தரிசனம், கடிதம்

ஜெ,

தரிசனங்கள் எளிமையானவை, தத்துவம் கடினமானது. தத்துவம் இல்லாமல் தரிசனம் அறிவுபூர்வமாக நிலைகொள்ள முடியாது. நீங்கள் உரையில் சொன்ன அக்கருத்து மிக முக்கியமான ஒன்று. நான் முதல்முறையாக வேதாந்தச் சிந்தனையை அறிந்தபோது ஒரு மணிநேரத்தில் அதன் சாராம்சத்தையே புரிந்துகொண்டவன் என நினைத்தேன். ஆனால் கற்க ஆரம்பித்தபோதுதான் எத்தனை பெரிய ஓரு பயணம் அது என்று புரிந்தது.

எட்டாம் வகுப்பில் படிக்கும்போது ‘புத்தர் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார்’ என்று படிப்போம். அப்போது இது என்ன பெரிய தத்துவம், இதை நானும் சொல்வேனே என்று தோன்றும். அதை கேலியும் செய்திருப்போம். ஆனால் பௌத்தம் பயிலும்போதுதான் பௌத்தக்கருத்தான திருஷ்ணை (திருட்டினை) என்பது எவ்வளவு பெரிய கருத்து என புரிந்தது. எந்த வகையான கைவிடப்பட்ட நிலையிலும் நம் மனம் இன்பத்தை நாடுவதே திருஷ்ணை. நம்முள் இருந்து ஓயாமல் தூண்டியபடி இருக்கும் உயிர்விசை அது. ஆணவநிறைவுக்காகவும் இன்பங்களுக்காகவும் எப்போதும் நிறைவுகொள்ளாமல் இருப்பது. அதை பௌத்தம் விரிவாகப்பேசுகிறது.

தரிசனங்களை அந்த எளிமையுடன் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தத்துவத்தை எளிமைப்படுத்தவே கூடாது.

ஆர். கண்ணபிரான்

முந்தைய கட்டுரைவாசிக்கவைப்பது…