தியானம் அளித்த கொடைகள்

அன்புள்ள ஜெ ,

வணக்கம். நலம்.

நலமே விழைகிறேன்.

என் வாழ்வை ஜெ –விற்கு முன் ஜெ – விற்கு பின் என்று வகுத்துக்கொள்ளலாம். உங்கள் எழுத்துக்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். அத்தனையும் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. மிகப்பெரிய ஆழமான மாற்றங்களையும் அவதானிப்புகளையும் அடைந்தது , குரு தில்லை செந்தில் பிரபுவின் தியானம்  மற்றும் உளக்குவிப்பு  வகுப்பில்தான்.

வாழ்க்கையில் நிறைய இலட்சியங்கள் கனவுகள் உண்டு. எதையாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நன்கு படித்தேன். நல்ல பள்ளி. நல்ல கல்லூரி. கல்லூரியிலிருந்து நேராக மிகப்பெரிய அலுவலகத்தில் வேலை கிடைத்து பணியில் அமர்ந்தேன்நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். பரதநாட்டிய கலையிலும் ஆர்வமுண்டுபள்ளி மேடை, கல்லூரி மேடையில் பேச்சு, நடனம் என்று நிறைய பங்கேற்றுமிருக்கிறேன் . எங்குமே சராசரித்தனம் இருக்காது. கூட்டத்தில் தனி கல் சரிவது போல தான் எங்கும் இருந்திருக்கிறேன்.

மனச்சலனம், வலிகள் இல்லாத நாட்கள் என் வாழ்வில் இருக்காது என்று உறுதியாக நம்பி, அமைதியாக நிம்மதியாக இருக்கும் நாட்களை சந்தேகத்தோடு அணுகுவேன். வலியையும், ஏதோ  ஒரு சலனத்தையும்  மனது தேடும்.. உருவாக்கியும் கொள்ளும் . வலியும் நிம்மதியின்மையும் மிக பெரிய வெற்றிக்கு இன்றியமையாதவை என்ற எண்ணம் ஆழப் பதிந்துவிட்ட வாழ்க்கை

ஒரு 12 வயதிலிருந்தே தீராத தலைவலி உண்டு. பெரும்பாலும்அழுவதால் வரும். தூக்கமின்மையால் வரும். முதலில் அவ்வப்போது இருந்தது அண்மையில் வாரம் ஒரு முறை என்று வர ஆரம்பித்துவிட்டதுமாத்திரை மருந்துகள் வேலை செய்யவே செய்யாது.. மிகப்பெரிய வாந்தி மயக்கம் வந்த பிறகே தீரும். குடும்பத்தில் அம்மாவிற்கு வரும். தேநீர் அதிகம் குடிப்பதால் பித்தம் தலைக்கேறி தான் இந்த தலைவலி என்று அம்மா கூறுவாள். நானும் அவ்வாறுதான் என்று நம்பினேன்என் தம்பி என் அளவுக்கே தேநீர் அருந்துவான் , அவனுக்கு இவ்வாறு தலைவலி வராது. தேநீர் அதிகம் அருந்தும் பலபேருக்கு இவ்வாறு தலைவலி இல்லாததையும் கவனித்திருக்கிறேன். அவ்வப்போது தேநீரை விட்டுவிடுவேன். அனால் வெகுநாள் தாக்கு பிடிக்கமுடியாது. ஒரு போதை போல ஆகிவிட்டது. தலை வலி மட்டுமல்ல, இன்னும் நிறைய harmone கோளாறுகளினால் வரும் பிரச்சனைகள், சுவாச கோளாறுகளும்நிறைய வேலைகளை செவ்வனே செய்ய விடாது. எதையும் தொடர்ந்து ஒழுங்காகவோ, சுகமாகவோ செய்ய முடியாது. இரண்டு நாளில் எரிச்சல் கூடிவிடும் அல்லது சலிப்படைந்து விடும். தங்களுடைய தன்மீட்சி புத்தகம் அவ்வப்போது தேற்றி விடும்.

புதுவை வெண்முரசு கூடுகையின் மூலமே முழுமை அறிவு வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிரபந்தம், மரபிலக்கியம் இதில்தான் ஆர்வம். வாழ்க்கையின் பெருங்கனவுகளுக்கு உடல் நலமும் மன நலமும் மிக அவசியம் என்பது ஆணி அடித்தாற் போல் புரிந்துகொண்டிருந்த கால கட்டம். முக்கியமான வேலையின் போது ,  உடலோ மனமோ பழிவாங்கிவிடும். அழகான அனுபவத்தை சீர்குலைய செய்து விடும். திருமதி இராச.மணிமேகலை மூலமே குரு தில்லை செந்தில் பிரபுவின் அறிமுகம் கிட்டியது. அவர் அந்த வகுப்பிற்கு சென்ற பிறகு தேநீர் பிடிக்காமல் போய்விட்டதாக சொன்னது, ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. முதலில் குரு தில்லை செந்தில் பிரபு பரிந்துரைத்த யோக நித்ரா –வைதான் பயிற்சி செய்தேன். அது தூக்கத்திற்கு  மிகவும் உதவியது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடந்த உளக்குவிப்பு வகுப்பில் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன்

ஒரு சிலருக்கு இந்த வகுப்பு ஒரு தியானத்திற்கு பிறகே அவர்கள் விரும்பிய ஓய்வை தந்துவிட்டது. எனக்கு அவ்வாறு நிகழவில்லை. தேநீர் அருந்தாமல் ,சரியான உறக்கமும் இல்லாமல்  மூன்றாம் நாள் தலைவலி  வந்துவிட்டது. மலையில் இருந்து இறங்குகையில் வாந்தியும் மயக்கமும் வேறு சேர்ந்துகொண்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. மலையில் இருந்து லட்சுமிநகர் வருவதற்குள்ளாகவே நிறைய நண்பர்களில் உதவியோடு அந்த வலி குறைந்து ஒரு ஒய்வு நிலைக்கு வந்துவிட்டேன். அத்தனை பேரையும் இந்த தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன் .  நான் இதை பதிவு செய்வதற்கு முக்கிய காரணம், தியானம் கொடுக்கும் கொடை என்பது   ஒவ்வொருவருக்கும் மாறுபடும். என்னுடைய ஆரம்பம் இவ்வாறு அமைந்தாலும், நான் மலை இறங்கியதும் என் எண்ணத்தில் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து பார்க்க வேண்டும் என்றுதான் தோன்றியது. நண்பர்களும் அதைத்தான் பரிந்துரைத்தனர்.  

வீடு வந்ததும், குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் ஒரு செய்தியை எனக்கு அனுப்பி இருந்தார். என் தலை வலிக்கு காரணம் என் வாழ்வில் நடந்த எதையோ ஏற்றுக்கொள்ளாமல் , மனதிற்குள்  நானே செய்துகொள்ளும் விவாதம் காரணமாக இருக்கலாம் என்று. அந்த எண்ணமே புதிய திறப்பாக இருந்தது. அவர் சொல்வதை என்னால் முழுமையாக புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது .

என் கட்டுப்பாட்டில்  இல்லாத ஒன்றை மாற்ற முயற்சி செய்வதன் விளைவுதான் என்னுடைய உள சிக்கலுக்கு காரணம் என்று புரிந்துகொண்டேன். இப்படி பல்வேறு இடங்களில் எனக்கு வழிகாட்டிக்கொண்டே இருந்தார் குரு.

 அவர் சொன்னதில் என்னை பெரிதும் மாற்றிய ஒன்று. “Things can wait. எதை கற்றுக்கொள்வதற்கும், அந்த கல்விக்கு மனமும் உடலும் பழகுவதற்கும் அதற்கான நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். தேவை என்றால் ஒரு சிறு இடைவெளி விட்டு அந்த விஷயத்தை தொடர வேண்டும். அந்த இடைவெளி இன்னும் சிறப்பாகவும் கூர்மையாகவும் நம்மை மாற்றும்நடனத்தில் எனக்கிருந்த அவசரத்தை இந்த சொல் முற்றிலும் போக்கிவிட்டது

இது எனக்கு  முக்கியமான வேலை  , எனக்கு அவ்வளவாக நேரமில்லை என்று நினைத்து அவசரமாக செய்து கொண்டிருந்த அனைத்து  செயல்களையும் கொஞ்சம் இடைவெளி விட்டு செய்ய ஆரம்பித்தேன். என் குடும்பம், பணி, தியானம் இவற்றுக்கு  முன்னுரிமை கொடுத்து மற்றதை குற்ற உணர்வின்றி தள்ளி வைத்தேன். முதல் மூன்று  நாள்  இரண்டு வேலையும் குரு சொல்லித்தந்த யோக  பயிற்சியை செய்தேன்எனது யோகாசன பயிற்சியில் மிக கடினமான ஆசனங்கள் கைகூட ஆரம்பித்ததுதான் என் முதல் பேரனுபவம். அத்தனை நாள்  பயிற்சி செய்து வராத யோகாசனங்கள்  திடீரென்று தானாக நிகழ்ந்தது. பயிற்சி அவசியமில்லை என்று சொல்லவில்லை. மனம் சீராக இல்லை என்றால், உள்ளத்தை குவிக்க முடியவில்லை என்றால் பயிற்சியால் பெரிய பலன் எதுவும் இருக்காது என்பது புரிய ஆரம்பித்தது. இப்போது யார் என்னை எவ்வளவு அவசர படுத்தினாலும் எந்த பதைபதைப்பும் எனக்கு நிகழ்வதில்லை. நான் நிதானமாக என் போக்கில் தான் அந்த வேலைகளை செய்கிறேன். அவசரமென்று எதுவுமிருப்பதில்லை. அது மிகப்பெரிய மன அமைதியை தந்துள்ளது. முதல் முறையாக அமைதியாக இருப்பது பிடிக்க ஆரம்பித்தது.

 தலை வலி குறைய ஆரம்பித்தது. உறக்கம் சரியாக நிகழ்ந்தது. பேச்சில், செயலில்  நிதானம் கூட ஆரம்பித்தது. நடனத்தில்  3 நிமிட ஜதியை  தொடர்ந்து ஆட முடியாமல் தவித்த நான், தொடர்ந்து 1 மணி நேரம் 3 ஜதிக்களை ஆட ஆரம்பித்தேன். வலி இருந்தது. ஆனால், உளம் ஆடலில் குவிந்து வலி மறந்தது. ஆடலை நான் நிகழ்த்தவில்லை. அது தானாக நிகழ்ந்தது.

வாழ்க்கையை நிகழ் கணத்தில் வாழ வேண்டும்.. நதி போல ஒழுகிச்  செல்ல வேண்டும்.. ஒழுக்கம் தான் வெற்றிக்கு அடிப்படை.. இப்படி எல்லாம்அனைவரும் அறிந்ததுதான். ஆனால்  எதனாலோ இதை பயிற்சி ஆக ஆக்க  முடிவதில்லை, அனுபவமாக உணர முடிவதில்லை.. வார்த்தையாக அறிந்ததை, கனவாக இருந்ததை அனுபவமாக உணர இந்த யோக பயிற்சி மிகவும் உதவி இருக்கிறது என்றே கூற வேண்டும். மாயம் போல அமைந்த தருணங்கள் எத்தனையோ.

எனக்கிருந்த இன்னொரு சிக்கல், நெருக்கமானவர்கள்  எது சொன்னாலும் , எது செய்தலும் ஏற்படும் உள  பாதிப்புகள் . அந்த பாதிப்பு தரும் தாக்கத்தினால், என் சிக்கலை சரியாக எதிராளிக்கு  புரிய வைக்க முடியாது. கொந்தளிப்பும் சுயபச்சாதாபமும் சேர்ந்து கொண்டு என்னை வேதனையில் ஆழ்த்தி விடும். என் பிரச்சினையை சொல்லவோ, இல்லை அதற்க்கு  தீர்வு காண முடியாமல் போகும். மற்றவர்கள் என்னை எப்படி நடத்த வேண்டும், என்னிடம் எப்படி பழக வேண்டும்என்பதை நம் செயல்கள் தான் தீர்மானிக்கிறது. நான் தீர்க்கமாகவும், தெளிவாகவும் இருந்தால் தான் நாம் எதிர் நோக்கும் மாற்றங்கள் மற்றவர்கிளிடம் நிகழும். அதற்கும் காலம் தேவை. அவசரமாக அந்த மாற்றம் நிகழாது என்ற புரிதல் கைகூடி மற்றவர்களை நான் கையாளும் விதத்தை வெகுவாக மாற்றி  இருக்கிறது என்றே கூற வேண்டும்.

 யோக பயிற்சி செய்யும் நாட்களில், இன்னொரு அனுபவம் கைகூட ஆரம்பித்தது. என் சிக்கல்களை மூன்றாவது நபராக தள்ளி நின்று பார்க்கும் அனுபவம். அது வேறு யாருடைய பிரச்சனையோ என்பது போல. தியான பயிற்சி செய்யாத நாட்களில் அதே பிரச்சனை மலையாக தெரியும். பயிற்சி செய்தால், அந்த பிரச்சன்னை எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு செய்தி போல, பட காட்சி போல தோன்றும். எதிர்வினை ஆற்றாமல், தீர்வை குறித்து நிதானமாக யோசிக்க முடியும். இன்னும் முழுதாக அனைத்து சிக்கல்களிலிருந்து மீளவில்லை என்றாலும், இந்த அனுபவங்கள், நிறைய புது சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது. என் செயல்களை இன்னும் செவ்வனே செய்ய உதவுகிறது. சில நாட்கள் இரண்டு வேலை தியான பயிற்சி செய்ய முடிகிறது. சில நாட்கள் ஒரு முறை பயிற்சி செய்வதே சிரமமாகவும் உள்ளது. அனால் முடிந்தவரை ஒரு முறையாவது பயிற்சி செய்யவே முயல்வேன்.

 ஒரு துறையில், சராசரியாக, இருப்பது பிடிக்காமல், அன்றாடம் குறைப்பட்டு கொண்டிருந்த எனக்கு, இப்போதெல்லாம் எந்த துறையின் ஆரம்பமும்  சராசரியாக, இல்லை அதையும் விட குறைவாக  இருப்பதில் தான் ஆரம்பிக்கும் என்பது உணர்வு பூர்வமாக புரிகிறது. மனம் அதை ஏற்கிறது. செயலொழுக்கம்  மூலமே, தனி கல்லாக சரிய முடியும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடிகிறதுமாறுதல் இல்லாத ஒரே  செயல்களை செய்வதில் சலிப்பு ஏற்படுவதில்லை. மாறாக  அந்த ஒழுக்கத்தின் உபாயங்கள் என்னவென்றும்  தெள்ள தெளிவாக தெரிகிறது. அந்த monotonous work-ல் இருக்கும்  பல மாயங்களை புரிந்து கொள்ளும் விழிப்புணர்வு இந்த பயிற்சியின் மூலம் கைகூடி கொண்டே இருக்கிறது.” Magic lies in the ordinary”.

வெற்றிக்கு வலியும், வேதனையும் இன்றியமையாததா என்று எனக்கு தெரியாதுஇந்த யோக பயிற்சி நிச்சயம் என் வாழ்வில் இன்றியமையாதது என்றே கூறுவேன். அண்மையில் ஒரு வாக்கியம் வாசித்தேன். புத்திசாலிகள் திட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வெற்றியாளர்களோ செயல்களில் இறங்கி ஆழம் பார்க்கிறார்கள் என்று. இந்த பயிற்சியை இன்று செய்யலாமா வேண்டாமா என்று நான் யோசிப்பதில்லை. சிந்திக்காமல் செய்கிறேன். செயலில் இறங்கினாலே விடுதலை நோக்கிய பயணம் . போக வேண்டிய தூரம் எவ்வளவோ..  இன்னும் இந்த பயிற்சியால் அடைய போகும் இன்பங்கள் எத்தனை எத்தனையோ. தங்களுக்கும், குரு தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

அன்புடன்,

சித்ரா,

புதுவை.

முந்தைய கட்டுரைபனையும் காட்சனும்- கடிதம்