சிறுபொருட்கள், கடிதம்.

அன்புள்ள ஜெயமோகன்,

சிறிய பொருட்கள் அளிக்கும் மகிழ்ச்சியை பற்றிய காணொலியை பார்த்தேன். என் வாழ்க்கையில் இதுவரைக்குமான மகிழ்ச்சிகளை திரும்பிப் பார்க்கும்போது என்  மிகச்சிறிய ஒரு சேமிப்பு பழக்கம்தான் இதுவரைக்கும் என்னை வாழவைத்துள்ளது என நினைக்கிறேன். பலவகையான சோதனைகள் சோர்வுகளில் இருந்து அது என்னைக் காத்துக் கொண்டு வந்து சேர்த்தது என்ற உணர்வை அடைகிறேன்.

இதை இன்னொருவரிடம் என்னால் சாதாரணமாக பொருள் சொல்லி புரிய வைக்க முடியாது. இதை ஏன் செய்கிறீர்கள்? இதனால் என்ன பயன்? பணம் கிடைக்குமா? புகழ் கிடைக்குமா? என்றெல்லாம் ஏதோ கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒன்று கிடைக்கவில்லை. எனக்கு மன மகிழ்ச்சியை நிறைவும் கிடைக்கிறது என்று மட்டுமே நான் சொல்வேன். அதை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

அது அவர்களுக்குக் கேலிக்குரியதாகத்தான் இருக்கும். வாழ்நாள் முழுக்க பணம் சேர்த்து அதை பிள்ளைகளுக்கு கொடுத்து பிள்ளைகள் தங்களை கவனிக்கவில்லை என்று சொல்லி புலம்பி சாகுறவர்களைத்தான் எனக்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அதிலிருந்த அசட்டுத்தனத்தை பார்க்கவில்லை. எனக்கு அதுதான் பெரிய அபத்தமாக தெரிகிறது.

நான் வாழ்க்கை முழுக்க விதவிதமான சிவலிங்கங்களை சேர்க்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன்.  பயணம் செய்யும் இடங்களில் இருந்து எல்லாம் அந்த ஊருக்கே உரித்தான சிவலிங்க சிவலிங்கங்களை கொண்டு வந்திருக்கிறேன். பல வகை லிங்கங்கள் என்னிடம்  இருக்கின்றன. இவற்றை நான் பூஜை செய்வது இல்லை .ஒரே ஒரு லிங்கத்தை மட்டும்தான் பூஜை செய்கிறேன். மற்ற அனைத்துமே தனித்தனியாக பெட்டியில் அடைத்து பாதுகாத்து வைத்திருக்கிறேன். இவை எங்கே போனாலும் இன்றைக்கும் கிடைக்கக்கூடிய விஷயங்கள் =தான் ஆனால் நான் தேடித்தேடி சேகரித்தது என்பதனால் சிவனே என்னுடன் இருப்பது போன்ற ஒரு மன நிறைவை நான் அடைகிறேன்.

உங்கள் காணொளி எனக்கு மிகுந்த நிறைவையும் நான் செய்து கொண்டிருப்பது மிக சரியானதுதான் என்று எண்ணத்தையும் அளித்தது. நன்றி.

சேது ராமசாமி

முந்தைய கட்டுரைசிந்திப்பவர்களுக்காக மட்டும்
அடுத்த கட்டுரைபிறரைக் கவனித்தல்