மேகங்களின் குரல் 3

 

மேகங்களின் குரல் 3

இருளை வைத்து இருளை துடைக்கலாமா?

சரளாராணி சௌதராணி என்னும் பெண்மணி பற்றி நான் அறிந்துகொண்டது காந்தியைப் பற்றி சரியாக அறிந்துகொள்வதற்கும் முன்பு என்பது இன்று ஆச்சரியமளிக்கவில்லை. பொதுவாக நம் சூழலில் எதிர்மறை விஷயங்கள் அதிகமாகக் கவனிக்கப்படுகின்றன. அதிகம் வாசிப்பவர்கள் இளைஞர்கள்தான். அவர்கள் எதிர்மறைத்தன்மை கொண்ட விஷயங்களை அதிகமாக விரும்புகிறார்கள். கொந்தளிக்கும் இளமைமனம் கொந்தளிப்பானவற்றை நாடுகிறது. காந்தியின் காதலி சரளாராணி.

இளமையில் காந்தி நமக்குப் பிடிப்பதில்லை. ஏனென்றால் நமக்கு தந்தை போலத் தெரிகிறார், நாம் அப்போது அவரவர் தந்தைகளுக்கு எதிராகத்தான் சிந்தித்துக்கொண்டிருப்போம். அவரிடமிருந்து முரண்பட்டு சொந்தமாக வளர்ந்து அவர் முன் நின்றிருப்பதைப் பற்றிய கனவுகளில் திளைத்துக் கொண்டிருப்போம். அத்துடன் காந்தி இந்திய அரசின் அடையாளம். ஆகவே இங்குள்ள அதிகார அமைப்பின் முகமாக நமக்கு தெரிகிறது. அதை எதிர்த்தால்தானே நாம் சிந்திக்கும் இளைஞராகத் திகழமுடியும்?

ஆகவே இளைஞர்கள் காந்தியைப் பற்றி எதுவும் தெரியாமல், காந்திக்கு எதிரான செய்திகள் அனைத்தையும் திரட்டிக்கொள்வார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன். ஆங்கில இடதுசாரி இதழ் ஒன்றில் இருந்து சரளாராணி பற்றிய செய்தியை அறிந்தேன். அதை எழுதியவர் ஒரு வங்காளி. பொதுவாகவே வங்காளிகள் காந்திக்கு எதிரானவர்கள். காந்தியை நிராகரித்து அந்த இடத்தில் அரவிந்தர், அல்லது சுபாஷ் சந்திரபோஸை வைக்க அவர்கள் விரும்புவார்கள். காரணம் அவர்களிடம் எப்போதுமுள்ள வங்காளப் பற்று. அது அவர்களிடம் கொஞ்சம் மேட்டிமைவாதமாகவே வெளிப்படுவதுமுண்டு.

சரளாராணி சௌதராணி பற்றி இன்று இணையத்திலேயே நிறைய தெரிந்துகொள்ளலாம். 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி, கொல்கத்தாவின் ஜோராசங்கோவில் பிறந்தார். இவர் தந்தை ஜானகிநாத் கோஷல் புகழ்பெற்ற அரசியல்வாதி. அன்னை சுவர்ணகுமாரி தேவி தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் பிரம்மசமாஜம் என்னும் ஆன்மிக அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான தேவேந்திரநாத் தாகூரின் மகள். சுவர்ணகுமாரியைப் பற்றிய ஒரு செய்தியின் அடிப்படையில் பாரதியார் சுவர்ணகுமாரி என்னும் சிறுகதையை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. அதில் தேசவிடுதலைக்கு எதிராக பேசியமையால் தன் காதலனை கைவிடும் முடிவை எடுத்த வீரப்பெண்மணியாக சுவர்ணகுமாரி சித்தரிக்கப்படுகிறார்.

சரளாராணி 1890 ஆம் ஆண்டில் கல்கத்தா பெத்யூன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதல்மாணவிக்கான தங்கப்பதக்கம் பெற்றார். இன்று அவர் மாணவியாக இருந்தபோதே சுதந்திரப்போராட்டத்திலும், பயங்கரவாத இயக்கங்களிலும் ஈடுபட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது, ஆனால் அதற்குச் சான்றுகளில்லை. அவர் தன் குடும்பத்தில் இருந்தேபாரதிஎன்னும் இலக்கிய இதழை நடத்தினார். 

1905ல் சரளாராணி ராம்புஜ் தத் சௌதுரி என்னும் தேசிய இயக்கத் தலைவரை திருமணம் செய்துகொண்டு பஞ்சாப் சென்றார். இந்த திருமணமே கொஞ்சம் மர்மமானதுதான். சரளாராணி குடும்பம் பிரம்மசமாஜத்தின் முன்னணி முகம் எனப்பட்டது. ராம்புஜ் பிரம்மசமாஜத்திற்கு எதிரான ஆரியசமாஜத்தில் தீவிர ஈடுபாடுகொண்டவர். 1905ல் பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில் சரளாராணி வந்தே மாதரம் பாடலைப் பாடியதாகவும் ஆகவே வங்காளத்தில் சரளாராணிக்கு எதிராக அரசுநடவடிக்கைகள் உருவானதனால்தான் அவர் பஞ்சாபுக்குத் திருமணம் செய்து அனுப்பப்பட்டார் என்கிறார்கள். ராம்புஜ் சௌதுரி மிதவாதத் தலைவர்.

பஞ்சாப்பில் சரளாராணி கணவர் நடத்திய இந்துஸ்தான் என்னும் மிதவாத இதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். அக்காலத்தில்தான் அவர் காந்தியைச் சந்தித்தார். ஜாலியன் வாலாபாக் நிகழ்வுக்குப் பின் 1919 ல் பஞ்சாபில் சுற்றுப்பயணம் செய்த காந்தி சரளாராணியால் ஈர்க்கப்பட்டார். சரளாராணியும் காந்தியும் அன்றாடம் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். சரளாராணியின் கவிதைகள், கட்டுரைவரிகளை அவர் தொடர்ந்து தன் உரைகளில் மேற்கோள் காட்டினார். காந்தி சரளாராணியை தன்அறிவுத்துணைவிஎன்றும்ஆத்மாவின் தோழிஎன்றும் குறிப்பிட்டார். சரளாராணியின் கட்டுரைகளும் கடிதங்களும் காந்தி நடத்திய இதழ்களில் வெளியாயின.

இந்த உறவு ஓராண்டுக்காலம் மட்டுமே நீடித்தது. காந்தி 1920ல் சரளாராணியை முறையாக திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் ராஜாஜி, மகாதேவ தேசாய் போன்றவர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர். அது காந்தியின் நம்பகத்தன்மையையும் எதிர்காலத்தையும் அழித்துவிடும் என்றார்கள். காந்திக்கு அப்போது ஐம்பத்தொரு வயது. சரளாராணிக்கு முப்பத்தெட்டு வயது. தீபக் என்னும் மகனும் இருந்தான். அவர் கணவரும் உயிருடனிருந்தார். அந்த உறவை இந்தியச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றார் ராஜாஜி. ஆனால் காந்தி வழக்கம்போல பிடிவாதமாக இருந்தார். தங்களுடையது உடற்காதல் அல்ல அறிவார்ந்த ஈர்ப்பு என்று வாதிட்டார்.

காந்தியின் மகன் தேவதாஸுக்கு அப்போது இருபது. அவர் நேரில் வந்து காந்தியிடம் கஸ்தூர்பா காந்தியின் தரப்பை யோசிக்கும்படி மன்றாடினார். கஸ்தூரிபா உடைந்துவிடுவார் என்று எடுத்துச் சொன்னார். அதை உணர்ந்து காந்தி சரளாதேவிக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு அந்த தொடர்பை நிறுத்திக்கொண்டார். இந்தச் சுருக்கமான உறவைப் பற்றி காந்தி தன் சுயசரிதையில் பெயர் சொல்லாமல் குறிப்பிடுகிறார். ‘என் ஆணவம் என்னை ஒரு தீயாலான பாதைக்குள் கொண்டுசெல்லப் பார்த்தது. அந்த ஈர்ப்பில் இருந்து விடுபட்டேன்என்கிறார்.

ஆனால் சரளாராணி கடுமையாகப் புண்பட்டார். காந்தியை மிகக்கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரைகளும் கடிதங்களும் எழுதினார். காந்தியின் நம்பகத்தன்மையையே அழிக்கும் வெறியுடன் செயல்பட்டார். காந்தியின் எல்லா செயல்களும் இந்தியாவுக்குத் தீங்கிழைப்பவை என்று வாதிட்டார். இன்று வங்காளத்தின் காந்தி எதிர்ப்பாளர்கள் பலர் அவற்றை மேற்கோள் காட்டுகிறார்கள். காந்தி அந்த எதிர்ப்பை மௌனத்தால் எதிர்கொண்டார். தன் பெரும்பணியால் கடந்துசென்றார்.

சரளாராணியின் கணவர் 1923ல் மறைந்தார். சரளாராணி கல்கத்தாவுக்கு திரும்பி பாரதி என்ற இலக்கிய இதழை தொடர்ந்து நடத்தினார். பின்னர் அரசியல், இலக்கியம் இரண்டிலிருந்தும் விலகிக்கொண்டார். பிஜோய் கிருஷ்ணா என்னும் மதத்தலைவரின் அதிதீவிர மாணவியாக ஆனார். அவர்களுக்கிடையே ராதாகிருஷ்ண பாவத்திலான உறவிருந்தது எனப்படுகிறது. சரளாராணி பிஜோய் கிருஷ்ணா பற்றி நிறைய எழுதினார். சரளாராணியின் தன்வரலாற்றில் (ஜீபனோர் ஜார பாதா) அவர் தன் ஆன்மிகவாழ்வு பற்றியே அதிகமும் எழுதியிருக்கிறார்.

சரளாராணி ஆன்மிகப்பாதைக்குச் சென்றபின் காந்தி பற்றி நல்லெண்ணத்துடன் எழுதியிருக்கிறார். ஒரு சில சம்பிரதாயமான கடிதங்களும் அவர்களிடையே பரிமாறப்பட்டுள்ளன, அவை பொதுவெளியில் உள்ளன. சரளாராணியின் தன்வரலாற்று நூல் The Scattered Leaves of My Life என்றபெயரில் ஆங்கிலத்தில் சிகதா பானர்ஜி மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் 2011ல் வெளியாகியது.

நான் சரளாதேவி சௌதராணியின் காந்தி எதிர்ப்புக் கட்டுரைகள் மற்றும் கடிதங்களை படித்து ஆவேசத்துடன்  கேரளத்தின் முதன்மையான  காந்தியவாதியும் கவிஞருமான ஜி.குமாரபிள்ளையிடம் பேசியிருக்கிறேன். “சரளாராணியின் அறிவாற்றல் காந்திக்கு நிகரானது. ஆகவே அவர் சொன்னால் எப்படி அது பிழையாக இருக்கமுடியும்?” என்று வாதிட்டேன். 

நீங்கள் முதலில் காந்தியை படியுங்கள், அவரை புரிந்துகொள்ளுங்கள்.என்று ஜி.குமாரபிள்ளை சொன்னார். நான் வாசிக்கவேண்டிய நூல்களை அவர்தான் பரிந்துரை செய்தார்.

காந்தியை நான் இரண்டு தளங்களில் பொருத்திப் புரிந்துகொண்டேன். ஒன்று, அன்றைய உலகச் சூழல். அன்று உலகமே போர்வெறிகொண்டிருந்தது. இரண்டு உலகப்போர்களுக்கு நடுவே இருந்த காலம் அது. இரண்டு, அன்றைய இந்தியா பிரிட்டிஷாரின் நிகரற்ற ராணுவவல்லமையால் ஆட்சி செய்யப்பட்டது. அச்சூழலில் வன்முறை அற்ற ஒரு போராட்டம் வழியாகவே இந்தியா விடுதலை பெறமுடியும் என்று காந்தி கண்டடைந்தது ஒரு மாபெரும் அரசியல் ஞானம்.

அதேபோல, அடிப்படையான அதிகாரம் என்பது ராணுவத்திடமில்லை, மக்களிடமுள்ளது, மக்களைத் திரட்டிவிட்டால் உண்மையான அரசியல் மாற்றம் வரும் என அவர் உணர்ந்தது உலக அரசியலிலேயே ஒரு மகத்தான தரிசனம். இன்று, இந்தியா விடுதலை அடைந்து நூறாண்டு நெருங்கும்போது காந்தி அரசியல் ஞானியாக கருதப்படுவது அந்த இரண்டு மெய்யுணர்வுகளால்தான்.

இன்னொரு தளத்திலும் நான் காந்தியையும் சரளாதேவியையும் புரிந்துகொண்டேன். எந்தச் சிந்திக்கும் ஆணுக்கும் ஒரு  சிந்தனைத் துணைவி என்னும் ரகசியக் கனவு உண்டு.பல சிந்தனையாளர்கள் வாழ்க்கையின் நடுவயதில் இன்னொரு துணைவிநோக்கிச் செல்வது அதனால்தான். 

அதைப்போல ஒரு சிந்திக்கும் பெண் சிந்தனையாளன் நோக்கி ஈர்க்கப்படுவதும் இயல்பானது. சரளாராணி மகனும் கணவனும் இருக்கையிலேயே காந்தியால் ஈர்க்கப்பட்டது பெரிய பாவம் ஒன்றுமில்லை. அவ்வாறு ஈர்க்கப்படவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

ஆனால் காந்தி அவ்வுறவின் எதிர்விளைவுகளை உணர்ந்து விலகிக்கொண்டார். சரளாராணி அதை அவமதிப்பாக எடுத்துக் கொண்டார். அவருடைய எதிர்வினையும் புரிந்துகொள்ளத் தக்கதே. ஆணவம் புண்படுபவர்கள் கடுமையான சீற்றத்திற்கு உள்ளவாது, தீமையையே ஆயுதமாக எடுத்துக்கொள்வதும் எங்கும் காணப்படுவதுதான்.

உண்மையில் எனக்கு ஏற்பட்ட கேள்வி இன்னொன்று. சரளாராணி மிகச்சிறந்த அறிஞர், காந்தியைவிட அரசியலை ஆழ்ந்து பயின்றவர், கவிஞர், எழுத்தாளர். காந்தியுடன் அணுகியே பழகியிருக்கிறார். காந்தியின் செயல்திட்டங்களை அவர் ஏன் புரிந்துகொள்ளவில்லை? காந்தி தன் காலகட்டத்தில் வெகுவாக முன்னகர்ந்து பறந்துசெல்லும் மகத்தான வழிகாட்டி என அவருக்கு உண்மையில் புரியவில்லையா? அல்லது புரிந்தே வன்மத்தைக் கொட்டினாரா?

ஜி.குமாரபிள்ளை சொன்னார்சரளாதேவியின் கட்டுரைகளை படித்துப் பாருங்கள். அதில் ஓங்கி ஒலிப்பதுநான்என்னும் சொல்தான். தன் பார்வையே சரியானது, தனக்கு எல்லாம் தெரியும் என்றுதான் எப்போதும் அவர் சொல்கிறார். அறிஞர்களிடமிருக்கும் அஞ்ஞானம் என்பதே இதுதான். ஆணவத்துடன் இணையும்போது அறிவே அறிவை மறைக்க ஆரம்பித்துவிடுகிறது

சரளாதேவி போன்றவர்களை நாம் உலகவரலாற்றில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். புத்தருக்கே அவருடைய நெருங்கிய உறவினரான தேவதத்தன் முதன்மை எதிரியாக விளங்கினார். பெரும்பாலான ஞானிகளின் வாழ்க்கையில் அழுக்காறு கொண்டு அவர்களை அழிக்கத்துணிந்தவர்களை காண்கிறோம். அவர்களும் சாமானியர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் பேரறிஞர்கள். அவர்களுக்கு ஏன் உண்மை புலப்படவில்லை? எது அவர்களை விழியற்றவர்களாக்குகிறது?

அது பற்றிய உரையாடலில் ஜி.குமாரபிள்ளை அந்த உபநிடத வரியைச் சொன்னார். ஈஸோவாஸ்ய உபநிடதத்தின் அந்த வரியை  நாராயணகுரு பலமுறை மேற்கோள்காட்டியுள்ளார். தொடர்ச்சியாக என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் அந்த வரி எனக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அவ்வப்போது ஒலிக்கும்.

அறியாமையை வழிபடுவோர் இருளில் இருக்கிறார்கள். அறிவை வழிபடுவோர் அதைவிடப்பெரிய இருளில் இருக்கிறார்கள்’.(அந்தம் தம பிரவிஸந்தி யே வித்யாமுபாசதே, ததோ ஃபூய இவ தே தமோ ய உ வித்யாம் தத!)

அறிவு உருவாக்கும் இருட்டை ஒவ்வொரு முறை ஆணவம் மிக்க அறிஞர்களைக் பார்க்கும்போதும் கண்டுகொண்டிருக்கிறோம்.அதற்கு மாற்றாக அறிவின்மையை பலசமயம் முன்வைக்கிறோம். அறிவின் இருளுக்கு மாற்று என்பது அறியாமையின் இருள் அல்ல, மெய்யறிவின் ஒளிதான்.

தன் முதுமையில் அதுவரை தன்னை இயக்கிய கூரிய அறிவையும் அதன் ஆணவத்தையும் சௌதராணி கைவிட்டார், பிறகுள்ள எழுத்துக்களில் அவருடைய எளிமையான உணர்ச்சிகரமனமே வெளிப்படுகிறது. அந்த எளிமையைக்கொண்டு அவர் பின்னர் காந்தியைப் புரிந்துகொண்டார்.

முந்தைய கட்டுரைமேகங்களின் குரல் 2
அடுத்த கட்டுரைmarubumi 1