அன்புள்ள ஜெ,
உங்கள் மீதான வெறுப்புகள் ஏன் உருவாகின்றன என்று ஒரு காணொளியிலே சொல்லியிருந்தீர்கள். உண்மையில் இன்று சமூக வலைத்தளங்களில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்லும் எவர் மீதாவது வெறுப்பில்லாமல் இருக்கிறதா என்பதுதான் என்னுடைய கேள்வி. மிகச் சாத்வீகமான, எந்த பிரச்சனைக்கும் உள்ளாகாத விஷயங்களை ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட அவரை 200 பேருக்கு மேல் கவனிக்கிறார்கள் என்றால் உடனடியாக வசைகள் வர ஆரம்பிக்கின்றன. எவரும் தப்பமுடியாது.
இரண்டு காரணங்களால் இந்த வசைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று நான் நினைக்கிறேன் .ஒன்று மிக ஆழமான ஒரு வெறுமையும் அதிலிருந்து வரும் ஒரு கசப்பும் நம் சமூகத்தில் உள்ளது. பெரும்பாலும் நடு வயது கடந்தவர்கள் இந்த நரகத்தில் தான் இருக்கிறார்கள். அன்றாடவாழ்க்கையின் போராட்டங்கள் குறைந்து இவர்களுக்கு இன்று ஒரு வகையான அடிப்படை வசதிகள் உள்ளன. ஆனால் மேலதிகமாக எந்த வாழ்க்கையும் இல்லை. சலிப்பும் வெறுமையும் அப்படித்தான் உருவாகின்றன.
கடந்த காலத்திலே இவர்களுக்கு பக்தி என்ற ஒன்று ஆற்றுப்படுத்துவதாக இருந்தது. வாழ்க்கையின் பல்வேறு தோல்விகள் கசப்புகள் ஆகியவற்றிற்கு பக்தி ஒரு சிறந்த விளக்கத்தையும் மாற்றுவழியையும் அளித்தது. இன்று பக்தி பெரும்பாலாவர்களிடம் இல்லை. இன்றைய கல்வியும் அரசியலில் உள்ள நாத்திகமும் பக்தியை இல்லாமல் ஆக்கிவிட்டன. பக்தியின் இடத்திலே வந்து சேர வேண்டிய நாகரிகமும் கல்வியும் உருவாகவும் இல்லை. வெறும் லௌகீகம் மட்டும் தான் இருக்கிறது .அது ஒரு கட்டத்தில் ஏமாற்றமும் கசப்பையும் தான் அளிக்கிறது. அதைத்தான் சமூக வலைத்தளங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு சாரார் இனறைய சமூகவலைத்தளம் அளிக்கும் ஒரு ரகசியத்தை பயன்படுத்திக்கொண்டு ஒளிந்திருந்து கல் வீசுவது மறைந்திருந்து கெட்ட வார்த்தை சொல்வது அதில் எக்களிப்பது போன்ற ஒரு மனநிலை கொண்டவர்கள்.
இந்த இரு சாராரும்தான் சமூக வலைத்தளங்களில் கிளம்பி அத்தனை பேரையும் வசைப்பாடி தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை எந்த வகையில் நாம் பொருட்படுத்தாமல் முன்னால் செல்வது ஒன்றுதான் ஒரே வழி. இது நம் சமூகநோய், அவ்வளவுதான்.
ஆனந்த்குமார் நாராயணமூர்த்தி











