மதம் என்னும் புதிர்

அன்புள்ள ஜெ

மதத்தை எப்படி அணுகுவது என்னும் காணொளி என்னை ஒருவரத்துக்கும் மேலாக சிந்தனையில் ஆழ்த்தி வைத்திருந்தது. இதையே நீங்கள் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கலாம். ஆனால் உங்கள் இல்லத்தில், உங்கள் அறைக்குள் அமர்ந்து நீங்கள் ஆத்மார்த்தமாக உரையாடுவதுபோன்ற அந்த அனுபவம் இன்னும் தீவிரமான ஒரு மனப்பதிவை உருவாக்கியது. அதில் உங்கள் குரல் கம்மலாக ஒலிக்கிறது. குரலிலும் முகபாவனையிலும் ஆழமான உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன.

மதம் என்ற ஒன்று தேவையே இல்லை என்ற எண்ணத்தை நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். என் வாழ்க்கை முழுக்க அந்த எண்ணத்தையே முன்வைத்து வாதாடியும் வந்தேன். பழங்கால மனிதர்கள் அவர்களுக்கு அறிவியல் அறிவு இல்லாததனால் நோய், சாவு, இயற்கைச்சக்திகள் போன்றவற்றை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தபோது உருவாக்கிய கற்பனைகளே தெய்வங்கள் என்று நினைத்தேன். தெய்வங்களை முன்வைப்பதே மதம் என்று நம்பினேன்.

ஆனால் மதம் இல்லாவிட்டால் மனிதகுலத்துக்கு வேறு என்ன தொடர்ச்சி இருக்கிறது என்னும் எண்ணம் இப்போது வந்துவிட்டது. அதைத்தான் உங்களுடைய உரையும் கேட்கிறது. மதம் இல்லை என்றால் அறிவியல் மட்டும்தான் மிச்சம். அறிவியல் வெறும் நுகர்வை மட்டுமே உருவாக்குகிறது. அறிவியல் அன்றாட உலகவாழ்க்கையை மட்டுமே அளிக்கிறது. ஆனால் நாம் இங்கே வாழ்வது மனதாலும்கூடத்தானே? அந்த மனம் எத்தனை ஆயிரம் ஆண்டுக்காலமாக மெல்ல மெல்ல உருவாகி வந்துள்ளது. அந்த மனம் என்பதுதான் பண்பாடு. அந்தப் பண்பாட்டின் குறியீடுகளும் மனநிலைகளும் எல்லாம் வேறு எங்கே உள்ளது?

மதம் அழிந்தால் மனிதனுக்குப் பண்பாடு எஞ்சாது. தொன்மையுடன் மானசீகமான தொடர்பே எஞ்சாது. அதிலும் இந்துமதம் போன்ற இயற்கைமதங்கள் அழிந்தால் மனிதன் வேரற்றுப்போய்விடுவான். நம் தொல்மூதாதையருடன் நம்மை இணைப்பது இன்றைக்கும் நம் வாழ்க்கையாக இருக்கும் இந்த தொன்மையான மதம்தான்.

சிறப்பான காணொளி

ஜெகந்நாதன் பஞ்சாபகேசன்

 

முந்தைய கட்டுரைஉபநிடதக்கல்வி, கடிதம்
அடுத்த கட்டுரைகிறிஸ்தவ தத்துவ அறிமுகம்