தத்துவமும் தியானமும்

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

இரண்டாம் வகுப்பிற்கும் மூன்றாம் வகுப்பிற்கும் இரு வார இடைவெளியே இருந்ததால், சிறு குழப்பத்திற்கு பின் நண்பர்களின் ஆலோசனைப்படி பதிவு செய்துவிட்டேன். விஷ்ணுபுரம் புத்தக கடை திறப்பு விழாவில் சந்தித்தபோது, நீங்கள்  ‘மூன்றாவது தத்துவ வகுப்பிற்கு  வரீங்களாஎன்று என்னிடம் கேட்ட ஒரே கேள்விக்கு நேர்மறையாக பதில் அளிக்க முடிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்

 ஈஸோவாஸ்யா உபநிடதத்தை முழுவதுமாகவும், கடோ உபநிஷதத்தின் முதல் மூன்று பகுதிகளையும் கற்றுக் கொடுத்தீர்கள். உபநிடதம் படிக்கும் போது எவ்வாறு Needle precision தேவை என்பதும் புரிந்தது. ஒவ்வொன்றுக்கும் மிக நுண்ணிய வேறுபாடு இருக்கும். அதை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ‘தியானம் இல்லாதவர்மேதையோ ஞானியோ ஆயினும் ஆத்மாவை உணர்வதில்லைஎன்ற வரியை விளக்கும் போது, படித்தவற்றை தியானம் செய்து Self ஆக ஆக்காவிட்டால், அது செரிமானம் ஆகாத உணவு என்று கூறியது எனக்கு மிகவும் தேவையான கருத்து

சனியன்று ஆப்த வாக்கியங்கள் குறித்த அதிகாலை அமர்வு நடந்தது. நீங்கள் உரையை ஆரம்பிக்கும்போது இருளாக இருந்தது. நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று ஒரு கணத்தில் பொழுது புலர்ந்ததது. மலர் மலரும் தருணத்தை பற்றி சென்ற அதிகாலை அமர்வில் கூறினீர்கள். சூரியன் உதித்த தருணத்தை, இந்த அமர்வில் உணர்ந்தது மறக்க முடியாத தருணம்.மனதை நெகிழ வைத்த உரை. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே இதையெல்லாம் உணர்ந்து கூறி விட்டார்கள். அவர்கள் உணர்ந்ததை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் நாமும் உணர்வது எத்தனை மகத்தான அனுபவம்

நீங்கள் கூறுவது போல மிக நன்றாகவே நடிக்கிறீர்கள். உணவு கூடத்தில் இளையராஜா அவர்களை முதலில் சந்தித்த நிகழ்வை பற்றி கூறினீர்கள். அதில் ராஜா சார் Harmonium வாசித்தபடி உங்களிடம் பேசியதை நடித்து காட்டியது அற்புதம். குரல் Modulation, தலையை அசைத்து பேசுவது, அப்படியே ராஜா சார் மாதிரியே இருந்தது. அதேபோல வகுப்பில், பெரும் பணக்காரர்களின் எதிலும் ஆர்வமற்ற முகத்தையும் வைத்துக் காட்டினீர்கள். சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது.

நீங்கள் வகுப்பில் நடத்தியதை நாங்கள் எழுதிக் கொண்டிருந்தோம். நாற்காலியில் கண்ணை மூடி அமர்ந்திருந்தீர்கள். அனைவரும் எழுதும் வரை சலசலப்பு இருந்தது. எழுதி முடித்து நீங்கள் சிந்தித்து கொண்டிருப்பதை பார்த்தவுடன், யாரும் சொல்லாமலேயே மொத்த வகுப்பும் அமைதியாகிவிட்டது. மின்விசிறி ஓடும் சத்தத்தை தவிர வேறு ஓசையே எழவில்லை. அனைவரும் இணைந்து ஒரு மனமாய் செயல்பட்டதை கண்கூடாக பார்த்தேன். நீங்கள் நடத்தும் ஒவ்வொரு விழாவும் இவ்வாறு தான் நடக்கும் என்பது தெளிவாக புரிந்தது. ‘வாழும் தமிழ்மாநாடு வெற்றிகரமாக நடக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தினமும் காலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருக்கும் இளம் தலைமுறையினரை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் சரியான பாதையில் செல்ல, வழிகாட்டுவதற்கு மிகவும் நன்றி ஜெ.

என்றும் அன்புடன்

S.ராஜேஷ்வரி

கோவை.

முந்தைய கட்டுரைவரலாற்றெழுத்தும் தமிழகமும்.