வானமும் பறவைகளும்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,

வணக்கம். பறவை பார்த்தல் வகுப்பிற்கு நான் என் மகள் சஹானா மற்றும் மானவுடன் பங்கேற்றேன். இது எனக்கு மூன்றாவது வகுப்பு, குழந்தைகளுடன் முதல் வகுப்பு. ஆசிரியர்கள் ஈஸ்வர் மற்றும் விஜயபாரதி அவர்கள் வகுப்பை மிக இயல்பாக, நேர்த்தியாக நடத்தினார்கள். வகுப்பிற்கு பின் தோன்றியது, இயற்கையின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டிருந்தாலும், பறவை உலகு மிக அழகானது. பாடுவதில் தான் எத்தனை,எத்தனை விதங்கள். இசையை மனிதன் இயற்கையிடம் இருந்து பெற்றானெனில், மெல்லிசை நிச்சயம் பறவைகளிடமிருந்து!!

முன்பு அதிகாலைகளில், இயற்கை சூழல்களில், கேட்ட சிம்பொனியின் இசை உருவாக்கிகளை பற்றி பெரிதாக சிந்திக்காத மனது, மெல்ல விழித்து செவிகள் ஒலிகளை உள்வாங்கியது. யானைகுடில் அருகில் மலைகளை பார்த்த வண்ணம் அனைவரும் அமர்ந்திருக்க, ஒவ்வொரு இசையையும் அது வந்த திசையையும் ஆசிரியர் ஈஸ்வர் கைகாட்ட, செவிகள் ஒலியை பிரித்துணர தத்தளித்தது முதல்தரம். மெல்ல, மெல்ல பயின்றது ஒரு பேரனுபவம். அந்த இசை எனக்காக அரங்கேறியதோ என்று மனம் மமதையில் அரற்றியது

அப்படியெனில் இத்தருணத்திலும், அங்கே அரங்கேறி கொண்டிருக்கும் இசையை கேட்பது யாருடைய செவிகள்

இன்று காலை கணவருடன் நடைபயணம். மழைக்குபின் சென்றதால், எங்கும் அழகான பச்சை. Oriental magpie robin எனும் குண்டுகரிச்சான், common iora எனும் மாம்பழ சிட்டு, குயில் முதலியவற்றை இங்கு முதல் தடவையாக கண்டோம். குண்டுகரிச்சான் தன் சின்ன அலகை திறந்து பாடவும் செய்தது.

அங்கே அனைவரும் புற்களின் ஒலி கேட்கும் அமைதியில் நீண்ட நேரம் அது பாட கேட்டு அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அந்த அமைதியை அடைய ஆசிரியர்களின் பொறுமை நிறையவே சோதிக்கபட்டிருக்கும். அதன் பலனாய் 3 முதல் 70 வயது வரை அனைவருமாக இயற்கையுடன் தியானித்ததை போலிருந்தது

ஆசிரியர்கள் வகுப்பில் கேள்விகளுக்கு குறிப்பாக குழந்தைகளின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறினார்கள். விஜய பாரதி சார், ஒருமுறை கேட்டதும் குழந்தைகளின் பெயர்களை நினைவில் கொண்டு அழைப்பது,  குழந்தைகளின் வயதிற்கேற்ப பதில் கூறுவது அவர்களை முழுதாக வகுப்பில் இணைய செய்தது. கேள்விபதில்களின் போது கை உயர்த்தி, காத்திருந்து நான்கு வயது அமுதன் கூறிவது நிச்சயம் பறவையை பற்றிய அவனது ‘appreciative joy’. 

.கா: அந்த பறவ ரொம்ப… cuteஆ இருக்கு சார்.

பறவை பார்த்தலுக்கான நடைபயணத்தில் முதல் முறையாக ஓர் பறவையை பைனோகுலரில் பார்ப்பது, தங்களை மறந்து சிலாகிப்பது அனைவரும் ஒன்றென   உணரசெய்தது. சிறுவயது முதல் பைனோகுலர்ஸ் பற்றி அறிந்திருந்தாலும், இவ்வளவு உணர்வு பூர்வமாக உபயோகித்த நினைவில்லை

ஓர் இடத்தில் அனைவரும் கீழே தெரியும் ஊரை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க, ஈஸ்வர் சார் பேசியது அனைவரும் நீண்ட நேரம் அமைதியாக, அனைத்தையும் பார்த்து, இயற்கை சூழலுடன் இணைய, தன்னை உணர உதவியது.

பறவைகளின் வாழ்விடங்கள், உணவு, பறக்கும் முறைகள், பாடல்கள், இணைகள், வண்ணங்களில் தான் எத்தனை, எத்தனை வேறுபாடு. பறவை இனங்களுக்குள் உள்ள நுட்பமான வேறுபாடுகளும் அதிசயிக்க வைத்தது

பறவைகளின் உலகை ஆராய்ந்த இந்திய ஆளுமைகள் சலீம் அலி, . ரத்தினம், எம். கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை குறிப்பின் பல சுவாரஸ்யமான தகவல்களை ஆசிரியர்கள் பகிர்ந்தது, அவர்களை பற்றி அறிய புத்தகங்களை வாங்கி, வாசிக்க தூண்டியது

பறவை பார்த்தலுக்கு முன் என் குழந்தைகளுக்கு பெரிதாக அறிமுகம் இல்லை. என் மகள் இவ்வகுப்பிற்கு முன்னரே வந்திருக்கலாம், சென்ற மலை பிரதேச சுற்றுலாவில் பறவைகளை தேடி, கண்டு ரசித்திருக்கலாம் என்று கூறினாள். திரும்பிய அடுத்த இருநாட்களும் பறவை பார்க்க அருகில் உள்ள இடங்களுக்கு சென்றோம். இப்போது அவர்களின் பாட்டி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள், என் மகன் அங்கு பார்க்கும் பறவைகளை தினமும் ஆர்வமுடன் பகிர்கிறான். பறவை பார்த்தல் எங்களுக்கு இனிய தொடக்கமாக அமைந்துள்ளது

பறவை உலகை அறிமுகம் செய்து கற்பித்த ஆசிரியர்களுக்கும், பொறுமையுடன் ஒருங்கிணைத்த மணி அண்ணாவிற்கும், இதை வகுப்பாக முன்னெடுத்த தங்களுக்கும் நன்றிகள்.

நன்றியுடன்

ப்ரீத்தி

முந்தைய கட்டுரைகுழந்தைகளுக்கு மேலும் பயிற்சிகள்
அடுத்த கட்டுரைகட்டணத்தை திரும்பப்பெறுதல்