நம் பேச்சுக்கள் ஏன் இப்படி இருக்கின்றன?

அன்பிற்குரிய ஆசிரியருக்கு

இன்றைய சூழலில் கோர்வையாக பேசும் ஒருவரை காண்பதென்பதே அரிதினும் அரிதாகவே உள்ளது. காரணம் பெரும்பான்மையோர் யாரும் வாசிப்பதில்லை. அப்படி வாசிப்பு இல்லாத ஒருவரிடம் அதிக நேரம் பேசுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. நண்பர்கள், சுற்றத்தார் ஆகியோரிடம் பேசும்போது எளிய நகைச்சுவைக்கு அப்பால் அங்கு அறிவாந்த உரையாடலே நிகழ்வதில்லை. அன்றாட அரசியல், சினிமா, உணவு பழக்கங்கள் ஆகியவையே மிகுதி. அதற்கும் அப்பால் நமக்கான ஒரு அறிவாந்த சுற்றத்தை அமைக்காவிடில் காலப்போக்கில் நாமும் சாமானியர்களாகிவிடுவோம். 

மேடையில் பேசுபவர்கள், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் உரைகள் ஆகியவையேனும் அறிவாந்த தளத்தில் இருக்குமாயெனில் அதுவுமில்லை. தங்கள் முன் இருக்கும் அவையை சிரிக்க வைத்தாலே தங்கள் உரை வெற்றி பெற்று விட்டதாக மேடைப் பேச்சாளர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். உயர் அதிகாரிகளோ தங்கள் உரையை கேட்பதற்காக இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள், அதுசார்ந்து சிறிதேனும் தேடி வாசித்திருக்கிறோமா, அவ்வுரையின் மூலம் ஒரு சிந்தனை பாய்ச்சலை அங்கு நிகழ்த்த முற்பட்டிருக்கிரோமா என்ற எந்த அக்கறையுடன் இல்லாமல் தங்கள் மனம் போன போக்கில் பேசுகிறார்கள்.பேசப்படும் விடயம் பத்து நிமிடத்திற்கு மேல் இராது எனினும் மற்ற நேரங்கள் அனைத்தும் நேரம் விரயமே. 

ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டு அதை தன் மனம் போன போக்கில் அசைபோடுவது சிந்தனையாகாது. அது வெறும் musing மட்டுமே(Random association of thoughts). சிந்தனை என்பது அதற்கு நேர் எதிராகவே இருக்க முடியும். கூர்ந்து கவனிக்கும் திறனும், நுண்ணிய வாசிப்பும், அதற்கிணையான உழைப்பும், பயிற்சியும் இல்லாத பட்சத்தில் சிந்தனை என்பது அவ்வளவு எளிதாக வரக்கூடிய விடயமல்ல என்பதை உங்களின் முதல் வகுப்பிலிருந்தே கவனித்து வருகிறேன். சத் தர்ஷனில் நடந்த எழு நிமிட உரை, வெள்ளி மலையில் நடந்த மேடையுரை வகுப்புகள் ஆகியவை எப்படி சிந்திப்பது? என்பதற்கான பயிற்சி வகுப்பாகவே பார்க்கிறேன்.மாலை நடை போகும் போது இயல்பாக நீங்கள் பேசுவதிலே ஒரு ஒழுங்கு இருப்பதை கவனிக்கிறேன். அவ்வளவு கோர்வையாக பேசுவதற்கும், சிந்திப்பதற்கும் நீண்ட பயிற்சி தேவை என்பதை உணர்ந்தேன். 

ஆனால் வகுப்பில் கலந்துக்கொள்ளும் அனைவரும் தொடர்ந்து வாசிக்கக் கூடியவர்களாக இருந்தும் அங்கு சிந்தனை நிகழாமல் போனதற்கு காரணம் நம் பள்ளி முதல் அதற்கான நமக்கு அளிக்கப்படவில்லை என்பதுதான்.ஆனால் மெல்ல அடுத்தடுத்த இந்திய தத்துவ வகுப்புகளில் நடந்த விவாதங்களில் (சாங்கியம் vs வேதாந்தம்), (சாங்கியம் vs நியாய வைசேசிகம்)என்னை மீறி அங்கு சிந்தனை நிகழ்ந்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. மண்டைக்குள் பெரும் பாறையாக இருந்த ஒன்று மெல்ல நகர்வது ஆனந்தமாக இருந்தது.

ஒரு உண்மையான thought தரக்கூடிய உவப்பிற்கு ஈடில்லை. ஒரு மெய்யான கல்வியென்பது நாம் எவ்வளவு உழைத்து எந்த அளவு அதற்கான கிளம்பி சொல்கிறோமோ அந்த அளவிற்கு நாம் நிறைவையடைவோம். அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தி,ஒரு மாற்று கல்வியை பெரும் உழைப்புடன் வெள்ளி மலையில் நீங்கள் வாரந்தோறும் விடாமல் நிகழ்த்தி வரும் வகுப்புகள் என்னை போன்ற இளைஞர்களுக்கு பெரும் வரவேற்கத்தக்கதாக உள்ளது. இத்தகைய மெய்யான கல்விக்கு நுழைவாயிலை ஏற்படுத்திய உங்களுக்கும், நண்பர்களுக்கும் என் வணக்கங்கள்

அன்புடன்

அசோக்

முந்தைய கட்டுரைஇந்து வெறுப்பை எதிர்கொள்வது