மனம்குவிதல், இரண்டு தேவைகள்

ஐயா

வணக்கம்.என் மகள் ந. இளங்கலை இறுதி ஆண்டு படிக்கிறாள்.அவளுக்கு சரியான திட்டமிடல் மற்றும் சுயசிந்தனை குறைந்த காணப்படுகிறது.ஆகவே தங்கள் வகுப்பிற்கு வந்து பயின்றால் மேம்படும் என்று நம்புகிறேன்.தங்கள் பயிற்சியில் சேர என்ன வழிமுறைகள் என்று தெரிவித்தால் என் மகளை பயிற்சியை சேர்க்க முயற்சிப்பேன்.

நன்றி 

பி

அன்புள்ள பி

 கவனக்குவிப்போ, உள்ளத்தை ஒருங்குபடுத்துவதோ  அத்தனை எளிய ஒன்று அல்ல  .அதை முந்தைய தலைமுறையாகிய நாம் மிக எளிதாக  மதிப்பிட்டு இருக்கிறோம். இன்றைய தலைமுறையில்  ஒவ்வொருவருக்கும்  உலகம்  இணைய வடிவில் வந்து சூழ்ந்து இருக்கிறது . கேளிக்கைகள், சூதாட்ட விளையாட்டுகள், போதைகள் ஆகியவற்றுக்கு இணையாகவே உதிரி செய்திகளும்  வணிகமயமாக்கப்பட்டு  பேருருக் கொண்டு அவர்களை சிதறடிக்கின்றன.  அதை மீறி செல்வதற்கு  மிக தீவிரமான முயற்சி தேவைப்படுகிறது .

அடிப்படையில் இரண்டு தடம் கொண்டது அது . ஒன்று  தன்னுடைய  ஆளுமை வெளிப்படும் ஒரு களம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதில் முன்னுதாரணமான ஆசிரியரை கண்டடைய வேண்டும் . அவ்வாறு ஒரு  முன்னுதாரண மனிதர் கண்டறியப்பட்டால் மட்டுமே  கவனச் சிதறல்கள் ஓய்ந்து ஒரு துறை சார்ந்த கவனம் உருவாகும்  .

அதன் பின்னர் உள்ளத்தை ஒருங்கிணைக்கவும்  கவனத்தை  தொடர்ச்சியாக  செயல்படுத்தவும் தேவையான நவீன உளப்பயிற்சிகள் தேவை . அப்பயிற்சியை அடைவது மட்டுமல்ல அதைத் தொடர்ந்து செய்வதும் முக்கியமானது . இந்த இருவகைச் செயல்பாடுகளின் ஊடாகவே இன்று  ஒவ்வொரு உள்ளத்தையும் சிதறடித்து  பயனற்ற வெறும் நுகர்வோராக மாற்றிக் கொண்டிருக்கும்  சூழலில் இருந்து விடுபட முடியும்.

நாங்கள் இன்று உளக்குவிப்புப் பயிற்சிகளை அளித்துவருகிறோம். தில்லை செந்தில்பிரபுவின் பயிற்சிகள்  ஜனவரியில் வரவுள்ளன. கூடவே கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் என வெவ்வேறு களங்களிலும் பயிற்சிகளை அளிக்கிறோம். ஏதேனும் ஒரு களத்தில் ஆர்வம் பற்றிக்கொண்டால் அதிலிருந்து மேலே செல்வது இயல்பாக நிகழும்.

ஜெ

முந்தைய கட்டுரைஉளச்சோர்வும் உடலும்