுடன் மனிதன் பிறக்கிறான். பட்டை தீட்டப்படும் வைரம்போல, உங்களைப் போல நல்லாசிரியர் மூலம் அவற்றை திறந்து பார்க்க வாய்த்தவன் முடிவிலா இன்பங்களுக்குள் மூழ்கித் திளைக்கலாம். மற்றவர்கள் வெறும் பார்வைக்கான ஒரு விழியுடன் இருந்து மறைகிறார்கள். பரிதாபத்திற்குரிய அவர்களுக்கும் பிற விழிகளும் திறக்க வாய்க்கட்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
பரவசத்துடன்
கா. சிவா