வாசலில் நின்றிருக்கையில்

அன்புள்ள ஜெ,

இன்று தாங்கள் பதிவேற்றியநான் ஆசான் அல்ல என்ற காணொளி மூலம் உங்கள் முன் பணிதல் உங்களை சங்கடப் படுத்தும் விடயம் என புரிந்து கொண்டேன்

நான் என்னை சமூகத்திடமிருந்து பெறுபவனாகமட்டும் இருப்பதாக உணர்ந்து சமூகத்திற்கு கொடுப்பவனாக மாற வேண்டுமென்று நான் பொருளாதார ரீதியாக முன்னெடுத்த விடயங்களில் தோடர்ந்து தோல்வி ஏற்பட்டு நான் ஏதோ பிழை விடுகின்றேன் என்று அதை தேடிய வேளையில் வெண்முரசை பொழுது போக்கிற்காக வாசிக்க ஆரம்பித்திருந்தேன். ( நான் எந்த கலை அம்சத்தை அணுகும் போதும் படைப்பாளியை பொருட்படுத்துவதில்லை. படைப்பு எனக்கு அருமையாக தோன்றினால் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வேன்.) சொல்வளர்காடு வாசிக்கும் வேளையில் உங்களை பற்றி அறிய ஆசை வந்தது அப்போதுதான் நண்பன் வெண்முரசை பரிந்துரை செய்யும் போது அவன் அனுப்பியகீதைப்பேருரை காணொளியை பார்த்தேன் அதன் பின் தொடர்ந்து உங்கள் பல உரைகளை பார்கத் தொடங்கினேன். அதன் பின் தாங்கள் முன்னெடுக்கும் முழுமை அறிவு வகுப்புகள் பற்றியும் அறிந்தேன்அறிவியக்க செயல்பாடுகள் மூலம் தான் நான் கொடுப்பவனாக ஆக முடியும் என்று உணர்ந்து கொண்டேன். உங்கள் வழிகாட்டலால் உங்கள் மீது பெருங்காதல் கொண்டேன். இது வரை எனக்குள் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. உங்கள் மூலம் அறிந்த ஆன்மீக விடயங்களை தேடி புரிந்து கொள்ளும்போது எனக்கு பெரும் விடுதலை கிடைத்தது. அவ் அனுபவத்தை பகிர எழுத வேண்டுமென ஆர்வம் எழுந்தது.

உங்களுடன் பேச வேண்டும் என ஆசையாக இருந்து. ஆனால் உங்களுக்கு என்ன மின்னஞ்சல் அனுப்புவது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஏனெனில் எனக்குள் எழுந்த கேள்விகளுக்குஉங்கள் இணையத்தளம், காணொளிகள், புத்தகங்கள் மூலம் பதில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அதனால் நான் எழுதிய முதல் கதையை உங்களுக்கு அனுப்பினேன். அனுப்பிய மின்னஞ்சல் உங்களை முகஸ்துதி செய்வதற்காக நான் அனுப்பவில்லை. மின்னஞ்சல் எழுதும் போது எப்போதும் என்னை அறியாமல் கண்ணீர் வரும். உங்களை அறியும் வரை தந்தை யின் பூரண அரவணைப்பையும் வழிநடத்தலையும் நான் அறிந்ததில்லை. நீங்கள் அனைவருக்கும் கொடுக்கும் அன்பில் நான் அடைக்கலமானேன். எனக்கு கிடைத்த இந்த அன்பை உங்களை போலவே நானும் அனைவருக்கும் கொடுக்க ஆசைப்படுகின்றன் அதனால் தான் உங்களை நான் ஆசானாக வழிபடுகின்றேன். பணத்தை திரட்டியதும் இந்தியா வந்து உங்களையும் கண்டு முழுமை அறிவு வகுப்புகளிளும் பங்கேற்பேன். காணும் போது உங்களை ஆரத்தழுவுவேன்.

நான் இரசித்த விடயங்களை இணைத்துள்ளேன். நான் தரும் அன்பு மலராக ஏற்றுக்கொள்ளுங்கள்

அன்புடன் மாக்கி ( ரொனல்ட் ஹாரிசன்)

அன்புள்ள மாக்கி,

உங்கள் கடிதங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவற்றில் பலவுக்கு விரிவான பதில் அளிக்கவேண்டும். நான் தொடர்ச்சியாகப் பயணங்களில், வேலைகளில், வகுப்புகளில் இருப்பதனால் பல கடிதங்களுக்கு விரிவான பதில் எழுத முடியாமல் தேங்கிவிடுகிறது. இலங்கை இன்றைக்கு எனக்கும் ஓர் அன்னிய நாடுதான், நான் இதுவரை வந்ததில்லை. சந்திப்போம்.

அறிவியக்கச் செயல்பாடு என்பது பெரும் பிரியத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று. நம்மை நாம் நிறைவுசெய்துகொள்ளுதலே அதன் நோக்கம். அதற்கான வழி நாம் முடிந்தவரை முந்தைய அறிவுத்தொகையில் இருந்து பெற்றுக்கொள்ளுதல், முடிந்தவரை நம் பங்களிப்பை ஆற்றுதல். அதன் பின் நாமே நம் நிறைவை உணரமுடியும், அமைதியாக கடந்துசெல்லவும் முடியும் . செயல் ஒன்றே நம்மைச் சூழ்ந்துள்ள சிறுமைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். நம்மை மேலும் மேலும் நம்முள் ஒளிரச்செய்யும். தீட்டப்படும் பொருள் ஒளிகொள்வதுபோலத்தான். அதையே நான் மீள மீள முன்வைக்கிறேன்.

நீங்கள் இன்றிருக்கும் பருவம் என்பது பலவற்றில் ஈடுபட்டு, பின்வாங்கி, எது தன் வழி என்று அறியாமல் குழம்பிக்கொண்டிருப்பது. அது மிக இயல்பானது. எதில் உங்கள் அகம் முழுக்கப்படிகிறதோ அதுவே நீங்கள் ஈடுபடவேண்டிய  உலகம் என்று கண்டடையுங்கள். இன்று அதற்கு முந்தைய பணியைச் செய்யுங்கள். தொடர்ந்து அறிந்துகொண்டே இருங்கள். தொடர்ந்து வாசல்களை தட்டிக்கொண்டே இருங்கள். இன்றைய தவிப்பும் கொந்தளிப்பும் ஒரு காலத்தில் இனிய நினைவுகளாக ஆகிவிட்டிருக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைபெரிய வாழ்வும் சிறிய வாழ்வும்
அடுத்த கட்டுரைகமல், இளமை, கடிதம்