அன்புள்ள ஜெ,
விஜய் அரசியல், ஆக்கப்பூர்வ அரசியல் மற்றும் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் கரூர் சாவுச் சர்ச்சைகள் பற்றிய உங்கள் காணொளிகளை பார்த்தேன். இந்த காணொளிகளில் முன்வைக்கப்படுபவை மிக அடிப்படையான சிந்தனைகள் என்று எவராலும் புரிந்து கொள்ள முடியும். அவை இங்குள்ள கட்சிஅரசியலில் எந்த ஒரு தரப்பையும் சார்ந்தவை அல்ல. மிக வெளிப்படையாகவே அத்தனை அரசியல்த் தரப்புகளையும் நீங்கள் கறாராகவே அணுகுகிறீர்கள். இன்றைய அதிகார அரசியலில் எல்லாத்தரப்பிலும் உள்ள கோஷங்களையும், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் அரசியலையும் சுட்டி சுட்டிக் காட்டுகிறீர்கள். இன்றுள்ள அரசியலில் அது மட்டுமே இப்போது இந்தியவில் சாத்தியம் என்றும், எந்த தரப்பானாலும் அதையே செய்யவேண்டும் என்றும் சொல்கிறீர்கள். ஏனென்றால் அதற்கான காரணம் நம்முடைய சமூகமனநிலையில் உள்ளது என்றுதான் அந்த காணொளி செல்கிறது.
அதை ஒரு கட்சிசார்பான பிரச்சாரம் என்றும், ‘கம்பிகட்டுதல்’ ‘சப்பைக்கட்டு’ ‘நுண்அரசியல்’ என்றும் பேசுபவர்களைப் பார்த்தேன்.
‘ஜெய் ஸ்ரீராம் என்று கூவும் கோஷத்தை மட்டும் இந்தப்பட்டியலில் அவர் சேர்க்கவில்லை பார்த்தாயா? என்று ஒருவர் கேட்டார். ஒரு மோட்டாத்தனமான தன்னம்பிக்கை நிறைந்த சிரிப்பு. அந்த சிரிப்பில் இருந்த மூடத்தனம் கடும் எரிச்சலைத்தான் உருவாக்கியது. இருந்தாலும் நான் அவருக்கு பதில் சொன்னேன்.
“அவர் தன் கட்டுரைகளில் குறைந்தது நூறுமுறை அந்த கோஷத்தை அரசியலில் எழுப்புவதிலுள்ள மூர்க்கம் மற்றும் வன்முறை பற்றி எழுதி நேரடியாக கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். அந்தச் சொல்லை அடித்து தேடினாலே அந்த கட்டுரைகள் வரும்” என்றேன்.
“இல்லை. அவர் ஆர்எஸ்எஸ் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. பூசி மெழுகுகிறார். பொத்தாம் பொதுவான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்” என்றார்.
“செப்டெம்பர் இதழ் ஃப்ரண்ட்லைன் இதழில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ அரசியலை நேரடியாகவே மிக கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார். அதே கருத்துக்களை இருபது ஆண்டுகளில் குறைந்தது 50 முறையாவது தமிழிலும் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்” என்றேன். “அவர் எழுதியதற்கு மேல் தமிழில் வலுவான கட்டுரையை யார் எழுதியிருக்கிறார்கள்? இன்னொருவரை பேரை சொல்லுங்கள். வெறும் கட்சி அரசியல் கூச்சலுக்கு அப்பால் இவ்வளவு திட்டவட்டமான எதிர்த்தரப்பை தமிழகத்தில் வேறு யாராவது எழுதி இருக்கிறார்களா? பெயர் சொல்லுங்கள்” என்று நான் கேட்டேன்.
அதற்கும் ஒரு தன்னம்பிக்கையான சிரிப்புடன் “நீங்கள் இன்னும் புரிந்து கொள்ள வேண்டும். அதெல்லாம் நுண் அரசியல்” என்று பதில்.
அதாவது ஒரு கட்சி நிலைபாடு எடுத்து, அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டரை விட கீழ்நிலையில் பேசிக்கொண்டிருக்க வேண்டும். தங்களுடைய கருத்தை அப்படியே திருப்பிச் சொல்லாத அனைவரையும் எதிரி என்று முத்திரை குத்தி இழிவு செய்ய வேண்டும். இதுதான் இந்த கும்பலின் அரசியல்.
நம் கூட்டமனநிலை நம் கட்சியரசியல், மதம் உட்பட அனைத்திலும் எப்படி ஒரேவகையான வெறியுடன் செயல்படுகிறது என்றும், அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது என்பது நம் செவி-கண் வழியான கலாச்சாரமே என்று அக்காணொளி சொல்கிறது. நமக்கு பலநூற்றாண்டுகளாகவே வாசிப்பு சார்ந்த கலாச்சாரம் இல்லை என்பதையும், நம்முடையது செவிப்பண்பாடு என்பதே அடிப்படையான சிக்கல் என்பதையும் சொல்கிறது. கொஞ்சம் கூர்மை உடைய எவருக்கும் புரியும் பேச்சு அது.
அதை ஏதோ ஒரு கட்சியின் பிரச்சாரம் என்றும் முட்டுக் கொடுத்தல் என்றும் திரித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். அரசியல் சார்ந்து வேண்டுமென்றே சொல்கிறார்கள் என்றுதான் நான் முதலில் நினைத்தேன் .ஆனால் சிலருக்கு அது உண்மையிலேயே அப்படி தோன்றுகிறது என்பதை தெரிந்து கொண்டது எனக்கு பெரிய திகைப்பை அளித்தது. எவ்வளவு பெரிய மூடர் கூட்டம் நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பிரமிப்பை அளித்தது. இவர்களிடம் எல்லாம்தான் பேச வேண்டுமா? இவர்கள்தான் நம் அரசாங்கத்தை உருவாக்குகிறார்களா? நம் சமூகமே இதுதானா? ஒரு பெரிய நடுக்கத்தை அடைந்தேன். இங்கு என்ன கலாச்சார விஷயங்கள் நடக்க முடியும்? என்ன அரசியல் பேச முடியும்? இவர்கள் நடுவே பாதுகாப்பாக வாழ்வதுகூட சாத்தியமா?
உங்கள் காணொளிகள் எனக்கு தொடர்ந்து நம்பிக்கையை அளிப்பவை. அந்த நம்பிக்கைகள் இந்த மாதிரியான முட்டாள்களின் பேச்சுக்கள் ஆட்டம் காண செய்து விடுகின்றன.
ரவிச்சந்திரன் கே.ஆர்.