
அன்புள்ள ஜெ,
உங்கள் முகநூல் காணொலிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் வழியாகத்தான் எனக்கு உங்கள் படைப்புலகம் தெரிய வந்தது. முகநூல் தற்செயலாக என்னக்கு உங்கள் காணொலி ஒன்றை காட்டியது. அதில் நீங்கள் அறிவியலைப் பற்றி பேசியிருந்தீர்கள். அறிவியல் பற்றிய தொடர்ச்சியான காணொளிகள் எனக்கு புதிய தொடக்கத்தை உருவாக்குவதாக இருந்தன.
நான் பொறியியல் படித்துவிட்டு மென்பொருள் துறையில் பணியாற்றுபவன்.ஆனால் அறிவியல் என்பது ஒரு தர்க்கபூர்வமானது என்று தெரிந்திருந்தாலும் அதற்கு ஒரு விரிவான தத்துவ அடிப்படை எல்லாம் உண்டு என்ற கோணத்தில் நான் யோசித்ததே இல்லை. கடந்த காலங்களில் பொறியியலில் நான் புரிந்து கொள்வதிலும் அவற்றை விளக்குவதிலும் எனக்கு இருந்த எல்லாச் சிக்கலும் ஒரு தொழில்நுட்பத்தின் தத்துவத்தை தெரியாத காரணத்தினால்தான் என்று நீங்கள் பேசியதைநைப் பார்த்தபோது சட்டென்று புரிந்துகொண்டேன்.
ஒரு மென்பொருளை நான் விளக்கும்போது அதில் இயங்கும் முறைகளை தர்க்கபூர்வமாக என்னால் வகுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் எனக்கு அறிவியல் தர்க்கம் எந்த வகையில் அறிமுகமாகவே இல்லை என்பதுதான். வெறும் தகவல்களை அறிவியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அறிவியல் என்றால் ஆச்சரியமான தகவல் என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி வகையிலே இருக்கிறோம். அதுதான் இன்று வரைக்கும் நீடிக்கிறது
அந்த காணொலிகளை வழியாக உங்கள் தளத்திற்கு வந்து இப்போதுதான் கட்டுரைகளை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். நான் தொடர்ந்து தமிழில் வெவ்வேறு எழுத்தாளர்களை நிறையவே படித்திருக்கிறேன். எஸ் ராமகிருஷ்ணன் படைப்புகள் அனைத்துமே ஏறத்தாழ படித்திருக்கிறேன்.அவருக்கு முன் சாரு நிவேதிதாவின் படைப்புகளை முழுமையாக படித்திருக்கிறேன். உங்கள் படைப்புகள் எதையுமே நான் இதுவரைக்கும் படைத்ததில்லை. அதற்கு உங்கள் மேல் பிறர் வைத்த விமர்சனங்கள் காரணமானவை.
உங்கள் மொழிநடை எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் ஒவ்வொரு நாளும் உங்கள் இணையதளத்தை படிக்கப் படிக்க உங்கள் மொழிநடையும் எனக்கு பழக்கமாக ஆகி இருக்கிறது. உங்கள் கட்டுரை நூல்களை முதலில் படிக்க வேண்டும். அதன் பிறகு கதைகளுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றி.
ஜேம்ஸ் எஸ் ஆல்பர்ட்









