அன்புள்ள ஜெ,
நான் உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என நீங்கள் எனக்கு கடிதம் அனுப்பிய பின் ஏறத்தாழ பதினோரு மாதங்கள் கழித்து இந்த கடிதம் எழுதுகிறேன். முதலில் உங்கள் கடிதத்தை பார்த்து சற்று திகைப்படைந்தேன். ஏனெனில், நீங்கள் சாதாரண கேள்விகளுக்கு கூட பொறுமையாக பதில் அனுப்புவீர்கள் என்பதை பார்த்திருக்கிறேன். இருப்பினும், உங்களை மேலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என நான் உடனே பதில் அனுப்பவில்லை. சில வாரங்களுக்கு முன், எவரை விலக்குவது என்னும் தலைப்பில் நீங்கள் ஒரு வாசகருக்கு பதில் கொடுத்திருந்தீர்கள்.
அதை படித்தபின் நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலிர்க்குப்பின் உள்ள நிர்வாக சிக்கல்களும், நியாயங்களும் எனக்குப் புரிந்தது. முதலில், என்னுடைய மன்னிப்பை உங்களிடம் கோருகிறேன். நான், பணம் திரும்ப அனுப்ப சொன்னதற்கு காரணம், எனது கணக்கை ஒருவர் குறித்து வைத்துக் கொண்டு இருப்பது சற்று கூடுதல் சுமை என்ற எண்ணத்தில்தான். நான் வர இயலாமல் போனதற்கு காரணம் எனது அலுவலக கடைசி நேர திட்டமிடாத ஒரு மீட்டிங்கினால் வந்த குழப்பம்.
நான் தினமும் உங்கள் கட்டுரைகளை படித்து உங்களை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். நான் கண்டிப்பாக எனக்கு பிடித்த வேறு வகுப்பு வரும்பொழுது, உங்களை தொடர்பு கொண்டு என்னை சேர்த்து கொள்ளுமாறு உங்களை வேண்டுவேன். அதுவரை உங்கள் இணைய பக்கத்துடன் எனது பயணம் தொடரும்.
நன்றி
அன்புள்ள
சிவா
அன்புள்ள சிவா
உங்கள் கடிதம் கண்டேன்.
பொதுவாக நம் சூழலில் ‘நடுத்தரவர்க்க பொதுமக்களை‘ எதிர்கொள்ளும்போதுள்ள சிக்கல் என்பது அவர்களின் முடிவில்லாத தன்னலம், முடிவில்லாத பணக்கணக்குகளை எதிர்கொள்வதுதான். அனேகமாக தினம் ஒருவரை அப்படி எதிர்கொள்ளவேண்டியிருக்கும். மிதமிஞ்சிய தனி வசதிகளைக் கோருபவர்கள், பேரம்பேசுபவர்கள் என. பொதுவாக ஒருவர் இத்தகைய கல்வி சார்ந்த இடத்தில்கூட பண விஷயத்தில் மிகக்கறாராக இருப்பார் என்றால் இந்த இடங்களை தவிர்ப்பதே அவருக்கும் நல்லது. ஏனென்றால் அத்தகைய மனநிலை கொண்டவரால் இலக்கியம், தத்துவம், கலை சார்ந்த தளங்களில் எதையும் உண்மையில் கற்க முடியாது. அவருக்கான இடம் இது அல்ல. அவர் தொழில்களில்தான் ஈடுபடவேண்டும். (வட்டித்தொழில் மிக உகந்தது) இதுவே கற்பிக்கும் எங்களுக்கும் உரிய மனநிலை. நாங்களும் ஆரம்பம் முதலே இதில் கறாராக இல்லை.
அண்மையில் ஒருவர் அவர் ஆசாரமானவர் என்பதனால் எங்கள் சமையற்காரர் எந்த சாதி என்று கேட்டிருந்தார். கோபம் வராமல் கையாள்வது கடினம். அதைவிட அப்படி அற்ப மனநிலை கொண்டவர்களை உள்ளே விடாமல் இந்த அமைப்பை கொண்டுசெல்லவேண்டும் என்பது மேலும் முக்கியம். அவர்கள் வைரஸ் போன்றவர்கள். பிறருக்கும் நோய் பரப்புவார்கள். ஆகவே கடுமையாகவே அவர்களை விலக்குகிறோம். அவர்களை ‘திருத்த‘ முடியாது, அவர்கள் கெட்டிதட்டிப்போனவர்கள். அத்தகையவர்களை கறாராக விலக்குவதே சரி என்னும் கொள்கையால்தான் எங்கள் அமைப்பு இத்தனை தீவிரமாக நீடிக்கிறது, வெற்றியடைகிறது.
உங்கள் கடிதத்தில் எழுதியதை புரிந்துகொண்டேன். நீங்கள் தொடர்ந்து எங்கள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம்.
ஜெ