திரு ஜெ.
முதன்முறையாக மேடையுரையின் அறிவிப்பின் போதே பதிவு செய்ய முயற்சித்தேன் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாமல் போனதும் எதையோ இழந்தது போல தோன்றியது.
பல கூடுகையின் போது நண்பர்கள் கேட்கும் போது தங்கள் அளித்த பதில் மேலும் அதிர்ச்சியூட்டியது. நண்பர்கள் குறைந்த அளவில் கலந்து கொண்டதாலும் அதன் சரியான பலனை உணராமல் இருப்பதால் இனி அம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்ற போது மனம் நொந்தேன். இனி இப்படி ஒரு வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும் எனவும் ஏங்கினேன்.
நண்பர் சுந்தர பாண்டியன் மேடையுரை பயிற்சிக்காக அறிவிப்பை குழுவில் வெளியிட்டவுடனே நானும் வருவதாக பதிவு செய்தேன் . நமக்கு நல்ல வாய்ப்பு என்ற முடிவுக்கு வந்தேன்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மாதா மாதம் நடத்தும் கூட்டங்களில் (நாவல்களை முன்வைத்து) தடையின்றி பேசும் எனக்கு மிகுந்த மகிழ்சியளித்தது தங்களின் அறிவிப்பு. முதல் நாள் மாலையே மலைத் தங்குமிடத்திற்கு வந்துவிடும் வழக்கப்படி நானும் எனது நண்பர் KJ .அசோக்குமாரும் வந்து சேர்ந்தோம் . மறுநாள் நீங்கள் பயிற்சி ஆரம்பிக்கும் வரை ஒரு வித எதிர்பார்பும் அதிகரித்தபடி இருந்தது.
ஆரம்பித்ததும் விளக்கம் கிடைத்ததும் தடுமாறிப்போனேன்.
வழக்கம் போல பேசுபவர்களின் பேச்சையும் , நாவலின் உள்ளடக்கம். சிறுகதைகளின் மையக் கருத்தை வைத்துக் கொண்டு பேசுவதும், நாவல்களை பற்றி பேசுபவர்களின் பேச்சை கேட்டதால் அந் நாள்வரை அதுதான் சரியென்றிருந்தேன். நீங்கள் விளக்கிய பிறகே புரிந்தது நான் இன்னும் ஆரம்பநிலையிலிருப்பதை.
முதல் நாள் என் முறை வரும் வரை பேசியவர்களின் பேச்சும் எனது உரைக்கான தயாரிப்பும் நீங்கள் சொன்னவிதம் அமையவில்லை. பேச்சும் உங்களின் அருகாமையும் பெரிய கூட்டத்தில் வரும் பயவுணர்வும் என்னால் ஐந்து நிமிடம் முழுமையாக பேச இயலாமல் போனது . நீங்களும் அடுத்த முறை சரியாக தயார் செய்யுமாறு அறிவுருத்தினீர்கள். பதற்றம் குறையவே நீண்ட நேரமாயிற்று.
இது எனக்கு முற்றிலும் புதுமையாக இருந்தது. புத்தகத்தில் படித்ததை, கேட்டதை வைத்து எனக்கு தோன்றியதை வைத்து பேசிக் கொண்டிருந்ததை அறிந்து வெட்கமடைந்ததோடு சரியான முறையில் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளவில்லை என்றறிந்தேன்.
இரண்டாவது வாய்ப்புக்காக நான்கு Idea க்களை யோசித்தும் ஒவ்வொரு Idea வுக்கும் மூன்று நான்கு பக்கங்கள் எழுதிய போதும், நீங்கள் சொன்னபடி வரவில்லை பதற்றமும் பயமும் கலந்து மேலும் தடுமாறி ஸ்தம்பித்தேன். ஒன்றும் தோன்றவில்லை, நேரம் நெருங்க நெருங்க எங்கே எதுவும் செய்யாமல் மீண்டும் மாட்டிக் கொள்வேனோ என்ற பதற்றம் தொற்றியது.
இறுதியாக ஆப்ரிக்க மொழிபெயர்ப்பு சிறுகதை. (ஆக்டோபஸின் பேத்தி – மொழி பெயர்ப்பு லதா அருணாசலம்) தாய்மைத் துறப்பு என்ற கதையை எடுத்துக் கொண்டு , எனதுரையை அதன்படி நிகழ்த்தலாம் என்று கடைசியாக முடிவுக்கு வந்த போது இரவு நெருங்கி எனது முறை மறுநாள் காலை என்றதும் பதற்றம் சற்றே குறைத்தது. இரவு தூங்கும் வரையும், காலை நிகழ்ச்சி துவங்கும் வரையும் ஒன்றும் தோன்ற வில்லை.
இது போல நிகழ்வது எனக்கு இதுவே முதல் முறை யோசித்தலின் மூலம் எனது பொதுவான நிலை புரிந்தது. நீங்கள் சொன்ன சிந்தித்தலின் முறையில் மீண்டும் மீண்டும் முயன்றேன் . கடைசியாக என் முறைக்கு கொஞ்சம் முன்னதாகத்தான் Idea கிடைத்தது . மேலும் அதை என்னுள்ளே விவரித்தலின் முறையிலும் முடிவும் செய்ய நேரம் இல்லாமலானது எனது பதற்றம் கூடிவிட்டது. நிச்சயமாக ஒன்று சொல்வேன் மேடையுரை என்றதும் பேச்சு மட்டும் என நினைத்தேன். நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிந்தது இது சிந்தித்தலின் முறை என .
எனது முறை வந்த போது ஆரம்பத்தில் சிறுகதை முழுவதும் சுருக்கமாத சொல்லி அதன் பிறகு பேச்சை நீடிக்கலாம் என்று முடிவும் செய்து பேச ஆரம்பித்ததும் பதற்றமும் பயமும் உங்கள் அருகாமையும் சேர்ந்து என்னை குழப்பியது சொற்கள் இயல்பாக வர மறுத்தது. தங்களின் அறிவுறுத்தலால் பாதியில் நின்ற என்னை மேலும் முடிந்தவரை உங்கள் கருத்தை சொல்லிவிடுங்கள் என்ற போது கொஞ்சம் உத்வேகம் வந்து உரையை நிறைவு செய்தேன் ஏழு நிமிட உரையை 5 நிமிடத்திலேயே முடிந்தது . ஏமாற்றம் அளித்தாலும் ஆசானின் அன்மையின் காரணமாக சிந்தித்தலின் முறையும், எனது சொந்த கருத்தை புதிய முறையில் எப்படி எழுதுவது, பேசுவது என்றறிந்தேன் . அறிவார்ந்த சபையில் உரையாடுவதற்கு எப்படி உரையை தயாரிப்பது, பேசுவது என தெளிவு படுத்தி வாய்பளித்தமைக்கு மிக்க நன்றி.
கலியபெருமாள்.
அன்புள்ள கலியபெருமாள்
இந்த பயிற்சியில் தொடக்கத்திலேயே அறிந்திருப்பீர்கள் இது ஒரு மேடைப்பேச்சுப் பயிற்சி மட்டும் அல்ல. மேடைப்பேச்சுப் பயிற்சிகளில் எப்படி வெளிப்படுத்துவது என்று மட்டும் சொல்லித்தருவார்கள். அது ஒருவகை நடிப்புக்கலைப் பயிற்சி. இது எதைப்பேசுவது என்றுதான் முதலில் கற்றுத்தருகிறது. ஆகவே இது அடிப்படையில் சிந்தனைப்பயிற்சி.
இந்தவகையான பயிற்சியில் முதலில் நிகழ்வது நம் சிந்தனையிலுள்ள குறைபாடுகள், சிக்கல்கள் ஆகியவை நமக்கே தெரியவருவதுதான். அது நமக்கு திகைப்பை அளிக்கிறது. வழக்கமான, அனைவரும் செய்யக்கூடிய அனைத்தையும் தடுத்துவிட்டு புதிய வழியில் உங்களுக்கேயான பாதையில் செல்லும்படி கற்பிக்கப்படுகிறது. அதை முயலும்போது திகைப்பும் தவிப்புமே உருவாகும். உடனே அங்கேயே சிந்திக்க ஆரம்பித்து அபார வெற்றியை அடைவதெல்லாம் அற்புதம் நிகழ்ந்தால்தான் சாத்தியம்.
நீங்கள் சிந்திக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதே பெரிய தொடக்கம். முட்டிமோதி, தயங்கி, முன்னகர்ந்து மெல்ல உங்களைக் கண்டடைவீர்கள். ஒரு தொடக்கம் நிகழ்ந்தாலே வெற்றிதான். முயற்சி தொடங்கினாலே அது வகுப்பின் நோக்கம் நிறைவேறியதுபோலத்தான். அந்த வழியில் தொடர்ச்சியாக முயன்றுகொண்டே இருப்பவர்கள் நினைக்கமுடியாத அளவுக்கு தொலைவுக்கு முன்னகர முடியும். பிறகு திரும்பிப்பார்க்கையில் இத்தருணம்தான் திருப்புமுனை என உணர முடியும்.
வாழ்த்துக்கள்.
ஜெ