பொருட்படுத்தவேண்டியவை

அன்புள்ள ஜெ

உங்கள் மீதான வசைகளை நான் இணையத்தில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இத்தனை காழ்ப்பு வரும்படி நீங்கள் அப்படி என்னதான் சொல்லிவிட்டீர்கள் என்று யோசிப்பேன். சிலரிடம் கேட்டும் பார்த்திருக்கிறேன். ஏன் திட்டுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் ஒரு சங்கி என்றார். சரி, ஏன் அப்படிச் சொல்கிறீர்கள், என்ன வாசித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் உங்களை அதேபோல வசைபாடிய இன்னொருவரின் கட்டுரையை மேற்கோள் காட்டினார்.

நான் நீங்கள் எழுதிய திசைகளின் நடுவே, மாடன்மோட்சம், மலம் போன்ற கதைகளின் கருக்களைச் சொன்னேன். இதை ஒரு சங்கி எழுதுவாரா என்று கேட்டேன். இன்னொருவர் நீங்கள் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர் என்றார். நான் நீங்கள் எழுதிய நூறுநாற்காலிகள் கதையைச் சொன்னேன். ஒருவர் நீங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்றார். நான் நீங்கள் எழுதிய அலை அறிந்தது, சோற்றுக்கணக்கு கதைகளைச் சொன்னேன்.

எந்தக் கதையையுமே எவருமே படித்ததில்லை. ஆனால் வெறுப்பை மட்டும் திரட்டிவைத்து திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த ஆவேசம் ஆச்சரியமாக இருக்கிறது. அதன்பின் ஒன்று தெரிந்தது. இது என் ஊகமாகக்கூட இருக்கலாம். உங்களை வசைபாடிய ஒருவர் குடிநோயாளி. இன்னொருவர் பாலியல் ஒழுக்கச் சிக்கலால் ஏகப்பட்ட குடும்பப்பிரச்சினை உடையவர். இன்னொருவர் சினிமா, வியாபாரம் என பல இடங்களில் முட்டி மோதி தோற்றவர்.

உங்கள் ஆளுமைதான் அவர்களுக்குச் சிக்கல் என நினைக்கிறேன். உங்களுடன் தங்களை ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள். அது அளிக்கும் கொந்தளிப்புதான் பிரச்சினை. காரணங்கள் எல்லாம் முக்கியம் அல்ல. நீங்களே ஒன்று கவனித்திருக்கலாம். பாலியல் ஒழுக்கப்பிரச்சினை கொண்டவர்கள்தான் உங்களை வசைபாடிக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் எப்படியோ அவர்களுக்கு ஒரு சிக்கலை உருவாக்குகிறீர்கள். அவர்களுக்கு எதிராக ஒரு ஜட்ஜ்மெண்டை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் பாலியல் ஒழுக்கத்தைக் கொண்டு ஒருவரின் பங்களிப்பையும் சாதனையையும் மதிப்பிடக்கூடாது என்று மிக உறுதியாக இருப்பவர் நீங்கள். ஆனால் அவர்களுக்கு அது சிக்கலாக இருக்கிறது என நினைக்கிறேன்.

இந்த வசைகளை நீங்கள் பொருட்படுத்தாமல் செயலே வாழ்வு என்று இருப்பதும் அவர்களுக்கு பெரிய சிக்கலாக இருக்கிறது. அப்படிப்பார்த்தால் இந்த கும்பலைப் பார்த்து பரிதாபமே வருகிறது. வாழ்க்கை முழுக்க இந்த பொசுங்கலிலேயே முடிந்துவிடும் இவர்களுக்கு என நினைக்கிறேன்.

நான் இந்தக் கடிதத்தை எழுதுவது ஒரு விஷயத்துக்காகவே. நான் ஐந்தாண்டுகளை இந்தக் கும்பலின் கருத்துக்களை தெரிந்துகொள்வதற்காகச் செலவிட்டேன். நம் சூழலில் உள்ள எல்லா தரப்பையும் தெரிந்துகொள்வது அவசியம் என்று நினைத்தேன். இதெல்லாம் சிலருடைய தனிப்பட்ட மனச்சிக்கல்கள் என்று தெரிந்தபோது அடச்சே என்று ஆகிவிட்டது. இன்றைய வாசகர்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கக்கூடாது. இவர்களிடம் ஏதோ ஒன்று சொல்வதற்கு இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. இவர்களிடம் ஒன்றுமே இல்லை என்பதெ உண்மை.

நான் இன்றைக்கு பார்ப்பது ஒரே ஒருவிஷயத்தைத்தான் .உருப்படியாக, பொருட்படுத்தும்படியாக ஏதாவது எழுதியிருந்தால் ஒழிய ஒருவரை ஒரு பொருட்டாகவே நினைக்கவெண்டியதில்லை. என்ன எழுதப்பட்டுள்ளது, அதன் தரம் என்ன என்பது மட்டுமே முக்கியம். எழுதாதவர்களின் கருத்துக்கள் கருத்துக்களே அல்ல, வெறும் ஓசைகள்தான்.

ரா. சிவராமகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைவெள்ளிமலையின் வெண்ணிலா நாட்கள்
அடுத்த கட்டுரைவேதங்களை அறிய…