அன்புள்ள ஜெ
சென்னை அரசு ஓவியக் கல்லூரியின் 175வது நிறைவை ஒட்டி ஏவி மணிகண்டன் சாரின் ஒரு உரை நவம்பர் மாதம் சென்னையில் நிகழ்ந்தது. விஷ்ணுபுரம் வாசக நண்பர்கள் மூலம் வாட்ஸ் அப்பில் எனக்கு தெரியவந்தது. அதற்கு சென்னை அரசு ஓவியக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவியான எனது மகள் கல்கியை அழைத்து சென்றிருந்தேன். அதே கல்லூரியில் இருந்து மேலும் மூன்று மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களில் இருவர் உங்களின் இளம் வாசகர்கள்.
அந்த உரையில் மணிகண்டன் சார் கல்லூரி சார்ந்து கூறிய பெரும்பாலான தகவல்கள் அவர்களுக்கு புதிது. மிக செறிவாகவும் சுவாரஸ்யமாகவும் உரையை கொண்டு சென்றார்.இந்த கல்லூரியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட சிலரின் உழைப்பு இன்று மழுங்கடிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கும் கல்லூரியின் இன்றைய நிலை குறித்து வருந்தி கண்ணீருடன் உரையை நிறைவு செய்தார் .விடைபெறும் நேரத்தில் வெள்ளிமலை வகுப்பில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களை அழைத்தார்.
நான் தொடர்ந்து வெள்ளிமலை வகுப்புகளுக்கு வந்து கொண்டிருக்கிறேன் சென்ற வருடம் எனது மகளை மணிகண்டன் சாரின் வகுப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டிருந்தேன் ஆர்வம் இல்லை என மறுத்து விட்டாள். சென்னையில் சாரின் உரையை கேட்டதும் வகுப்புக்கு செல்ல அவளாக முடிவெடுத்தாள். அவளோடு அவளின் நண்பன் திவாகரும் வகுப்புக்கு செல்வதாக திட்டம். ஆனால் அவன் ஊரில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவன். வகுப்புக்கு கட்ட பணம் இல்லை என்றான். மணிகண்டன் சாரிடம் இத்தகவலை தெரிவித்தாள் கல்கி. உடனே இருவருக்கும் அவரே பணம் செலுத்தி இருவரையும் வகுப்புக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பினார். அதோடு மட்டுமல்லாமல் வகுப்புக்கு வருபவர்களுக்கான குழு ஆரம்பித்த உடனே இருவரையும் அதில் இணைத்து பாதுகாப்பாக அவர்கள் நித்யவனம் வந்து சேர்வது வரை தொடர்பிலேயே இருந்தார் .
வகுப்பிலும் வந்திருக்கும் அனைவரும் சீனியர்கள், விபரம் தெரிந்தவர்கள் என்ற தாழ்வுணர்ச்சியிலேயே தத்தளித்துக் கொண்டிருந்த இருவரையும் உள்ளுணர்ந்த மணிகண்டன் சார் இருவரையும் தனியே அழைத்து வந்திருக்கும் அனைவரையும் விட இந்த வகுப்புக்கு முக்கியமானவர்கள் நீங்கள்தான் என்று தயக்கத்தைப் போக்கி திவாகரை அணைத்து கொண்டபோது திவாகர் கண்கள் கலங்கி இருந்தன என்று கல்கி கூறினாள்.
நானாக வலிந்து அழைத்து சென்ற ஆலயக்கலை வகுப்பில் ஒட்டாமல் அங்கிருக்கும் கருப்பனோடு(நாலு கால் நண்பன்) சுற்றி வந்த கல்கியா இவள் என்று வகுப்பு முடிந்து வந்த கல்கியை பார்க்க ஆச்சரியம் தான் எனக்கு.
பல வகையிலும் திறப்பு கல்கிக்கு.
இந்த வகுப்பு அவளாக சென்றது. அதனால் வந்த ஆர்வம். அடுத்தடுத்த அவளின் செயல்பாடுகள் பார்த்து மகிழ்ச்சி எனக்கு. அடுத்து அஜிதன் அண்ணாவின் மேலை தத்துவம் அறிவிப்பு வந்தவுடன் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்கள் கல்கியும் திவாகரும்.
நன்றியுடன் நிர்மலா. குன்றத்தூர்.
அன்புள்ள நிர்மலா,
ஏ.வி.மணிகண்டனின் அந்த உரை பற்றி பலர் சொன்னார்கள். மிக அற்புதமான உரை, தமிழில் கலை பற்றி ஆற்றப்பட்ட முதன்மை உரைகளில் ஒன்று என்றனர். அங்கே அதைப்பற்றி பேசி ‘வீணாக்கி’விட்டார் என்றும் ஒருவர் சொன்னார். எங்கும் எதுவும் வீணாவதில்லை, ஓர் இடத்தில் ஓர் உரை தன்னியல்பாக வெளிப்படுவது அபாரமான ஒரு அறிவுநிகழ்வு என்றேன்.
இளைஞர்களுக்கு நான் மீண்டும் சொல்வது ஒன்றே. கலையும் சிந்தனையும் கல்வி வழியாகவே நிகழும். நம் முன்னோடிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் நம் எல்லைகளை உடைத்து, நம்மை மீறி அவர்களை நோக்கிச் செல்லவேண்டும். நமக்கு வசதியானதை, விருப்பமானதை மட்டுமே கற்போம் என்று நினைக்கும் எவரும் எதையும் கற்கப்போவதில்லை. எந்தக் கல்வியும் நம்மை சிறியவர்களாக உணரச் செய்யும், நம்மை உடைக்கும், நாம் அதிலிருந்து மீண்டு வளர்கிறோம்.
மணிகண்டனுக்கு ஓவியத்துறையில், கலைத்துறையில் நல்லாசிரியர்கள் உண்டு. அவர்களிடமிருந்தே அவர் வந்துள்ளார். அதுவே அவர் மரபு. அவரிடமிருந்தே அடுத்த தலைமுறை வந்தாகவேண்டும். அதுவும் அவரது மரபுதான்.
கற்பதற்கான தயக்கம் எதன்பொருட்டென்றாலும் அது ஒரு நோய்தான். அதை மீறி அவர்கள் கற்கமுற்பட்டமை வாழ்த்துக்குரியது.
ஜெ












