இனிய ஜெயம்
கடலூரில் இருந்து நமது கல்வி நிலைய பக்கம் வருவது ஒரு நெடிய டவுன் பஸ் அனுபவம். தொடர்வண்டி பிடிக்க என்றால் வேறு ஒரு ஊர் போக வேண்டும். 1to 1 போன்ற பேருந்துகள் கிடையாது. மாலை 6.45 கு சேலம் பேருந்து ஏறினால், அது (இடையில் சாலை ஓர எல்லா ஊரிலும் சற்றே அசந்து) நெல்லிக்குப்பம், பண்ருட்டி, கெடிலம், உளுந்தூர்பேட்டை (அங்கே வண்டி கிளம்பும் முஸ்தீபில் நின்று கொண்டே இருக்கும் கொஞ்ச நேரம்) கோட்டை துருவம் எல்லாம் கடந்து வந்து கள்ளக்குறிச்சியில் ஓய்ந்து நின்று விடும். அதன் பிறகு மெல்ல கிளம்பி ஆத்தூர் வாழப்பாடி என சுற்றிக்காட்டி நள்ளிரவு 12 மணிக்கு, “பயணிகள் ஜாக்கிரதை உங்கள் அருகே இருப்பவர் திருடராக இருக்கலாம். நீங்கள் குனியும் போது உங்களுக்கே தெரியாமல் உங்கள் ……… களவாண்டு சென்று விடுவார்கள்” என்று காவல் நிலைய ஒலிபெருக்கி கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் சேலம் பேருந்து நிலையத்துக்கு வந்து சேரும்.
அங்கே பேருந்து நிலையத்தில் காவல் நிலைய எச்சரிக்கை கூப்பாடுக்கு இடையே, உளுந்தங் கஞ்சி, உளுந்தங் கஞ்சி ஒடம்புக்கு நல்லது உளுந்தங் கஞ்சி என்று (இதை சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் அரஹர சிவ சிவ சுப்ரம்மண்யம் என்ற முருகன் பக்தி பாடல் டியூபில் மனதுக்குள் வாசித்து கொள்ளுங்கள்) மைக்கில் ரெக்கார்ட் குரலில் திரும்ப திரும்ப ஒலிக்கும் tvs 50 கடையில் நின்று ஒரு கஞ்சி உள்ளே தள்ளி விட்டு 12.15 கு ஈரோடு பேருந்து ஏறினால், 1.45 கு ஈரோடு பேருந்து நிலையம். அங்கே பேருந்து நடைபாதை ஓர அண்டர்கிரவுண்ட் சாக்கடை மூடிகள் கொண்ட பிளவின் ஓரம் நிகழும் பெருச்சாளி சண்டைகளை சற்று நேரம் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தால் 2.20 கு திண்டுக்கல்லில் இருந்து அந்தியூர் போகும் பேருந்து அந்த நடைபாதைக்கு வரும். அதில் ஏறினால் 3 மணிக்கு அந்தியூர்.
அங்கே பேருந்து நிலையம் எதிரே லாலா கடை படிக்கட்டில் இரண்டு மணிநேரம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்து ஒரு சாயா குடித்தால் 5.15 க்கு மடம் செல்லும் பேருந்து. 6.30 மணி முதல் மெல்ல மெல்ல விழிக்கும் விரி வானின் கீழ் ஒயிலாக படுத்துக் கிடக்கும் மலை தொடர்கள் கரும்பச்சை கொண்டு எழுவதை பராக்கு பார்த்துக் கொண்டே வந்தால் 7.15 கு வெள்ளிமலை.
பள்ளிக்கான பாதையில் நடக்கும் ஒவ்வொரு முறையும் நாம் முதன் முதலாக இந்த பாதையில் நடக்கும்போது இந்த இடம் எத்தகு வனமாக இருந்ததோ அந்த கோலம் மனதில் எழும். இம்முறையும். தினைப்புலத்தில் மயில்களை ஒட்டியபடி நிலம் கவிந்த கார் மேகப்பொதிக்குள் மறைந்திருந்த பள்ளிக்குள் சென்றேன். மலைகள், மரங்கள் எதுவும் துலங்கா மேகப்பொதித்திரை. பொதுவாக நிலம் போர்த்தி நிற்கும் பனி கும் மேகத்துக்கும் பலருக்கு வித்தியாசமே தெரியாது. இரண்டும் வேறு வேறு அனுபவம் அளிப்பது. மெல்லிய சாரல் வீசும் சூல் கொண்ட மேகங்கள் உள்ளே நாம் நிற்கிறோம் என்ற நினைவு அளிக்கும் பரவசத்துக்கு இணையே கிடையாது. கீழே இந்த மேகங்கள் திரண்டு சென்று மழையாக பொழியும்.
நட்புகள் சந்திப்பு, காலை உணவு,தெய்வ வணக்கம் என காலை நடைமுறைகள் முடிந்து குறித்த நேரத்தில் வைணவ பக்தி இலக்கிய அறிமுக வகுப்பு துவங்கியது. இந்த வகுப்பு இரண்டு வகையில் தனித்தன்மை கொண்டது. முதலாவது போலித்தனமற்ற, புன்னகைக்கவைக்கும் ஜாஜாவின் உரையாடல் இயல்பு. தனித்தனியே எல்லோரிடமும் வகுப்பு உள்ளடக்கம் சார்ந்து அவர்களது ஆர்வத்தை தூண்டும்படி சொல்வதற்கு ஜாஜா வசம் ஏதோ இருந்துகொண்டே இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஜாஜா வசம் சொல்வதற்கு கேட்பதற்கு வாசகர்களுக்கும் ஏதோ இருந்துகொண்டே இருந்தது. காரணமாக இரண்டரை நாளும் உற்சாக உரையாடல் சூழல் நிறைந்து சுவாரசியம் குறையாத நாட்களாகவே எல்லோருக்கும் அமைந்தது. இரண்டாவது இந்த வகுப்பு நிகழ்ந்த முறை. இரண்டரை நாள் 15 மணி நேரத்துக்கும் மேலான ஒரு அறிமுக வகுப்பு தீவிரமும் சுவாரஸ்யமும் குன்றாது எவ்வண்ணம் நிகழ வேண்டும் என்பதற்கான தரம் வாய்ந்த உதாரண வகுப்பு இது.
ஜாஜா unofficial ஆக எடுத்த பிரபந்த பாடல்கள் வாசிப்பு அமர்வுகள் சிலவற்றில் நான் இருந்திருக்கிறேன். ஆனால் இந்தியப் பண்பாட்டில் பக்தி இயக்கத்தின் பங்கு என்ன? பக்தி இயக்கம் என்பதன் அடிப்படை அலகுகள் என்னென்ன? அது எவ்விதம் செயல்படுகிறது? வைணவ பக்தி இயக்கத்தை முன்னெடுத்த ஆழ்வார்கள் வாழ்வும் பணியும், வைணவ பக்தியில் இறைவனின் இடம், பக்தனின் இடம், இருவரும் கொள்ளும் உறவு நிலைகள், பாசுரங்களை இன்றைய வாசகன் அணுக ரசிக்க தேவையான தத்துவம் ஹிதம், புருஷார்தம் எனும் மூன்று நிலைகள், மிக அழகிய (பொது போக்கில் இருந்து விலகி நிற்கும்) பிரபந்த பாடல்கள் தேர்வு, சாரமான தலைப்பு கொண்டு 10, 10 பாடல்களாக அவை தொகுக்கப்பட்ட விதம், என இந்த வகுப்புகள் கொண்ட பாடத்திட்டம் அதன் பின்புல அறிமுகத்தில் அறிவுபூர்வமாகவும், பாடல்கள் அறிமுகத்தில் உணர்வுபூர்வமாகவும் சமநிலை கொண்டு சிறப்பான கல்வி அனுபவமாக விளங்கியது.
தனிப்பட்ட முறையில் எனக்கு நீலம், குமரித் துறைவி நாவல்களின் உணர்வு தளத்தை இன்னும் நெருங்கி அனுபவிக்க புரிந்து கொள்ள வகை செய்வதாக இந்த வகுப்பு அமைந்தது. அதை தாண்டி நம்மாழ்வாழ்வார் எவ்விதம் சிரஞ்சீவி ஆனார், ஆண்டாளுக்கு பல பல ஆண்டுகள் கழித்து பிறந்த ராமானுஜர் எவ்விதம் ஆண்டாளுக்கு அண்ணன் ஆனார் போன்ற பலப்பல வைணவ ஐதீகங்கள், திருவரங்கன் பரிவேட்டை, உறையூர் நாச்சியார் வீட்டில் ஒரு இரவு தங்கிவிட்டு வரும் பெருமாள் தாயார் வசம் வாங்கும் மண்டகபடி உற்சவம் என வைணவ சம்பிரதாயங்கள், சொன்னவண்ணம் செய்த பெருமாள், வைத்தமாநிதிப் பெருமாள் போன்ற தெய்வங்கள் அந்த பெயரை பெற்ற கதைகள் என பாசுரங்கள் இடையே கேட்டவை நமது பண்பாட்டின் வண்ணமிகு பக்கங்களை மனதுக்குள் புரட்டிப்பார்க்க வைத்தது.
குழந்தையாக, தாயாக, காதலியாக, அடிமையாக, யாக்கை நிலையாமை கொண்டு, முற்ற முழுதான சரணாகதி என வித விதமாக பெருமாளை அணுகும் பாசுரப்பாடல் அவை பற்பல எனினும், அந்த உணர்வு நிலைகளை ஆண்டாள் ஒரு அரசி போல, விப்ரநாராயணர் ஒரு அடிமை போல, திருமழிசை ஆழ்வார் ஒரு தத்துவப் பேராசிரியர் போல என ஒவ்வொரு ஆளுமையும் தனக்கே உரிய ஸ்தாயி பாவ குணத்தில் அதில் வெளிப்படுவதை இந்த வகுப்பில் ஜாஜா தேர்வு செய்து தொகுத்த பாசுரங்கள் வழியே அறிந்தது முக்கியமான அனுபவம்.
எவ்வளவு சகஜமாக இருக்க முயன்றும் என்னை மீறி கண்ணீர் துளிர்க்க வைத்தது, சில பாசுரங்கள் கொண்டிருந்த தீவிரமான சாதி மறுப்பு உணர்வு. தான் எந்த ஆசிரியர் அருகே அமர்ந்து பாசுரக் கல்வி கற்றாரோ அந்த ஆசிரியர் கொண்ட குணமும் விழுமியமும் இதுவே ஆகவே தன் ஆசிரியரின் பொருட்டு குறிப்பிட்டே தான் இந்த பாடல்களை தேர்வு செய்ததாக பின்னர் ஜாஜா சொன்னார்.
தொடர் சாரல் மழை குளிர்வித்த சாலைகள் வழியே ஊர் திரும்பும் வழியில், வழி நெடுக வகுப்பு முடியும் போது அவரது ஆசிரியர் சொன்னதாக ஜாஜா சொன்னதே மனதுக்குள் சுழன்று கொண்டு இருந்தது. சபரி மலை ஜோதி பல்லாயிரம் பேருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதில் யாரோ ஒருவர் மட்டுமே ஐயப்பனை காண்பார். அந்த ஒரே ஒருவருக்குத்தான் எல்லாமும். அப்படித்தான் இந்த பாசுரக் கல்வியும் பலநூறு ஆண்டுகள் ஆழ்வார்கள் பாடிப்பாடி வளர்த்தது அது. பொதுவில் இன்றும் இருப்பது அது. எல்லோருக்குமானது . இதன் வழியே பெருமாளை சென்று சேரும் எவரோ ஒருவர் இருப்பார். அவருக்காகத்தான் இது எல்லாமும்.
வெள்ளிமலை வகுப்புகளும் அந்த பணிகளின் தொடர்சி்சியே என்று எண்ணிக்கொண்டேன்.












