வெள்ளிமலையின் வெண்ணிலா நாட்கள்

அன்பிற்கினிய ஜெ..,

வணக்கம். வெகுகாலம் காத்திருந்து, எதிர்பார்த்திருந்து, ஏங்கிக்கிடந்த வெள்ளிமலை வகுப்புகள், அழகிய ஆராதனை என கனிந்தமைந்த, அந்த அற்புத நாட்களைப்பற்றியே இந்த கடிதம்.

2013 ல், குவைத்தில், பொங்குதமிழ் நிகழ்சிச்சியில்  உங்களை சந்தித்தது. அதன் பின் காணொளிகள் மட்டுமே கண்கள் கொண்ட பேறு. விரல் பற்றி எம்மை செயல் நோக்கி அழைத்துச்செல்லும் மாயக்கரம் அவை.

சிறு தோழியர் குழாமுண்டு குவைத்தில், உங்கள் காணொளிகளை பற்றி விவாதிக்கவம் சிலாகிக்கவும். unified wisdom  அறிவிப்புகளை பார்க்கும் போதெல்லாம் தவிப்பாக தான் இருக்கும், கிட்டாத மாமணி, எட்டாத எழில் நிலவோ அவையென.. உள்ளுர உயிரூர ஆசைப்பட்டதை நல்லூழ் இழுத்து வந்தேத்தித்தந்தது. ஜூலை மாத வகுப்பிற்கு ஏப்ரல் மாதமே பதிந்துகொண்டேன், என் விடுமுறைக்குள் அமைந்து கிடைக்கும்,எந்த வகுப்பெனினும் நன்றெனத்தான் நான் நினைத்தேன். ஒரு துளி தேனையேனும் உள்நாக்கில் ஒட்டிக்கொள்ளவேண்டும்மென. எனினும் குருபூர்ணிமா ஆராதனையை ஒட்டி குரு.சௌந்தர் அவர்களின் வகுப்பு எனக்கு ஒரு வசீகர அழைப்பாகப்பட்டது.

மிகையில்லை. சிநேகத்தோடும் அன்போடும் அறிவார்ந்த சிந்தனைகளோடும் மரபார்ந்த அணுகுமுறையோடும்  நியமநீதிகளோடும் சரியான பாடத்திட்டதோடும் அமைந்தது எங்கள் யோக வகுப்பு. படிப்படியாக கைபற்றி ஏற்றிச்சென்று, பின்பார் அந்த பள்ளத்தாக்கின் அழகை என்பதை போல..முன்னமே நான் பயின்றிருந்த அதே யோகத்தின் மரபார்ந்த பார்வையொன்று கிடைத்தது.

ஆசிரியர்.சௌந்தர் அவர்கள் வகுப்பில் பேசியவற்றை பிசகாமல்  அப்படியே தொகுத்து கட்டுரையென வெளியிடலாம். செறிவான, நேர்த்தியான, மொழி வன்மை. வன்மையோடு கூடிய மைத்ரேய மென்மை. யோகம் ஏன் கற்கவேண்டும் என்று ஆரம்பித்து, எவரெல்லாம் கற்கலாம், எவரிடம் கற்கலாம், எப்போது கற்கலாம், எவையெவை தவிர்க்கலாம், யோக ஆயுர்வேத சார்பும் பிணைப்பும் என செறிவான அறிவார்ந்த அதே நேரம் இனிமையான அனுபவமாக அமைந்தன வகுப்புகள். தேநீர் இடைவேளைகள் கூட உரையாடல் பொழுதாகிப்போனது. ஆனபோதும், மூன்று நாள் வகுப்பிலும் சிறு சலிப்போ முக சுளிப்போ இல்லாமல் தன் மாணாக்கரை அன்பால் அணைந்து கொண்டார்.

மிகச்சரியான, நேர்த்தியான சுருக்கமான, எவரும் பயின்று பயன்கொள்ளத்தக்க யோக அசைவுகள், பிராணாயாமம், யோக நித்ரா என  நிறைவான தொகுப்பாக அமைந்தது ஒவ்வொரு வகுப்பும். ஒவ்வொருவரின் தனித்துவமான ஆயுர்வேத உடல் தன்மை அறிய, கேள்விபதில் படிவம் வழங்கப்பட்டது. அது சார்ந்த அறிவுரையும், தெரபியூடிக் யோக அறிவுரையும் தனிப்பட்டே தரப்பட்டது

அகம் விரிந்து அகலச் செய்த  அழகிய வெள்ளி மலையின் வெண்ணிலவு நாட்கள் எங்கள் மனதை விட்டகலாது.புதிய தோழிகள், சுத்தமான தங்குமடங்கள், சிறு நூலகம், சுவையான உணவு.. படைத்த பார்வதி அன்னைக்கும்,தயாரிக்க உதவிய மம்மன் அவர்களுக்கும், அனைத்திற்கும் மேலாய் வகுப்புகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் மணி அண்ணாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்

எத்தனை இக்கட்டில் மானுடம் இருப்பினும், அதைக் கடக்க உதவும் சொல், இந்த மலையில், சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மேகம் அதைத்தாங்கி உலகெங்கும் பொழியட்டும்.நிலவு அதை ஏந்தி நிலமெல்லாம் மிளிரட்டும்

நன்றி ஜெ. ஆசான் என்று  தங்களை அழைக்கக்கூடாது  என்பீர். ஆசான்களை அமர்த்தி அழகு பார்க்கும் அறவோர் நீவீர் வாழ்க.

என்றும் அன்புடன்

சலீகா சாகுல்.

முந்தைய கட்டுரைஎழுத்தும் விடுதலையும்
அடுத்த கட்டுரைபொருட்படுத்தவேண்டியவை