சரஸ்வதியும் சாரதையும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வெள்ளிமலைக்கு வருவதென்பதே இனிமைதான். வீடு திரும்பியதும் மீண்டும் அங்கே செல்வதெப்போது என்ற ஏக்கமும் தொற்றிக் கொள்ளும். அன்றாடத்தின் அலுப்பிலிருந்து தப்பியதன் கொண்டாட்டம், அலைபேசிக்கு ஓய்வு, அலைபேசியிலிருந்து நமக்கு ஓய்வு, இனிய சுற்றுச்சூழல், இனிய நண்பர் குழாம், பறவைபார்த்தல் வகுப்பிற்குப்பின் அங்குள்ள புள்ளினமும் தாவரவியல் வகுப்பிற்குப்பின் புல்லினமும்கூட நண்பர் கூழாமில் அடக்கம். அனைத்துக்கும் மேலாக கற்றலின் இனிமை. இவை அனைத்தையும் விடுத்து இல்லம் சேர்ந்தால் ‘கைவிடு பசுங்கழை’ யென வெள்ளிமலை மீளாதோ ஏக்கமுற்ற உள்ளம்?

மேலும் அச்சூழலின் இரு பிரத்தியேக இடங்கள் மண்ணிலல்லாது விண்ணுக்குரியன. ஆம், மரத்தடி நிழலில் இளைப்பாறும் புன்முறுவல் புத்தனும் கலையரசி வாக்தேவியும். ஒவ்வொருவரும் வெவ்வேறு சூழலிலும் மனநிலையிலும் இருந்து பரபரப்பாக பயணம் செய்து வெள்ளிமலை வந்து சேர்ந்தாலும் வகுப்பு தொடங்கும்முன் நடைபெறும் மலர் அர்பித்தலின்போது புத்தனின் கருணை பொங்கும் முகத்தையும் வாக்தேவியின் வாத்சல்யத்தையும் காணும்போது அலைக்கழிப்பின் கண்காணா திரையைக் கிழித்துக்கொண்டு வேறொரு தளத்திற்குள் நுழைந்துவிடுவதை பலமுறை உணர்ந்ததுண்டு. ஞானத்தையும் கலையையும் அருளும் அருளாளர்கள்.

அதை அறிந்திருந்தாலும் கடந்த வாரம் மூன்றாம் நிலை தத்துவ வகுப்பிற்கு வந்தபோது எதிர்பார்த்திராத ஒரு ஆச்சரியமும் காத்திருந்தது. இரண்டாம் நாள் காலை எழுத்தாளர் கா.சிவா அவர்களின் நூல் ஒன்று வாக்தேவியின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. திரு. அந்தியூர் மணி அண்ணாவோடு அடியேனும் அதனை தங்களின் கரங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் பேறும் வாய்த்தது. ஆதலால் அந்நூலை அன்றே வாசிக்கவும் இயன்றது. உள்ளே படிக்கும்போதுதான் அந்நூல் அங்கு வெளியிடப்பட்டது வெறும் தற்செயலல்ல, அந்நூலை வெளியிட அவ்விடத்தைவிடச் சிறந்த இடம் பிறிதொன்றில்லை என்பதையும் அறிந்தேன்.

‘விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி, அமிழ்தலும் மிதத்தலும்’ போன்ற சிறுகதை தொகுப்புகளையும் ‘கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு’ என்ற கவிதைத் தொகுதியையும்,’தண்தழல்’ என்ற நாவலையும் எழுதிய ஒரு கலைஞனுக்கு திடீரென சொல்லெழாமல் போனதைக் குறித்துத் தொடங்கும் அவரது முன்னுரையில் வெள்ளிமலை வாக்தேவியின் முன்னிலையில் அமர்ந்திருந்த அதிகாலைப் பொழுதில் அவருக்கே அறியாமல் ஒருவித விம்மல் எழத் தொடங்குவதைக் குறிப்பிடுகிறார். அது ஏன் என எண்ணியபோது இந்த வாக்தேவி தன்னை விட்டு நெடுந்தூரம் அகன்றுவிட்டதையும் அந்த பிரிவாற்றாமையின் காரணத்தாலே ஏற்பட்ட விம்மல் இது என்றும் அவர் உணர்கிறார்.

மலை இறங்கும் நாள்வரை புலரியும் அந்தியும் அவளது முன்றிலில் கழிகிறது அவருக்கு. வீடு சேர்ந்தபின் உறக்கமில்லா இரவுகளில் அவ்வன்னையின் மீது தோன்றிய சொற்களைத் தொகுத்தபோது அது ஒரு வடிவம் கொள்கிறது.தன் அன்னையின் பிரிவிற்கு காரணமறியாத குழந்தையைப் போல உளம்குமுறி தனது பிரிவாற்றாமையைச் சொல்லாக்கி சொல்மாலையாக்கி காத்திருக்கிறார் எழுத்தாளர். பிரிவின் நாட்கள் செல்லச் செல்ல அத்துயரிலுள்ள ஒரு சிறுதுளி இனிமையைச் சுவைக்கத் தொடங்கி மெல்லமெல்ல அத்துயரிலேயே ஆழ்ந்து திளைக்கும் நிலையை எட்டும் வரை கண்டுகொள்ளாமல் இருக்கும் அம்மெல்லியவளின் வன்மையையும் அறிகிறார். இனி திரும்பவே மாட்டாளோ என எண்ணும்வேளையில் பையத் தன் பைங்குழவியின் கலைத்தாகத்தைத் தீர்க்க அமுதைக் கையில் ஏந்தி மீள்கிறாள் கலைவாணி.

அவரின் அந்த தவிப்பு மிக்க நாட்களில் நாமும் உடனிருந்தது போல் உணரவைத்த இறைஞ்சல்கள் அக்கவிதைகள். அவ்வாறு உருவான நூறு கவிதைகளைத் தொகுத்தபோது ‘சரஸ்துதி’ என்ற கவிதைத் தொகுப்பாக அது உருக்கொண்டுள்ளது. தேடிவந்த கலைஞனை வாக்தேவி கைவிடவில்லை.

இதற்கு முன்பு எத்தனையோ ஆலயங்களின் தலபுராணங்களில் இது போன்ற கதைகளைக் கேட்டபோது ஒரு சிறுமுறுவலுடன் கடந்து சென்ற எனக்கு கண்முன்னே ஒருவருக்கு இவ்வாறு நிகழ்வதும் ஒரு மூர்த்தத்தின் சாந்நித்யத்தால் கலை திரும்ப வாய்க்கப்பெறுவதையும் காணும்போது தோன்றுகிறது ‘ஒவ்வொரு கதையிலும் ஒருதுளி வரலாறும் ஒவ்வொரு வரலாறிலும் ஒரு துளி கதையும் அடங்கியுள்ளது’ என்பது எத்தனை உண்மை என்று.காலங்காலமாய் வெள்ளிமலை இருந்தது ஒரு காடென. இன்று இந்த நித்யவனம் இவ்வன்னையின் இருப்பால் மாறியுள்ளது சொல்வளர்காடென (சொல் தொடங்கவும் வளரவும் மட்டுமல்ல இடைநிற்றலிலிருந்து மீளவும்!).

அன்புடன்

 

இரா. செந்தில்

 

முந்தைய கட்டுரைதத்துவமும் தியானமும்
அடுத்த கட்டுரைதத்துவமும் நாமும்