அன்புள்ள ஜெயமோகன்,
பறவை பார்த்தல் நிகழ்ச்சி பற்றி சிறுவர் மற்றும் சிறுமியர் எழுதிய கடிதங்களைப் பார்த்தேன். நானும் சென்றமுறை பறவை பார்த்தல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். சிறுவர்கள் இந்நிகழ்ச்சிகளை மிகுந்த ஆர்வத்துடன் ரசிப்பது தெரிந்தது. இன்றைய சூழலில் சிறுவர்களின் இணைய அடிமைத்தனத்தைப் போக்குவதற்கான முக்கியமான வழி என்பது இயற்கையுடன் அவர்களை இணைப்பதுதான். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதைத்தான் செய்கிறார்கள். இதற்காக அங்கெல்லாம் பறவைபார்ப்பது, கற்கள் சேகரிப்பது, தாவரங்களை அறிவது போல ஏராளமான வகுப்புகள் நிகழ்கின்றன . இங்கே அதையும் வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள். பெரும்பாலான கோடைகால வகுப்புகள் மோசடிகள் என்று ஒருவர் எழுதியிருந்தார். அது உண்மை. எனக்கும் பல கசப்பான அனுபவங்கள் உண்டு. நீங்கள் மேலும் குழந்தைகளுக்கான வகுப்புகளை ஏற்பாடு செய்யலாமே? இன்றைய அவசியத்தேவை இது.
மீனாக்ஷி சண்முகசுந்தரம்
அன்புள்ள மீனாக்ஷி
இத்தகைய நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நிகழ்த்த எங்களுக்கும் ஆர்வமும் திட்டமும் உள்ளது. இயற்கையை அறிவதும் ஆவணப்படுத்துவதும் மட்டுமல்ல நம் ஆலயங்களை ஆவணப்படுத்துவதும், பண்பாட்டை ஆவணப்படுத்துவதும் முக்கியமான பணிகள். அதற்கான காணொளிப் பதிவு, எடிட்டிங், லைட்டிங் போன்றவற்றைக்கூட 10 வயதுக்குள் இருந்தே குழந்தைகளுக்குக் கற்பிக்க முடியும். அது அவர்களைச் செயல் சார்ந்து குவிய வைக்கும். இணையம் உருவாக்கும் கவனச்சிதைவில் இருந்து காப்பாற்றும்.
ஆனால் இதை பெரிய அளவில் பங்கேற்புடன் செய்யமுடியாது. சரியாகச் செய்யவேண்டும் என்றால் 50 குழந்தைகளுக்குள் மட்டுமே வகுப்புகளில் இடம்பெற முடியும். ஆகவே பல வகுப்புகளை நடத்தவேண்டும். சிக்கல் என்னவென்றால் இங்கே பள்ளிக்குழந்தைகளை பள்ளி நாட்களில் வீட்டுப்பாட அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். சனி ஞாயிறு ஒரு நாள்கூட விடுமுறை எடுக்கவோ பயணம் செய்யவோ முடியாது. கோடைவிடுமுறை, டிசம்பர் விடுமுறை காலங்கள் தவிர இவ்வகுப்புகளை நடத்தவே முடிவதில்லை.
மற்ற நாட்களில் நடத்தமுடியும் என்றால் நல்லது. பெற்றோரின் மனநிலையும் ஒத்துழைக்கவேண்டும்.
ஜெ