உண்மையில் ஒற்றை உரைதான்!

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருபவன் நான். உங்களுடைய காணொளிகளில் சிக்கலான கருத்துக்கள் ஏதும் இல்லை. அவற்றை நேரில் வகுப்புகளாகவோ கட்டுரைகளாகவும்தான் பயில வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட எளிமையான கேள்விகளை புதிய கோணத்தில் சொல்கிறீர்கள்

அவை எப்படி புதிய குணம் ஆகின்றன என்பதை பற்றி யோசித்தேன். பெரும்பாலும் ஒட்டுமொத்தமான ஒரு பெரிய சித்திரத்தின் ஒரு பகுதியாகத்தான் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் பார்க்கிறீர்கள். உதாரணமாக இயற்கையுடன் இருத்தல் என்பதை பற்றிச் சொல்லும்போது அதை ஒரு இளைப்பாறுதல் என்றோ சலிப்பிலிருந்து மீள்வது என்றோதான் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மொத்த வாழ்க்கையை பல வேறு பகுதிகளாக பிரித்துக் கொண்டுதான் வாழமுடியும் என்றும், அதில் ஒரு பகுதியை இயற்கையுடன் இணைத்துக் கொள்வதன் வழியாக பிறபகுதிகளை சிறப்பாக ஆற்ற முடியும் என்றும் ஒரு கோணத்தில்தான் நீங்கள் எப்போதும் சொல்லி வருகிறீர்கள்.

அதாவது நம்முடைய அன்றாட வாழ்க்கை என்பது இயற்கையிடமிருந்து பிரிந்து பிரிந்து செல்வதாகவே எப்போதும் உள்ளது. இயற்கையுடன் ஒரு பகுதியை நாம் இணைத்துக் கொண்டோம் என்றால் இந்த பிரிந்து செல்லும்போது நமக்கு உருவாகும் சலிப்பையும் சோர்வையும் வெல்ல முடியும் என்று நீங்கள் சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன்.

இவ்வாறு எல்லா விஷயத்திலும் ஒரு ஒட்டுமொத்தப் பார்வை என்பதன் ஒரு பகுதியாக சிறு விஷயங்களை நீங்கள் விளக்குவதுதான் சிறப்பு. ஒவ்வொரு காணொளியும் ஒன்றுடன் இன்னொன்று இணைந்து ஒட்டுமொத்தமான ஒரு பெரிய உரையாக மாறுவதாக  உள்ளது. இந்த காணொளிகள் இப்போது 100 ஐ தாண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். ஏறத்தாழ ஐம்பது மணி நேரத்திற்கு மேல் பேசி இருக்கிறீர்கள். இந்த உரைகள் ஒவ்வொன்றிலும் வழியாக ஒட்டுமொத்தமாக திரண்டு வரும் பார்வையை உங்களுடைய தத்துவப் பார்வை ஒன்றே எடுத்துக் கொள்ள முடியும். தமிழில் மிக அரிதாக நிகழும் ஒரு சிறந்த நிகழ்வு இது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

எம்.சாரங்கபாணி

முந்தைய கட்டுரைமூளைச்சோம்பல்