அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளிகள் நடுவே இல்லாமல் இருந்தன. அவை மீண்டும் வர ஆரம்பித்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் காணொளிகளை போடுவதை நிறுத்தி விட்டீர்கள் என்று எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இந்த காணொளிகள் நான் காலைநடையில் வழக்கமாக கேட்பவை. பெரும்பாலானவர்கள் பாடலை கேட்டுக்கொண்டு கால்நடை செல்வார்கள் என்பது உண்டு. ஆனால் அதிக நேரம் பாடல்களை கேட்க முடியாது. ஓரிரு நிமிடங்கள் பாட்டு கேட்ட உடனே மனம் எங்கெங்கோ பறக்க ஆரம்பித்து விடும். தேவையில்லாமல் பிற உரையாடல்களை கேட்பதும் அதிலிருந்து சமகால அரசியல் சினிமா என்று சென்று விடுவதும்தான் நடக்கும்.
இந்த காணொளிகளை கேட்டபடி நடக்கும்போது ஒரு நாளில் குறைந்தது அரை மணி நேரமாவது ஆழமான சிந்தனைக்கும் இந்த உலகம் பற்றிய ஒரு ஒட்டுமொத்தமான தத்துவார்த்தமான பார்வைக்கும் செல்வதற்கான வழி அமைகிறது. உங்களுடைய காணொளிகள் எதையுமே எளிமையான பேசுபொருட்களை கொண்டவை அல்ல. அன்றாட அரசியலையும் அல்லது வம்புகளையும் பேசுபவை அல்ல. அவை ஒரு எழுத்தாளன் தன் தீவிரவாசகர்களை நோக்கி பேசும் தன்மை கொண்டிருந்தன. அந்த வகையான காணொளிகளை தொடர்ந்து நீங்கள் போட வேண்டும் என்று விரும்புகிறேன்.
அவற்றுக்கான பார்வையாளர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்ததை ஒரு காணொளியில் சொல்லியிருந்தீர்கள். இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள் வழியாக சென்று சேர்வ்து எல்லாமே எதிர்மறைச் செய்திகள் தான். எதிர்மறைச் செய்திகளைத்தான் லாகிருதங்கள் கொண்டு சென்று சேர்க்கின்றன. ஆகவே அவைதான் அதிகம் கவனிக்கப்படுகின்றன. கவனிக்கப்படுவதனால் அவை அதிகம் வெளியாகின்றன. மேலும் எல்லா வசைகளும் இன்னொரு புகழ்பெற்ற காணொளியின் மீதான எதிர்வினைகள்.அதாவது நீங்கள் விஜய் பேசியதை வசைபாடினால் விஜய் சொன்னதை கவனித்தவர்களில் ஒரு சாரார் உங்களைக் கவனிப்பார்கல். இப்படி ஒன்றிலிருந்து ஒன்றுக்காகத்தான் காணொலிகளுக்கு மக்கள் செல்கிறார்கல்.
அது மட்டுமல்ல பெரும்பாலானவர்களுக்கு இந்த வகையான தீவிரமான விஷயங்களில் ஒரு தொடக்கம் இல்லை .ஆனால் அரசியல் சினிமா ஆகியவற்றில் அவர்களுக்கு ஏற்கனவே ஒரு தொடக்கம் இருக்கிறது. அவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்திலிருந்து தான் தெரியாத ஒரு விஷயத்துக்கு அவர்கள் நகர முடியும். ஒரு தொடக்கம் வந்த பிறகுதான் இந்த மாதிரி விஷயங்களுக்குள் நுழைய முடிகிறது. நேற்று எதை பேசியிருந்தோமோ அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று ஒன்றைப் பேசுகிறார்கள் சாமானிய மக்கள்.
ஆகவே இந்த வகையான உரைகளுக்கு உடனடியான வாசகர்கள் வருவது குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இங்கு வரும் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். என்னை போன்றவர்கள் அதிகம் படிக்க முடியாதபடி கண் பார்வை பிரச்சனை கொண்டவர்க்ள். எங்களுக்கு ஒரு ஒருஒரு தரமான நேரமாக இந்த காணொளிகள் அமைந்துள்ளன .ஆகவே இவை தொடர்ந்து வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவற்றின் வழியாக தொடர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் ஒரு அனுபவம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளர், ஒரு சிந்தனையாளர் நம்முடன் தொடர்ந்து உரையாடுவது என்பது இந்த நூற்றாண்டு நமக்கு அளிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. அதை என்னை போன்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்பு சரவணக்குமார்.












