அமெரிக்காவில் வாழும் தமிழ்

அன்புள்ள ஜெ,

வாழும்தமிழ் இலக்கிய விழா இங்குள்ள இளைய தலைமுறையினரிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இளம் மாணவர்கள் பலர் என்ன நடக்கிறது, எப்படிப் பங்குகொள்வது என்று கேட்கிறார்கள். இந்த விழாவுக்கான தொகுப்பாளர்கள் முடிவாகிவிட்டனர். பங்கேற்பாளர்களும் அட்மிஷன் முடிந்துவிட்டது என்றார்கள். இந்த அறிமுகத்தை தொடற்சியாக முன்னெடுப்பது எப்படி? என்னென்ன திட்டங்கள் உள்ளன?

ஶ்ரீராம் கோவிந்த்

அன்புள்ள ஶ்ரீராம்,

இங்குபோலவே அங்கும் இந்தியச் சமூகம் அதன் இளைய தலைமுறையை முறைசார் கல்வியில் மூழ்கடிக்க, ஒரு துளி இல்லாமல் ஆழ்த்திவைக்கவே முயல்கிறது. அதன் வெற்றி மட்டுமே அளவிடப்படுகிறது. ஆகவே மிகமிகச் சிறுபான்மையினரான இளைஞர்களிடம் மட்டுமே இலக்கியம் இன்றைய சூழலில் சென்று சேரமுடியும். 

அமெரிக்காவின் இந்தியதமிழ்ச் சமூகத்தில் அமெரிக்காவின் தீவிர இலக்கியம் அறிமுகமாகியிருப்பதும் மிகக்குறைவு. அவர்கள் படிப்பதும் அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக எழுத்தாளர்களின் அனைவரும் படிக்கும் நூல்களையே. அமெரிக்காவின் இலக்கிய எழுத்தே அங்கே சற்றுதலைமறைவாகமட்டுமே உள்ளது. ஒரு பெரிய புத்தகக் கடையிலேயே சென்று தேடினாலொழிய இலக்கியநூல்கள் கிடைக்காது. அனைவருக்கும் உரிய வணிகநூல்கள், இளைஞர்களுக்கான நூல்களே அதிகம். 

ஆனால் அங்கு இளைய தலைமுறையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் நிறைய இருக்கவே வாய்ப்பு. . ஆகவே அமெரிக்காவுக்கு மட்டுமான இலக்கிய சூழலை  இளைஞர்களுக்காக மட்டும் முன்வைக்கும், சிறிய நிகழ்வுகளை, ஆங்கிலத்தில் ஒருங்கிணைக்கலாம். அமெரிக்க இலக்கிய எழுத்தையும், தமிழ் இலக்கிய எழுத்தின் மொழியாக்கங்களையும் முன்வக்கலாம். அமெரிக்க ஆங்கிலத்தில் நிகழ்ந்தாலொழிய அவர்களால் அவற்றை பின்தொடர முடியாது. ஒரு சில நிகழ்ச்சிகளை அப்படி யோசிக்கலாம் என்று படுகிறது. பார்ப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரைபக்தியும் இந்தியாவும்.