கமல்ஹாசன் – தேடலின் பேரழகு
ஜெ
நீங்கள் கமல் பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். கமல் ஹாசனின் அந்த தணியாத கல்வித்தாகம் என்பது அனைவருக்குமே முன்னுதாரணமான ஒன்றுதான். இந்தியாவில் எழுபது வயது என்பது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நாமே முடிவுகட்டிவிடும் பருவம். நம்மைச்சூழ்ந்திருப்பவர்களும் நம்மிடம் உனக்கு வயதாகிவிட்டது ஓய்வெடு என்றே சொல்லிக்கொண்டிருப்பார்கள். நான் இப்படி ஒரு பயிற்சிக்கு கிளம்பினேன் என்றால் என் மனைவி மகள்கள் எல்லாருமாகச் சேர்ந்து எதற்கு வயதான காலத்தில் உங்களுக்கு வம்பு என்றுதான் சொல்வார்கள். எனக்கு கமல் ஹாசனை விட 3 வயது கம்மி.
உண்மையில் நமக்காகச் சொல்கிறார்களா இல்லை விழுந்து கிழுந்து நமக்கு வேலைவைத்துவிடுவானோ என்ற கவலையில் சொல்கிறார்களா என்றே தெரியாது. எனக்குப் பிடித்த க்ஷேத்ரங்களுக்குக் கூட நான் போகமுடியாது. பிடித்ததை படிக்கலாம். ஆனால் அப்போதுகூட டாக்டர்கள் கண்களை வருத்திக்கொள்ளாதீர்கள், மூளைக்கு வேலைகொடுக்காதீர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
உண்மையில் நீங்கள் சொல்வதுபோல மூளையைச் சாட்டையாலடித்தாலொழிய மகிழ்ச்சியாக வாழமுடியாது. ஆனால் பழையபாணி டாக்டர்கள் நம்மை காய்கறி மாதிரி உயிருடன் ஃபிரிட்ஜில் வைத்திருக்கத்தான் முயற்சி செய்கிறார்கள்.
இந்தியாவில் ஒரு நடுத்தரவர்க்கச் சூழலில் வாழ்க்கை 60 வயதில் முடிந்துவிடுகிறது. இளைஞர்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய இளமையையாவது பயனுள்ளவகையில் செலவழிக்கவேண்டும்.
எம்.வரதராஜன்