மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த வாரயிறுதியில் திரு. ஜெயக்குமார் அவர்கள் நடத்திய ஆலயக்கலை அமர்வில் கலந்துகொண்டேன்.

தடுத்தாட்கொண்ட நாதர் மீதான சுந்தரர் தேவாரத்தோடு திரு. ஜெயக்குமார் இந்த ஆலயக்கலை வகுப்பை ஆரம்பித்தார். பித்தா பெருமானே என அவர் குரலுயர்ந்த அந்தத் தருணம்,  பலவிதங்களில் அலைந்து கொண்டிருந்த சிந்தனையையும், மனத்தையும் தடுத்தாட்கொண்டது. அடுத்த மூன்று நாள்களும் எங்களை பக்தியால். பாரம்பரியப் பெருமைகளால், ஆலயக்கோட்பாடுகளால், சிற்ப மரபால், இசையால், நகைச்சுவையால் மற்ற எந்த உலகாதீயச் செயல்களுக்கும் கவனம் கொண்டு செல்லாமல் ஆட்கொண்டிருந்தார்.

ஓர் ஆசிரியரின் தனித்த குணமே எங்கும் தன் மேதைமையைத் திணிக்காமல், படிப்படியாக ஒரு சித்திரம் கண் முன் தோன்றுவது போலப் புள்ளி புள்ளியாக மாணவனை நகர்த்திச்சென்று அவனை கற்க விடுவதுதான் என்பதை உணர்ந்த நல்லாசிரியர். அவருடைய இந்த முதல் அமர்வின் கல்வித்திட்டம் அப்படித்தான் அமைந்தது.

சிதம்பர ரகசியத்தை மறைக்கும் மாய யவனிகையை தன் முதற்சொல்லாகக் கொண்டு வகுப்பைத் தொடங்கினார்.  திரையை விலக்கி மனத்தைக் குவிக்கும்போது உங்கள் கண்முன்னே ஆலயங்கள் என்னும் கலைப்பொக்கிஷங்களின் முழுமையான தரிசனத்தை நீங்கள் காணமுடியும் என்ற சிந்தனையை விதைத்தார். மிகச்சரியாக அந்த நொடியிலிருந்து, மூன்றாவது நாள் வகுப்பு முடியும் வரையிலும் மாயத்திரையைச் சிறிது சிறிதாக விலக்கி துலக்கம் தந்து கொண்டே வந்தார்.

ஆலயக்கலை என்பதுதான் வகுப்பின் ஒற்றை நோக்கம்தான் என்றாலும், ஒவ்வொரு படைப்பின் பின்னே உள்ள வரலாறு, அங்கே இருந்த கல்லின் இயல்பு, அவர்களுக்கு முன்னே இருந்த அரசகுலங்களின்அவர்கள் முன்னிறுத்திய கலையின் பாதிப்பு, அந்த அரசனின் ஆளுமை, அப்போதிருந்த காலத்தின் பின்னணி, இசை மரபு, சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்களின் கூறுகள்  சிற்பத்தில் ஏற்றப்பட்டது, நடன சாஸ்திரங்களின் பாதிப்புகள் எனப் பல்வேறு திசைகளிலிருந்தும் ஆதாரங்களை வெகு சுவாரசியமாக இணைத்துத் தொகுத்துக்கொண்டே வந்தார்.

இப்படிப் பல முனைகளிலிருந்து தகவல்கள் வந்தாலும், எந்தவொன்றிலும் எள்ளளவும் சோர்வில்லை. எந்தக்குழப்பமும் யாருக்கும் வரவில்லை. இதனைக் கற்றுக்கொள்ள இத்தனை வருடங்கள் தாமதமாகிவிட்டது என்ற ஒரே குறையைத் தவிர எல்லோருமே மகிழ்ந்து, திளைத்து வகுப்பில் இணைந்துகொண்டிருந்தோம்.

வெள்ளிமலை வகுப்புகளுக்கே உரிய, பாடம் நடத்தும்போது கேள்வி கேட்கக்கூடாது என்ற முதல் விதியைப் பழைய மாணவர்கள் யாவரும் கைக்கொண்டிருந்தோம். புதியவர்களுக்கு அது சற்று பழகாத ஒன்று என்பதால், அவர்கள் ஆர்வத்தால் நிறைய உப கேள்விகளையும், அதுவரைக்கும் தாங்கள் நினைத்த ஒன்று அங்கே இல்லையே என்ற சந்தேகத்தையும் உடனுக்குடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவற்றையெல்லாம் எந்தச் சுணக்கமோ, முகச்சுருக்கமோ இன்றி ஜெயக்குமார் புன்னகையோடு அணுகினார். ஏதேனும் நகைச்சுவை சொல்லி அதனை மடைமாற்றினார். அல்லது சுவாரசியமாக அங்கிருந்து இன்னொரு முடிச்சை ஏற்றி அதைக்கொண்டு அப்போது சொன்ன செய்திக்கு வலுவேற்றினார். ஒவ்வொரு தருணமும் மகிழ்வு கொள்ளக்கூடியதாக, கற்றலுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்தது.  

இரண்டாவது நாளில் வகுப்பைத் தொடங்குவதற்கு முன்னர் உத்தான சயனத்தில் வீற்றிருக்கும் சார்ங்கபாணியை எழுப்பும் திருமழிசையாழ்வார் பாசுரத்தையும், அவரே எழுதிய, திரண்ட தோள் கொண்ட இரணியனை இரண்டு கூறு செய்த குறுங்குடிச் சிங்கத்தைப் போற்றும் பாசுரத்தையும் பாடித்தொடங்கினார். (இரண்டு வெவ்வேறு பாசுரங்களை இணைத்து வெகு இனிமையான தொடர்ச்சியைக் கைக்கொண்டு பாடியது அற்புதமாக இருந்தது) முந்தைய நாள் பயணக்களைப்பினை இன்னும் உதறாத சக தொண்டர்களுக்கும், சிந்தனைத்தடை எனும் தூணை உடைக்க உள்ளிருக்கும் சிங்கத்தை எழுப்ப வேண்டும் என்ற கருத்தை அனைவருக்கும் உறைக்குமாறு அது இருந்தது.  

அவரே சொன்னது போல  நூற்றாண்டுகள் கடந்து காலப்பயணம் செய்து வைத்துக்கொண்டிருந்தார். உளிகளின் ஓசைகள், வேத கோஷங்கள், நாட்டியச்சந்தங்கள் அனைத்தும் முழங்க முழங்கப் பறந்துகொண்டிருந்தோம். ஒவ்வொரு வகுப்பிலும், படிப்படியாக விஷயத்தெளிவை விளக்கி விளக்கி பயணத்தை முழுமையாக அனுபவிக்க வைத்துக்கொண்டிருந்தார்.

மூன்றாவது நாள் பாடலாக மாணிக்கவாசகரின் ஞான நாடகத்திலிருந்த பாடலைத் தொடங்கினார். வெள்ளிமலையில் நிகழ்ந்து கொண்டிருந்த அந்த ஞான வேள்விக்குப் பொருத்தமான பாடலாக அது அமைந்தது. இறுதி நாள், சொல்ல நிறைய இருந்தும் , நேரக்குறைவையொட்டி நீண்ட நேர வகுப்பென்றாலும், வழக்கம்போலவே எதிலும் வேகமோ, அவசரமோ இன்றி ஆழ்ந்து பொருள் செய்துகொண்டிருந்தார். கடைசி மணித்துளியில் கூட, பதற்றமின்றி அவர் கேள்விகளை எதிர்கொண்டு, நகைச்சுவையைக் கைக்கொண்டு உரையாற்றி நிறைவு செய்தார்.

வகுப்பு முடிந்தவுடன், சில நிமிடங்களுக்கு நீண்ட அந்தக்கரவொலி அதற்குச்சான்று. (இது என்ன பொதுக்கூட்டமா, எதுக்கு இவ்வளவு நேரம் என்று அதையும் நகைச்சுவையோடு எதிர்கொண்டார்) மகிழ்வும், நிறைவுமாய் விடைபெற்று மலையிறங்கினோம்.  

தேவர் மலையைக் கடக்கும்போது இடதுபுறம் இந்தக் காட்சி தெரிந்தது. மலைகளுக்கிடையே மஞ்சள் கம்பளம் விரித்தாற்போன்ற மலர்வயல் அது. அதைப்பார்த்தவுடனேயே சட்டென மனமும் மலர்ந்தது. முதல் நாள் இருந்த அந்த மாய யவனிகைத் திரை கலைந்து உள்ளே இது போன்ற ஒரு ஞான மலர்த்திடல் மொட்டு விட்டிருப்பதை எண்ணி மனம் குதூகலித்தது. ஜெயக்குமாருக்கு இன்னொரு முறை மானசீகமாக இன்னொரு முறை நன்றி சொன்னேன்.

அன்புடன்

சிவராமன் கணேசன்

முந்தைய கட்டுரைநம் பேச்சுக்கள் ஏன் இப்படி இருக்கின்றன?
அடுத்த கட்டுரைஜெயக்குமாரின் இசை வகுப்புகள்