சோழர்கள் – கடிதம்

ஆசிரியருக்கு,

சோழர்களின் பண்பாட்டு கொடை காணொளி ,சோழர் காலத்திற்கும் கன்னியாகுமாரி மாவட்டத்திற்கும் உள்ள ஆட்சித்தொடர்பை தெளிவு படுத்தியது.குமரி மாவட்ட ஏரிகள் சோழர் காலத்தில் வெட்டப்பட்டது என்பது அறியப்பட வேண்டிய வரலாறு.கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக மராமத்து பணிகள் எதுவும் இல்லாமல் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை கன்னியாகுமாரி மாவட்டம் மட்டுமல்லாமல் எல்லா மாவட்டங்களிலும் பார்க்கிறோம்.அரைகுறை வராலாற்று அறிவு ஆபத்தானது மட்டுமல்லாது அபத்தமானதும் கூட. .பிரம்மணிகளை , பிராமணர்கள் என்று தவறாக கல்வெட்டுகள் மூலமாக புரிந்து கொண்டு அந்த இனத்தின் மீது காழ்ப்புணர்ச்சியை உருவாக்கியது  ஒரு வரலாற்று பிழை.

சோழர் காலத்தில் வேளாளர்களின் வாழ்க்கை வேளாண்மை சார்ந்ததாக இருந்தது, வேளாண்மை செழித்து வளர்ந்தது, அதிலும் காழ்ப்புணர்ச்சி.சைவத்தை தவறாக புரிந்து கொண்டு அதையும் காழ்ப்புணர்ச்சியால் நல்ல பல ஆகம கருத்துக்களை இழந்து வருகிறோம்.காபாலிகள்,லிங்காயத்துகள், பாசுபதம் போன்ற சைவ குழுக்களை (Cult)ஒன்று படுத்திய சோழ மன்னர் இராஜராஜசோழனை நினைவு கூற மறந்து விட்டோம். சிதம்பரம் கோவில் தனிப்பட்ட சிவ ஆகமம் என்பது புதிய செய்தி.கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் சோழர்களின் பண்பாடு ஆகமங்கள் முலமாக நிலை நிறுத்தப்பட்ட வரலாறு மிக மிக்கியமான ஒன்று.சோழர்கள் ஆட்சி குமரி மாவட்டத்திற்கு இட்டுச்சென்ற பண்பாட்டு கொடை என்றும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

நாட்டாரியல் ஆய்வாளர். .கா.பெருமாள், குடவாயில்.பாலசுப்பிரமணியம், டாக்டர்.கே.கே.பிள்ளை இன்னும் எத்தனையோ உண்மையான வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை மீட்டு, வரும் தலைமுறையினருக்கு வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில்  சுருங்கி  கொண்டிருக்கும் ஏரி,குளம்,குட்டை,ஆறு இவைகளை பாதுகாக்க முழுமையறிவு போன்ற அமைப்புகள் தேவை.ஆனால் இன்றைய அரசு நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இவற்றை கண்டு செயல்பட வேண்டும்

சோழர்களின் கொடை விலைமதிப்பற்றது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு கடல் போன்ற கணியாகுளம் ஏரியில் நண்பர்களுடன் குளித்த ஞாபகம் வருகிறது. முன்னோர்களின் பண்பாட்டு கொடையை பராமரிக்க வேண்டியது நமது கடமையும் கூட.விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி.

தா.சிதம்பரம் 

முந்தைய கட்டுரைஉருது அறிமுக வகுப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைபௌத்த தியானம்- விபாசனா தொடக்கப் பயிற்சி