அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் அண்மைக்கால உரைகள் சற்று நீண்டவையாக உள்ளன. குறுகிய உரைகளை விட இந்த உரைகள் இன்னும் அதிகமான தூரம் நம்மை கொண்டு செல்கின்றன .சிறு உரைகளில் ஒரே ஒரு கருத்தை சொல்லி நீங்கள் சென்று விடுவது போலவும், இந்த நீண்ட உரைகளில் பல படிகளாக தர்க்கத்தை கட்டமைத்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எப்படி நிறுவுகிறீர்கள் என்பது தெரிய வருவதாகவும் உள்ளது. இந்த வகையான உரைகளையே நான் தனிப்பட்ட முறையில் அதிகம் விரும்புகிறேன்.
இந்த உரைகளை நான் கேட்பது நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான். உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இந்த உரைகளில் நீங்கள் தொடர்ச்சியாக ஒரு கருத்திலிருந்து இன்னொரு கருத்துக்கு செல்லும் அந்த தர்க்க வழிமுறை எனக்கு முக்கியமாக தென்படுகிறது. இதைக் கேட்க ஆரம்பித்த பிறகு அண்மைக்காலமாக என்னுடைய சிந்தனைகளிலும் இந்த தர்க்கமுறை இயல்பாக அமைந்து விட்டிருப்பதை நான் காண்கிறேன்.
அண்மையில்ல் சிந்திப்பது எப்படி என்கிற உரையைக் கேட்டபோது இந்த காணொளிகளே மிகச் சிறந்த சிந்தனைக்கான பயிற்சிகள் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த உரையேகூட் மிக நீளமானது. சிந்திப்பதற்கான தடைகள், சிந்திப்பதற்கான சமூக வழிமுறைகள், சந்திப்பதற்கான தர்க்கபூர்வமான வழிமுறைகள் என்று மூன்று படி நிலைகளில் அந்த உரை அமைந்திருந்தது. குறிப்பாக ஓண்டாலஜிகல், எபிஸ்டமாலஜிகல்ன்று இரண்டு வழிமுறைகளைச் சொன்னது இதுவரைக்கும் எங்கு நான் கேள்விப்படாததாகவும் ஆனால் மிகத் தர்க்கபூர்வமாகவும் இருந்தது.
ராஜன் அரவிந்தன்












