என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
வணக்கம்!
பெருங்கொடையளிக்கும் உங்கள் செயல்களுக்கும், நீங்கள் தரும் செயல் ஊக்கங்களுக்கும், மீண்டும் மீண்டும் உளம் கனிந்த நன்றிகளும், வணக்கங்களும்!
தத்துவத்தில் மிகுந்த ஆர்வமிருந்த போதிலும், எங்கிருந்து தொடங்குவது என்ற ஒரு குழப்பம் நீடித்திருந்தது. இலக்கிய நண்பர்கள் குழுவில், மேலை தத்துவ நூல்கள்,கோட்பாடுகள் சம்பந்தமான உரையாடல்கள் நிகழும். நண்பர்கள் சில நூல்களை பரிந்துரை செய்திருந்த போதிலும், அது பெரும் மலைப்பை உருவாக்கின.
இருத்தலியல் குறித்த கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டிருந்த காலத்தில், சார்த்தரிடம் சென்றடைந்தது எனது வாசிப்பு தேடல். அவர் எழுதிய ‘Existentialism and Humanism’ என்ற புத்தகமே தத்துவம் சம்பந்தமாக நான் வாசித்த முதல் நூல். இருந்தும் அது என் தேடலை வரலாற்றின் பின்னோக்கி இழுத்தது. சார்த்தர், ஹைடெகர் பற்றி குறிப்பிடுகிறார். அப்போது அவர் தத்துவ சிந்தனைகளும், கோட்பாடுகளும் தெரிய வேண்டியிருந்தன. ஆதியின் தடம் நோக்கிய ஒரு பயணம் தேவையாய் இருந்தது. அதற்கு ஒரு வரைபடம் தேவை என்ற எண்ணம் வலுப்பெற்றது.
இத்தருணத்தில்தான், அஜிதன் நடத்தவிருந்த மேலை தத்துவ வகுப்பிற்கான முதல் அறிவிப்பு வந்திருந்தது. அந்த தேதிகளில் நான் ஏற்கனவே பயணம் ஒருக்கம் செய்திருந்தேன். அடுத்ததை தவறவிடக்கூடாது என்றிருந்தேன். சரியாக அதுவும், என் அடுத்த பயணத்தை ஒட்டி. ஞாயிறு இரவு எனக்கு சென்னையில் விமானம். ஞாயிறு மதியம் 1 மணிக்கு வகுப்பு முடியும். நடுவில் பத்து மணி நேரம் இருக்கிறது, பிடித்து விடலாம் என்று வகுப்பிற்கு பதிவு செய்து, பெட்டி கட்டிக்கொண்டு நித்யவனம் சென்றடைந்துவிட்டேன்.
நான் எடுத்த சரியான முடிவுகளுள், இதுவும் ஒன்று என்ற மகிழ்வு கிடைத்தது. தத்துவத்தை அறிந்து கொள்வது என்பது ஒரு அறிவுத் துறையை அறிந்து கொள்வது என்பதை தாண்டி, பல்லாயிரமாண்டு சிந்தனை தொடர்ச்சியை அறிந்து கொள்வது என்றே சொல்வேன். அந்த எண்ணமே ஒரு மனக் கிளர்ச்சியை உருவாக்குகிறது. அந்த கிளர்ச்சி, வகுப்பில், ஒவ்வொரு காலக்கட்டத்தின் சிந்தனைகளை நான் அறியுந்தோறும், என்னுள் உச்சம் பெற்றது. (குறிப்பாக, ஹெடகர் மற்றும் நீட்சேவின் தத்துவங்களில்).
பண்டைய தத்துவத்தில் இருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு காலக்கட்டத்துக்கமான தத்துவாதிகளையும், அவர்கள் முன்வைத்த தத்துவங்களையும் , அதற்கு இணையான இந்திய, பெளத்த, கிறித்துவ , இஸ்லாமிய (சூஃபி) தத்துவ சிந்தனை மரபுகளை இணைத்துக் காட்டியும், வகுப்பை முன்னகர்த்தி சென்றவிதம் அபாரம். ஒவ்வொரு தத்துவத்தை அறிமுகம் செய்த போதும், “ஆமாம் இதுதான் சரி” என்று தோன்றிய அடுத்த கணம், அதை மறுதலிக்கும் தரப்பின் எதிர்வாதம் அறியும் போது, “அட ஆமாம் தானே” என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில், அந்த சிந்தனை முறை எனக்குள்ளேயே உருவாக கண்டேன். அடுத்த காலக்கட்டத்தின் கேள்விகளாக தோன்றியிருக்கக்கூடிய சிந்தனைகள், என்னுள் எழுந்துவர கண்டேன். அது மிகுந்த உற்சாகத்தையும், கவனத்தையும் அளித்தன. அதற்கு முக்கிய காரணம், வகுப்பை உயிர்ப்புடன் எடுத்து சென்றது. எடுத்து கொண்ட காரியத்தில் முழு உழைப்பையும் கொடுப்பது என்ற ஒரு விஷயமும் அதில் அடக்கம். அது நூறு சதவிகிதம் அஜிதனிடமிருந்து வெளிப்பட்டது. மிக நேர்த்தியான பாடத் தயாரிப்பு. கச்சிதமான மொழி வெளிப்பாடு. சந்தேகங்களை களைந்த விதமும், கேள்விகளை எதிர்கொண்ட விதமும், ஒரு தேர்ந்த, தான் மேற்கொண்டுள்ள செயலில் முழு நம்பிக்கை பெற்ற ஒருவனின் முதிர்வு, அஜிதனிடம்.
தத்துவமே நம் சிந்தனையின், கவனத்தின் பெரும் உழைப்பை, முயற்சியை கோரக்கூடிய ஒரு துறை. அந்த வகையில்,இது மிகுந்த அடர்த்தியான பாட குறிப்புகள் கொண்ட வகுப்பு என்றே சொல்வேன். பெரும் உழைப்பை முழுதாய் மதித்து பெற்றுக்கொள்ள, நம்மிலும் ஒரு பெரும் உழைப்பு தேவை. அதை நேர்மையாய் கொடுத்து கொண்டிருந்தபோதும், என்னையும் மீறி சில இடங்களில் கவனச்சிதறல்களும், சில தருணங்களில் மூளை அயர்ச்சியும் தவர்க்க முடியாதவைகளாய் இருந்தன. அத்தருணங்களில், அந்த கையில், உயிர் பெற்ற ஒளி கண்கள், என் முன் எழுந்து வந்து, என் “மூளைக்கு கொடுத்தது சாட்டையடி”.
மீண்டும் முடுக்கி விட்டவளாய், உற்சாகமாய் பயணத்தை தொடர்ந்தேன்!
நன்றி!
ரம்யா மனோகரன்