அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஓவியம் குறித்த உங்களுடைய வகுப்பை பற்றி செய்திகளைப் பார்த்தேன். ஓவியம் வரைவது என்பது ஒரு பயிற்சி. அது ஓவியத்தை தொழிலாக எடுத்துக் கொள்வதற்கோ அல்லது ஓவியத்தை வைத்து புகழடைவதற்கோ மட்டும் உரியது அல்ல. ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அளவுக்கு அபாரமான் திறமைகள் இருக்கும். ஆனால் ஓரளவுக்கு வரைவதற்கான பயிற்சியை அனைவருமே பெற முடியும் என்பதுதான் நடைமுறை உண்மை. அத்தகைய ஒரு பயிற்சியை பெறும் ஒருவருக்கு ஒரு ஆழ்ந்த தியானப் பயிற்சி கிடைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நான் அமெரிக்காவில் இருந்த காலகட்டத்தில் சாமானியர்கள் கூட ஒரு காகிதமும் வண்ணங்களை எடுத்துக் கொண்டு வந்து இயற்கை சூழ்ந்த ஒரு இடத்தில் அமர்ந்து நிதானமாக பல மணி நேரம் எடுத்துக் கொண்டு இயற்கைக் காட்சியை கூர்ந்து பார்த்து வரைவதை பார்த்து இருக்கிறேன் .நான் ஒருவரிடம் பேசிய போது அவர் தொழில்முறை ஓவியர் அல்ல என்றும், அந்த வரைந்த காகிதத்தை பெரும்பாலும் வீட்டுக்கு கொண்டு சென்று ஒரு கோப்பில் சேர்த்து விடுவதாகவும் சொன்னார்.
“நான் சாதாரணமாக மூன்று மணி நேரம் அமர்ந்து இந்த ஏரியையும் மலைகளையும் பார்ப்பது என்பது சாத்தியமே கிடையாது. அதிகபட்சம் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் பார்த்துவிட்டு நாம் சென்று விடுகிறோம். ஆனால் ஒரு வண்ணத்துடன் ஓவியம் வரைந்தால் ஒவ்வொரு நுணுக்கமான தகவலையும் நாம் கூர்ந்து பார்க்கிறோம். ஒவ்வொரு காட்சியையும் அணு அணுவாக பார்க்கிறோம். மனதில் இருந்து இந்த இயற்கை காட்சி ஒருபோதும் மறைந்து போக முடியாது.” என்று அவர் சொன்னார்.
“எங்களுக்கு ஒரு வாழ்நாளிலேயே அதிகபட்ச 60 அல்லது 70 வசந்த ]காலங்கள்தான் கிடைக்கும். வசந்தகாலம் என்பது முப்பதுநாட்கள். இந்த எழுபது வசந்த காலங்களிலும் குறைந்தது ஐந்து படங்கள் வீதம் நான் வரைந்து விட்டேன் என்றால் 350 படங்களை வரைவதற்கான வாய்ப்புதான் எனக்கு வாழ்க்கையில் இருக்கிறது. 350 இயற்கை அனுபவங்கள் மட்டுமே எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் அர்த்தம். இதுதான் என் வாழ்க்கையின் உண்மையான இன்பம் என்று நான் நினைக்கிறேன். ஆகவே தான் இந்த படங்களை வரைகிறேன்” என்று அவர் சொன்னார்.
அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அத்தகைய ஒரு பார்வையை நான் யோசித்ததே இல்லை, இந்தியாவில் நாம் எவருமே இயற்கை நின்று பார்ப்பதில்லை. ஒரு கணம் இரண்டு கணம் பார்த்துவிட்டு திரும்பி பேச ஆரம்பித்து விடுகிறோம் .இயற்கையில் தோய்வதற்கும் ,இயற்கைக் காட்சிகள் நம் நினைவில் நிரந்தரமாக தங்குவதற்கும், ஓர் ஆழ்ந்த அனுபவமாக அதை மாற்றிக் கொள்வதற்கும் உகந்த வழி ஓவியம் வரைவதுதான்.
ஓவிய அடிப்படைகளையும் வண்ணங்கள் கரைப்பதையும் கொஞ்சம் கற்றுக் கொண்டால் அதன் பிறகு நாம் வரைய ஆரம்பிக்கலாம். நமது ஓவியங்களைப் பற்றி நாம் எவரிடமும் கருத்து கேட்கத் தேவையில்லை. அதை எவரும் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. நாம் அமைதியாக மனம் ஒருங்கிணைந்து இயற்கையுடன் கலந்து சில மணி நேரங்களை செலவிடுகிறோம் என்பதே நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பயன்.
இன்று நமது இளைஞர்கள் சிறுவர்கள் மின்னணு பொருட்களின் மூழ்கிக் கிடக்கிறார்கள் .அவர்களால் எதையுமே கவனிக்க கவனத்தை குவிக்கவும் முடியவில்லை. கவனத்தை குவிக்க மிகச்சிறந்த வழி என்பது ஓவியம் வரைவதுதான். நம் குழந்தைகளுக்கு ஓவியத்தை அறிமுகம் செய்வது அவர்களுக்கு கவனிக்கும் பயிற்சியை அளிக்கும்.
ஓவியம் வரைவது வீணடிக்கப்படும் நேரம் அல்ல. அவர்களுக்கு கவனக்குறிப்பு பயிற்சி உருவாகிறது. மட்டுமல்ல அவர்கள் கணிப்பொறி போன்ற துறைகளில் எதிர்காலத்தில் ஈடுபடுவார்கள் என்றால் வண்ணங்களின் கலவை, படச் சட்டம், காட்சியின் ஒத்திசைவு போன்ற ஏராளமான நுணுக்கமான காட்சிக்கலைத் தகவல்கள அவளுக்கு உருவாகும். அது ஒரு ஒரு பிரசன்டேஷனை அளிப்பதற்கும், ஒரு வெப்சைட்டை வடிவமைப்பதற்கும், ஏன் ஒரு சாதாரண செய்தியை அழகாக முன் வைப்பதற்கு எல்லாம் கூட உதவிகரமாக இருக்கும்.
இந்த அடிப்படையான பயிற்சியை இளைஞர்களுக்கு நாம் அளிக்க வேண்டும். இந்த பயிற்சி தொடர்ந்து உங்களுடைய அமைப்பின் வழியாக தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சாந்தகுமார் ஜி.ஆர்.











