அவனே தனியன்! அவனே சகஸ்ரன்!

வைணவ இலக்கிய (நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்பு) வகுப்பிற்காக நான் நெடுநாள் காத்திருந்தேன். ஒவ்வொரு முறை வகுப்பிற்கான அறிவிப்புகள் வரும் போதெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பேன். இந்த வகுப்பிற்கான அறிவிப்பு வந்தவுடன் உடனே பதிவு செய்தேன். திடீரென்று வகுப்பிற்கான போதிய பதிவுகள் இல்லாததால் வகுப்பு நடத்தப்படுமா என்ற நிலை. இது நடக்கும், நடத்தப்படும் என்றே என் மனம் உறுதியாக எண்ணியது. மெதுவாக வகுப்பிற்கான உறுதிப்பாடு நிகழ்ந்தது

முதல் நாள் வகுப்பின் முதல் பகுதியிலேயே மனம் சொல்லவொண்ணா ஆனந்த நிலையை அடைந்தது. என் முகத்திலும் அந்த ஆனந்தத்தின் ரேகைகளை நானே உணர்ந்தேன். வைணவ இலக்கியம், பக்தி இலக்கியம் என்று துவங்கிய வகுப்பு ஒரு அழகிய விரிவை அளித்தது. மெல்ல பிரபந்த பாடல்களுக்குள் நுழைந்தவுடன், கவிதை சுவை, தமிழ் மொழியின் அழகு, பாடல்களின் கருத்தாழம் என மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருந்தது. திரு ஜா ஜா அவர்கள் எப்படி ஒவ்வொரு பாடலையும் அணுகுவது, பக்தியின் சுவையை எப்படி தவறவிடாமல், கவிதை சுவையிலும், மொழியின் அழகிலும் லயித்து கொண்டே செல்வது என்பதை சொல்லும் போதெல்லாம் மிகுந்த பிரமிப்பாக இருந்தது. இப்படியும் பிரபந்தத்தை அணுக முடியுமா என்ற வியப்பு கூடிக்கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆழ்வார்களின் பாடல்களும், அவர்கள் அதன் வழியே பெருமாளை அணுகிய விதமும், மிகவும் அற்புதம். திருமழிசை ஆழ்வாரின் பாடல்கள் மிகவும் கருத்தாழம் கொண்டவையாக இருந்தன. அவற்றில் உள்ள மறைந்திருக்கும் அத்துணை கருத்துக்களையும், திரு ஜா ஜா அவர்கள் எளிமையாவும், அதே நேரம் ஒன்றை கூட தவற விடாமல் சிறு சிறு நகைச்சுவையுடன் அனைவருக்கும் புரிய வைத்தார். சரணாகதி (பிரபத்தி) லட்சணங்கள், அனன்ய கதித்துவம், ஆகிஞ்சன்யம், கோப்ராத்வ கர்ணம்அவனருள் இன்றி அவனை அடைய முடியாது (இதை நான் முற்றிலுமாக உணர்ந்தேன்), இப்படி பல பல விஷயங்களை மேலும் மேலும் என திரு ஜா ஜா கூறிக்கொண்டே இருக்க, அனைவரும்என் சிறு குட்டனுடன்விளையாடிய படி, அவன் அளக்க முடியாத குறும்புகளை ரசித்தபடி, “நப்பின்னை காணில் சிரிக்கும்என்ற யசோதையுடன், அவள் கண்ணனுக்கு அம்மம் செய்வதை மனக்கண்ணில் கண்டோம். காதலும், ஆளுமையுமாய்பின்னும் ஆளும் செய்வன்எனும் ஆண்டாளின் காதலில் சற்றே மிரண்டு தான் போனோம். என்னே காதல்

கொட்டாய் பல்லி குட்டி”, “பூ நிலாய ஐந்துமாய்”, “ஒன்று அலாத மாயையாய்”,  “கூனல் பிறை வேண்டி”, என்று பலவாறாய் அவனை அணுகி அணுகிஎன்னையும் உன்னில் இட்டேன்என்று அவன் கைகளை இறுக பற்றிக்கொண்ட போது வகுப்பு இனிதே நிறைவுற்றது

வெள்ளிமலையின் அடர்ந்த பனி போர்த்திய நாட்களும், மிக நிறைவான பிரபந்த வகுப்பு பாடல்களும், மெய்யாகவே என்னை வேறு ஒரு உலகில் இருத்தி வைத்தது இந்த மூன்று நாட்களும்.

நான் கலந்து கொண்ட ஒவ்வொரு வகுப்பையும் நினைவு கூறுகிறேன். யோகா, ஆலய கலை, தத்துவம், இப்போது பிரபந்தம். மிகவும் உடல் சோர்வுற்று நலிந்திருந்த வேலையில், யோகம் ஒரு திறப்பை நிகழ்த்தியது. என்னுடைய ஓவிய பணியில் ஆலய கலை என்னை மேலும் ஒரு புதிய வாசலில் கொண்டு சேர்த்தது. தத்துவம் என்னுடைய மனம் ஏன் என்றும், எதற்கு என்றும் யோசித்து கொண்டு இருக்கையில் மெல்ல என் கை பிடித்து அழைத்து செல்ல துவங்கி இருக்கிறது. இப்போது பிரபந்தம், திடீரென்று பற்றிக்கொண்டு இருந்த கைகள் அனைத்தும், என்னை விட்டு விலகும் ஒரு தருணத்தில், ஒரு நொடிப்பொழுதில் அவன் என் ஆன்மாவை, கைகளை பற்றிக்கொண்டு விட்டான். அவன் என் நண்பன், அவ்வளவே. அதுவே என் நிறைவு

நான் மிகுந்த கடவுள் பக்தி உள்ள ஒருத்தி கிடையாது. என்னுடைய வழிபாடு என்பது ஒரு நாளின் வெகு சில நிமிடங்கள் மட்டுமே. அப்படியெல்லாம் இருந்தும் 

இதெல்லாம் எப்படி என்னை வந்து எனக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் வந்தமைந்தன? அவன் நினைக்காமல் எதுவும் நிகழமுடியாது அல்லவா

திரு ஜா ஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கற்றதை யார் வந்தும் மறக்க வைக்க இயலாது. மிகுந்த உண்மை! உங்கள் வகுப்பு என் ஆன்மாவுக்கு மிக அணுக்கமானது

என்னுடைய மிகுந்த அன்பை, நன்றிகளை, மைய புள்ளியாகிய உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன் ஜெ

பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய 

அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர 

மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் 

தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ” – பெரியாழ்வார் 

(இப்பாடலை ஒட்டி நான் வரைந்த ஓவியத்தை இத்துடன் இணைத்துள்ளேன்)

என்றும் அன்புடன் 

லலிதா ராகவன் 

முந்தைய கட்டுரைநூல்கள் வழியாக தரிசனங்களைப் பயிலமுடியுமா?