
வணக்கம் ஜெ சார்,
ஒரு நாள் தற்செயலாகத்தான் அது ஆரம்பமானது.
******
நித்யவன, தங்குமிட வாசலில், ஆதித்தியன், பிரபுவிடம், இருபது ஆண்டு கால மொளனத்தை கலைத்து ஜெர்மன்ஸ் கோர்சர் எனும் பறவை அழைத்த செய்தி, பறவைகளின் அழைப்பு மற்றும் பாடலை பிறித்தறிவது. உலகின் அதிக எடை கொண்ட பறக்கும் பறவையாக கானமயிலை (Great Indian bustard) சலீம் அலி, நமது தேசிய பறவையாக்க பரிந்துரைத்தது. பூனைப் பருந்தின் (harrier) கால்களில் GPS கருவி பொருத்தி அவற்றின் வாழ்விடங்களை ஆவணப்படுத்தி, பாதுகாக்க செய்யப்படும் முயற்சி என சொல்லிக்கொண்டிருந்தது.
பின்னால் திரும்பி பார்த்தால், தான் வரைந்த ஓவியங்களை உங்களிடம் காட்டிக்கொண்டிருதந்தவரிடம், கோவில் செதுக்கப்பட்டிருக்கும், அன்றாட மக்களின் வாழ்க்கை முறை சிலைகளை தேடிக் கண்டறிந்து ஓவியமாக்க சொல்லி, நாவலாசிரியருக்கு அது அளிக்கும் திறப்பை நீங்கள் விளக்கிக் கொண்டிருந்தது.
சில அடிகள், இறங்கி வந்தால், யோக நித்ரா பயிற்சியில் எடுக்கும் சங்கல்பம் குறித்த மோகன் ராஜின் கேள்விக்கு குருஜி பதில் அளித்துக்கொண்டிருந்தது.
மீட்டிங் ஹால் எதிரில், சாரதா தேவி/சரஸ்வதி தேவி சிலை வடிவம் குறித்து விஷ்ணு விவரித்துக்கொண்டிருந்தது.
நரசிம்ம அவதாரத்தின் உக்கிரத்தோடு, சஞ்சய் சுப்பிரமணியம் அவர்கள் பெங்களூருவில் பாடிய பாடல் அனுபவத்தை பிரபுஅசோகன் விவரித்தது.
கருவிலிருக்கும் போதே சாவ பார்த்துட்டதால நிழழ்கள் நாயக்கருக்கு சாவு பயம் இருக்காதுன்னு, தன்னோட கப்பல் அனுபவங்களிலிருந்து சாகுல் சார் சொன்ன கதாப்பாத்திர விளக்கம்.
*****
என, தத்துவ வகுப்பிற்கு வெளியே நடந்த உரையாடல்களை தொகுக்க ஆரம்பித்தது.
தற்செயலாகத்தான்.
குறிப்புகளை திரும்பி படிக்கையில், இரண்டாவது நாள் இரவில், திருக்கண்ணன் பாடிய ‘நான் கடவுள்‘ பட பாடலை மூன்றாம் நாள் முழுதும் முணுமுணத்துக் கொண்டிருந்த காரணம் புரியவில்லை என்று பிரபுவிடம் புலம்பியிருக்கிறேன்.
இன்று, அ.முத்துலிங்கம் அவர்களின் கறுப்பு அணில் சிறுகதையில் வரும் லோகிதாசன், வேலைக்கு செல்லும் வழியில், வாகன பாதுகாப்பு நிலைய வாசலில் பொறுக்கி சேர்த்த 48.19 டாலரை சந்தோசத்துடன் எண்ணிப்பார்க்கும் இடத்தை படிக்கையில், காரணம் புரிந்தது.
என் போத்தலில் சில்லரைகள் நிரம்ப ஆரம்பித்திருக்கின்றன!
சக்தி ராஜ்,
பாப்பான்குளம்.