அன்புள்ள ஜெயமோகன்,
குழந்தைகளுக்கான புறச்செயல்பாடுகளை பற்றி உங்கள் காணொளியை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று குழந்தைகளுக்கு வெளியுலகமே இல்லாமல் ஆகிவிட்டது. என்ன காரணம் என்றால் நாளை அவர்கள் வேலை செய்யப்படும் சூழலிலும் வெளி உலகமே கிடையாது என்பதுதான்.
அண்மையிலே ஒரு கார்ப்பரேட் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன் 17 மாடி கட்டிடம் அது. வெளிக் காற்று உள்ளே வருவதற்கு வழியே இல்லை. அது கண்ணாடியாலான ஒரு மாபெரும் டப்பா போல் இருந்தது. அதற்குள் பல்லாயிரக்கணக்கான கண்ணாடிப் பிரிவினைகள். அதற்குள் ஆயிரக்கணக்கான மக்கள். அவர்கள் அந்த கட்டிடத்திற்குள் காலை ஏழு எட்டு மணிக்குள்ள வந்து விடுகிறார்கள். இரவு ஏழு எட்டு மணிக்குத்தான் செல்கிறார்கள்.வாரத்தில் ஒரு நாள் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. அன்று அவர்கள் களைத்து சோர்ந்து தங்கள் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
முழுமையாகவே வெளிக்காற்று படாத ஒரு வாழ்க்கையைத்தான் இன்றைய நாகரிகம் அவர்களுக்கு அளிக்கிறது. அதே வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு பயிற்சியைத்தான் பள்ளிகூடங்களும் அளித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு குழந்தைக்கு இளமையிலேயே இயற்கையை அறிமுகம் செய்தோம் என்றால் இந்த தகர டப்பா கண்ணாடி டப்பா வாழ்க்கைக்குள் ஒடுங்கி வாழ முடியாமல் ஆகிவிடும். இதைத்தான் பெற்றோரும் நினைக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை மனிதர்களாக வளர்ப்பதில்லை. பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக வளர்க்கிறார்கள். கார்ப்பரேட் அடிமைகளாக வளர்க்கிறார்கள்.
இந்த கண்ணாடி டப்பா வாழ்க்கைக்குள் தன் குழந்தை சென்று விடக்கூடாது என்றும் அது தனக்கான படைப்பு தன்மையும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய வேண்டும் என்று நினைக்க எந்த பெற்றோரும் இயற்கையை வெளி உலக வாழ்க்கையை அவர்களுக்கு அறிமுகம் செய்தே ஆக வேண்டும்.
ரா. முருகானந்தம்









