“முழுமை அறிவில் உங்களுடைய இன்றைய காணொலியும் அதை ஒட்டிய ஏன் கலைகளில் ஈடுபடவேண்டும் என்ற சிறப்பான சிறிய உரையை கேட்டேன். நீங்கள் மிக இயல்பாக ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருப்பதுப்போல ஆழமான ஒரு கருத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தீர்கள் நமது அன்றாட வேலைகளிலிருந்து கலையில் ஈடுபடுவது எவ்வளவு அவசியம் எவ்வளவு முக்கியம் என..சில கேள்விகளை நம் அகம் எழுப்பிக்கொண்டே இருக்கும் அதற்கான பதில் வரும் வரை அந்தக்கேள்விகள் நம்மை சுற்றி பயணித்துக்கொண்டே இருக்கும்.சரியான விடை கிடைத்ததும் மனம் அமைதியாகிவிடும்.
அன்றாட அவதிகளின்பால் துயருறும் பொழுதெல்லாம்” விஜி நீ எப்ப எழுதப்போற நீ எழுது உனக்கான விடுதலையும் ஆன்ம சுதந்திரமும் அதுதான் ” என ஒரு குரல் மனதினுள் ஒலித்துக்கொண்டே இருக்கும் அதைப்பொருட்படுத்தாது உடல் வேறு குடும்ப வேலைகளில் ஈடுபடும் வேறு வழியில்லை அது நமது கடமை வீட்டிலுள்ள மற்ற பெண்கள் வீட்டில் நிம்மதியாக மகிழ்ச்சி யாக தானே இருக்கிறார்கள் நாம் ஏன் கிடைக்கும் சில மணிநேரங்களையும் படிக்கிறேன் எழுதுகிறேன் என சிக்கலாக்கிக்கொள்ளவேண்டும் ஒருவேளை நம் கடமையை செய்வது தான் நமக்கு விதிக்கப்பட்டதோ நாம் தான் கலைகளின் மீது பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கையை குழப்பிக்கொள்கிறோமோ எனத்தோன்றிக்கொண்டே இருக்கும்.
அதற்கான விடை இந்தக்காணொளி.கலைகள் தான் வாழ்தலின் பொருள் .ரசனைகளின் உச்சம் .தனித்துவம் என அனைவரின் மனதிலும் பதிய வைக்கிறீர்கள் அதுதான் உண்மையும் என உங்களின் பேச்சு வழியாக ஆழமாக உணர்கிறேன் மனம் அமைதிமானது. உண்மை அலங்காரமில்லாதது ஆனால் மிக அழகானது அமைதியானது.
எவ்வளவு அழகாக இருக்கிறது அந்தக்காணொளி எடுக்கப்பட்ட இடம் . சூரியனின் ஆரஞ்சு வண்ணக்கதிரில் மின்னும் குளம் பூக்கள் ஈரம்படிந்த தாவரங்கள் எங்கும் பசுமை .அற்புதம்.
என்றும் அன்புடன்
தேவிலிங்கம்.











