அன்புள்ள ஜெ,
வாழும் தமிழ் நிகழ்ச்சியின் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் இந்த ஐஸ்பிரேக்கிங் தான் பிரச்சினை. அதை சாதாரணமாகச் செய்யமுடியாது. அமெரிக்கா பற்றி அறிந்தவன் என்ற வகையில் இதை நான் சொல்லமுடியும். அங்கே எந்த ஒரு நிகழ்ச்சியும் முதலில் சந்தேகமாக மட்டுமே அணுகப்படும். அது உண்மையில் தேவையான எச்சரிக்கையும்கூட.
ஏனென்றால் பணம் சம்பாதிப்பதற்கு இதைப்போன்ற பல தந்திரங்களைச் செய்வார்கள். டுபாரக்கூர் கல்விநிறுவனங்கள் இதைப்போன்ற இலக்கிய விழாக்களை நடத்துவார்கள். சில குறிப்பிட்ட குறுங்குழுக்கள் இதைப்போல நடத்துவார்கள். அவர்கள் ஏதாவது மதம், இனம் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அங்கே ஏதாவது வில்லங்கமாகப் பேசப்படலாம். அங்கு சென்றவர்கள் அனைவருமே விசாரணை வட்டத்துக்குள் வந்துவிடநேரிடும். அதைவிட மோசமானது வெறுமே இமிக்ரேஷன் மோசடிக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள்.
ஆகவே அங்குள்ள எழுத்தாளர்கள் மிகக்கவனமாக இருப்பார்கள். நன்றாகத் தெரியாதவற்றை தவிர்ப்பார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்த முடிந்ததே உங்கள் நூல்கள் எஃப் எஸ் ஜி வழியாக வெளிவருவதுதான். இப்போது நீங்கள் அந்த தொடக்கத்தை நிகழ்த்திவிட்டீர்கள். செய்திகளில் வந்துவிட்டீர்கள். ஏற்பு வந்துவிட்டது. இனி எவரையும் எளிதில் அணுக முடியும். மேலும் விரிவாக நடத்தமுடியும். நிதியைக்கூட எளிமையாகத் திரட்ட முடியும். இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக நடத்தவேண்டும். குறைந்தது 2 ஆண்டுக்கு ஒருமுறையாவது இது நிகழவேண்டும். யோசிப்பீர்கள் என நினைக்கிறேன்.
எம். மாரிக்குமார்.









