வணக்கம் ஜெ! நலம் விழைகிறேன்.
உருது இலக்கியம் குறித்த அறிமுக வகுப்பில் உங்கள் மாணவ அருகாமை புதிய அனுபவமாக இருந்தது. நயந்தேன்.
உருது மொழி குறித்துப் பெரிதாக அறிந்திராத எனக்கு மொழியின் தோற்றம், இலக்கிய மரபு, ஆளுமைகள், மையங்கள் மற்றும் கடந்த எண்ணூறு ஆண்டுகளில் உருது அடைந்த பரிணாம மாற்றங்கள், போதாமைன்னு கிட்டத்தட்ட எல்லா பரிமாணங்களிலும் நினைவில் நிறுத்தி மேலும் தொடர போதுமான அடிப்படையைத் தந்தார் ஆசிரியர் ஃபைஸ் காதிரி.
சில கூறுகளை தமிழ்ப் பின்புலத்தில் பொருத்திப் பார்க்கவும் முடிந்தது.
அவுரங்காபாதி, தெகல்வி, வேலூரி என தனிநபர் பெயரோடு ஊர்ப்பெயரையும் சேர்த்துப் பழங்குதல்.
கஜல் போற்றப்பட்டு பிறகு சிற்றின்ப வெளிப்பாடு மிகுந்து செல்வாக்கு இழந்ததைப் பாணர்களோடு ஒப்பிட முடிந்தது.
முஜ்ரா நடனப் பெண்கள் தேவதாசிகளை நினைவூட்டினர். இருவரும் கலை மரபு தழைத்துத் தொடர மைய அச்சாக இருந்தவர்கள். சமூக இடர்களில் தயங்காது பங்களித்திருக்கிறார்கள். செல்வந்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள்.
கஜல் கண்ணிகளில் கடைசிக் கண்ணியில் பாடியவர் தன்னை அடையாளப் படுத்தும் மரபு தமிழிலும் இருந்தது. பாட்டுத் தொகுதிகளில் (பதிகம் முதலானவை) கடைசிப் பாடலில் பலன் கூறுமிடத்து ஆசிரியர் பெயரையும் சேர்த்தே உரைக்கும்.
இலக்கியத்தில் கஜல், கவ்வாலி, ருபாயி, உரைநடை, புதினம், புதுக்கவிதை, மர்சியா எனப்படும் இரங்கற்பா, ஹசீதா எனப்படும் புகழ்மாலை, ஹஜ்ஜோ எனப்படும் இகழ்மாலை, சிறுகதை, ஒரு பக்கக் கதைகள் என உருது இலக்கியம் தொட்ட வடிவங்கள் நிறைய. ஹசீதா மட்டுமே இறைவனைப் பாடுதல் (ஹம்த்), இறை தூதரைப் பாடுதல் (நா‘ அத்), பிற ஞானியரைப் பாடுதல் (மன் கி பத்– பாத் அல்ல) ன்னு வகைகளாக விரிகிறது.
அலிகர் முஸ்லீம் பல்கலையை நிறுவிய சர் சையது அகமது கான் உருது உரைநடையின் துவக்கப் புள்ளியாக இருந்தது மட்டுமன்றி அன்றைய தில்லியின் முகலாயர் கட்டிடங்களை வரைந்து ஆவணப் படுத்தும் அரும்பணியையும் செய்தார் என்பதும் தன் தொலைநோக்குப் பார்வையை நடைமுறைப் படுத்துவதில் எதிர்பவர்களை அரவணைத்த படியே தனித்து நின்று காட்டிய உறுதியும் மெய்சிலிர்க்க வைப்பவை.
உருது இலக்கியத்தில் மிக முக்கிய காலகட்டமான 1857 அண்மைக் காலம் போல் ஒரு நெருக்கத்தைத் தந்தது. அந்தளவு தகவல்களைத் தந்தார் ஆசிரியர்.
ஆசிரியர் ஃபைஸ் காதிரி தேர்ந்த இசை ஞானம், கவிதை எழுதுதல், எழுத்து வரைதல் (calligraphy) என பன்முகத் திறமை பெற்றவராக இருந்தது உருது மொழியின் கஜல், கவ்வாலி வகைகளை விளக்கும் போதும் உருது எழுத்துகள் சொற்களால் ஆனதை விளக்கும் போதும் புரிந்து கொள்ளப் பேருதவியாக இருந்தது. ஒட்டகம் என்னும் பொருள் தரும் ஜா(மல்) எழுத்திலிருந்து ஒட்டகத்தை வெளிப்படுத்திய போது கஜலின் ஈற்றுச்சீர்களுக்கு எழுவதை ஒத்த ஆகாகாரம் வகுப்பை நிறைத்தது.
பயன்படுத்தப் பட்ட காணொலிகள் கஜல், கவ்வாலி பாடப்படும் சூழலைப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. போலவே, முஷாயரி எனப்படும் கவியரங்கங்களும். தேவைப்படும் இடத்தில் தானே பாடியும் எழுதிய கவிதைகளைப் படித்தும் விளக்கினார்.
மெல்லிய நகைச்சுவைத் துணுக்குகளின் ஊடாக வகுப்பை நடத்திய ஆசிரியர் காட்டிய பொறுமையும் வகுப்பைக் கையாண்ட நிதானமும் அருமை. ஆசிரியருக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் மீது இருந்த பெரும் பற்று வகுப்பு முழுவதும் வெளிப்பட்டவாறே இருந்தது. தன்னை எவ்வாறெல்லாம் தூண்டிச் செயல்பட வைத்தார் என்பதைப் பொருத்தமான தருணங்களில் கோர்த்துச் சொன்னார். தமிழைப் பொருத்த வரை உருது மொழியாக்கங்களே பெரும்பணியாய் இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை, வாணியம்பாடி, மேல்விஷாரம் மற்றும் கோவையில் சிற்சில உருது மொழி சார்ந்த செயல்பாடுகள் தொடர்வதாகச் சொன்னார். ஒரு வட்டம் அமையுமானால் உருது இலக்கியத்தில் ஒரு சுற்று வரலாம்.
வகுப்பில் பகலில் உணரும் வெப்பம் இன்னும் சில நொடிகளில் வியர்க்க வைக்கும் எனத் தோன்றும் போது சட்டென வீசும் புறக் காற்றில் அவ்வெப்பம் மறைந்து லேசான குளிர் பரவுவது அடுத்து எப்ப என உள்ளம் எதிர் நோக்கும் மேஜிக். மணி அண்ணன் குழுவினரின் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.