அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
எனக்கு இந்துஸ்தானி இசை கேட்பதில் ஆர்வம் இருந்தது. குறிப்பாக ஷிவ்குமார் சர்மாவின் சந்தூர் இசை மற்றும் பண்டிட் ரவிசங்கரின் சிதார் இசை மிகவும் பிடித்தமானது. ஆனாலும் கர்நாடக இசை என்பது எனக்கு மிகவும் சலிப்பூட்டக் கூடியதாகவே இருந்தது. அதற்கான காரணங்களும் அதை கடக்கும் வழிகளையும் ஆசிரியர் ஜெயக்குமார் இந்த வகுப்பில் விரிவாகக் கூறியது மட்டும் அல்லாமல் பங்கேற்பாளர்களை முதன்மையாக இசைக்குள் செலுத்தினார்.
நீங்கள் இப்போது கின்டர் கார்டனில் இருக்கிறீர்கள் ஆகவே தொடர்ச்சியான கேட்டல் பயிற்சி வழியாகவே இதற்குள் போக முடியும் என்றார். சங்கதி கமகம் போன்ற தொழில்நுட்ப சொற்களுக்குள் அதிகம் சென்று குழம்பாமல் பொறுமையுடன் கேட்டுப் பழகுவதற்கான பயிற்சி மிக முக்கியமானது என்றார் ஆசிரியர்.
நமக்கு நன்கு பரிச்சயமான திரைப் பாடல்கள் குறிப்பாக இளையராஜாவின் பாடல்களின் வழியாக நடத்திச் சென்றார். அது இதுவரை அறியாத ஒரு கோணத்தில் அந்தப் பாடல்களை கேட்கச் செய்தது. இதற்கு முன்பு உருது இலக்கிய அறிமுக முகாமில் கசல் மற்றும் கவ்வாலி பாடல்களின் மகத்தான அறிமுகம் ஒன்று ஃபயஸ் காதிரி அவர்கள் வழியாகக் கிடைத்தது. அதன் பிறகு நான் கசல் கவ்வாலி கேட்காத நாட்கள் என்பது மிகக் குறைவு.
அதே போல் கர்நாடக இசைக்குள் நுழைவதற்கான ஒரு திறவுகோல் கிடைத்துள்ளது. இப்போது இதுவும் என் தினசரி இசை கேட்டலின் ஒரு பகுதியாகிவிட்டது. என் இரும்புக் காதுகளுக்கு கர்நாடக மரபிசையைக் கேட்க சாத்தியப்படுத்தியமைக்கு உங்களுக்கும் ஜெயக்குமாருக்கும் நன்றி .
சிவக்குமார் ஹரி
சென்னை