வாசகன் என்னும் ஆணவம்

நான் வாசிப்பு அறிவியக்கம் ஆகியவற்றைப் பற்றிய எல்லா உரையாடல்களிலும் அச்செயல்பாடு பற்றிய ஓர் அகந்தை ,ஒரு மேட்டிமை மனோபாவம் அதில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம் என்பதைச் சொல்லி வருகிறேன். தமிழ்ச் சமூகத்தில் சொல்லி சொல்லி நமக்கெல்லாம் உருவேற்றப்பட்ட ஒன்று ‘பணிவுதான் உயர்ந்த பண்பு’ என்பது. எவ்வளவு பணிவை பாவ்லா செய்கிறோமோ அந்த அளவிற்கு நாம் நல்லவர்கள் என்று பரவலாக நம்பப்படுவோம். ஆகவே சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் கூட சிந்தனையையும் எழுத்தையும் கீழ்மைப்படுத்திப் பேசி தங்கள் பணிவைக் காட்டிக்கொள்ளும் ஒரு சூழல் உலகத்தில் வேறெங்குமின்றி தமிழகத்தில் மட்டுமே உருவாகி வந்திருக்கிறது.

இங்கே ஒரு தத்துவஞானி ’நான் எல்லாம் ஒன்றுமே இல்லை, தத்துவ சிந்தனை என்பதெல்லாம் எல்லாராலும் முடியும், தத்துவஞானிக்கும் சாமானியனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை’ என்று சொல்வாரென்றால் மட்டுமே இங்குள்ள பாமரர்களால் அவர் உண்மையான அறிஞர் என்று மதிக்கப்படுவார். ஏனென்றால் அவர் பணிவாக இருக்கிறார். ஆனால் விந்தை என்னவென்றால் இங்கே ஒரு செல்வந்தனிடம் பணிவு எதிர்பார்க்கப்படுவதில்லை அதிகாரம் உள்ளவரிடமும் பணிவு எதிர்பார்க்கப்படுவதில்லை. ஒரு செல்வந்தர் ஒரு நிகழ்வுக்கு ஐம்பது பேர் புடைசூழ பத்து கார்களில் சென்று இறங்கினால் அந்தக் கூச்சமின்மையின் வெளிப்பாடு எவருக்கும் உறுத்துவதில்லை. ஒரு சாதாரண அரசியல்வாதி எங்கு சென்றாலும் ஐம்பது கைத்தடிகளுடன் அரசனைப்போல எழுந்தருளுவது இங்கு அனைவராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையில் நம்முடைய மரபு செல்வமும் அதிகாரமும் இருக்கும்போது வரும் பணிவைப்பற்றி மட்டும் தான் பேசுகிறது. நேர்மாறாக ஞானமுடையவர்களிடம் இருக்கவேண்டியது ’வித்யாகர்வம்’ என்னும் ஞானத்தைப்பற்றிய பெருமிதம் என்றுதான் சொல்கிறது.

தமிழகத்தில் நாம் நேர் தலைகீழாகப் புரிந்துவைத்திருக்கிறோம். தமிழகத்துப் பாமரர்களின் பார்வையில் உண்மையில் அதிகாரமும், பணமும் தான் பெருமிதத்துக்கு உரியவை, அறிவு என்பது எந்த மதிப்பும் அற்றது. ஆகவே அறிவாளி தன்மீதே அந்த மதிப்பின்மையை வெளிப்படுத்தி பணிவே உருவாக இருக்கவேண்டும். செல்வந்தர்கள் இயல்பாகவே திமிராக இருக்கலாம் என்று பாமரர் எண்ணுகிறார்கள், அவர்களும் இருக்கிறார்கள். இந்த மடத்தனத்தை ஏற்றுத்தான் நம்முடைய எழுத்தாளர்களும் சிந்தனையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் போலிப்பணிவை எங்கும் நிறுவிக்கொண்டிருக்கிறார்கள்.

இச்சூழலில் இன்று ஒரு வாசகன் அடைய வேண்டிய பெருமிதம், நிமிர்வு பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில்  இன்று தமிழகத்தில் புத்தகம் வாசிக்கும் ஒருவன் லட்சத்தில் ஒருவன். மிக மிக அரிதானவன். அவனைச் சூழ்ந்து புத்தகத்தின் மேல் வெறுப்பு கொண்ட, அது முற்றிலும் பயனற்றது என்று எண்ணும் லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒரு சமூகத்தில் தனித்து நிற்பவன் மேல் இருக்கும் அழுத்தமென்பது மிக உச்சகட்டமானது. தமிழகத்தில் பெரும்பாலான புத்தக வாசிப்பாளர்கள் புத்தகத்தை ஒளித்துவைத்து மறைத்து வைத்துக்கொண்டுதான் படிக்கவேண்டியிருக்கிறது. குடும்பத்திலேயே புத்தக வாசிப்பை ஒளித்து வைப்பவர்களை எனக்குத் தெரியும். இச்சூழலில் ஒருவர் அதுபற்றிய பணிவையும் வெளிக்காட்டினார் என்றால் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் ஏறி அவர்மேல் அமர்ந்துவிடுவார்கள்.

ஒன்று, அவருக்கே தான் அரிதானவன், தமிழ்ச் சூழலின் அறிவியயக்கத்தைச் சார்ந்தவன் என்னும் பெருமிதம் இருந்தாகவேண்டும். அப்பெருமிதம் இல்லையென்றால் காலப்போக்கில் அவர் வாசிப்பை விட்டுவிடுவார்.  ‘ஆம், நான் வாசகன் . நான் உன்னைப்போன்றவன் அல்.ல உன்னைவிட ஒருபடி மேலானவன்’ என்று எங்கும் சொல்லும் நிமிர்வு இருந்தாலொழிய இன்று ஒருவன் அறிவியக்கத்தில் செயல்படவே முடியாது. அச்செயல்பாட்டை ஒருவன் ஒரு மீறலாக ,துடுக்காக வெளிப்படுத்திக்கொள்வதிலும் பிழையில்லை. அந்த திமிர் அவனை தன்னைச் சூழ்ந்திருக்கும் வாசிப்புக்கும் சிந்தனைக்கும் எதிரான பொதுமனோபாவத்திலிருந்தும், அதைத்தொடர்ந்து கூச்சமின்றி வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் அற்பர்களிடமிருந்தும் காப்பாற்றும்.

வாசிக்கும் ஒருவர் தன் குழந்தைகளும் வாசிப்புக்குள் வரவேண்டும் என்று எண்ணினாரென்றால் அக்குழந்தைகளுக்கும் இதே பெருமிதத்தை ஊட்டியாகவேண்டும் ’நான் இலக்கிய வாசகன். புத்தகங்கள் படிப்பவன் .அறிவார்ந்த தேடல் கொண்டவன். ஆகவே உங்கள் அனைவரையும் விட ஒருபடி மேலானவன்’ என்று ஒரு சிறுவன் தன்னுடைய தோழர்களிடம் சொல்ல முடிந்தானென்றால் அவன் வாசிப்புக்குள் நீடிக்கமுடியும். ஒருவேளை தன் நண்பர்களில் ஒருசிலரையாவது வாசிப்புக்குள் கொண்டு வரவும் முடியும். மாறாக தன்னுடைய வாசிப்பை கூச்சத்துடன் ஒரு பையன் மறைத்துவைத்தான் என்றால், அவனுடைய தோழர்கள் அவனை ஏளனம் செய்வதற்கு இடம் கொடுத்தான் என்றால், காலப்போக்கில் அவனும் அனைத்து சராசரிகளும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சில்லறை இணைய விளையாட்டுகளிலும் சமூக வலைத்தொடர்புகளிலும் சிக்கி மறைந்துவிடவே வாய்ப்பு.

இன்று தமிழ்ச்சூழலில் நாம் பயிரிட்டு எடுக்கவேண்டிய மிக அரிய மூலிகைச்செடி என்பது அறிவாணவம் தான்.

முந்தைய கட்டுரைஇலக்கியத்தைச் செயலாக்குதல்
அடுத்த கட்டுரைசென்னையில் ஓர் இலக்கியப் பயிற்சி முகாம்