
என்னன்பு ஜெ.மோ.
தங்களின் உரைகளை எனது நடை பயிற்சிகளில் தினசரி கேட்கிறேன். சில உரைகளை மிகப் பிடித்தப் பாடலைப் போல.
படித்த விஷயங்களைப் நினைவுறுத்திப் பகிர்ந்தாலும் கருத்துக்களை வலிமையாக்க இடையிடையே போகிற போக்கில் நீங்கள் சொல்லிச் செல்லும் உவமைகள் மழைவிட்ட நேரத்தின் மரத்தைத் தட்டி அடைகிற உணர்வுகளுக்கு ஒப்பானவை.
குறிப்பாக மொழி பற்றின ஓர் உரையில் மொழி ஒரு தொடர் நிகழ்வாக தலைமுறைகளைக் கடந்து பயணிக்கிறது என்பதற்காக நீங்கள் ஒரு சுடரை உவமையாகச் சொன்னீர்கள். //நீங்கள் பார்த்த, குறிப்பிட்ட சுடர் அதுவல்ல, அதுவொரு தொடர் நிகழ்வு….//
என்று தொடரும் அச் சிறந்த உரையின் பொருண்மை மனதில் நின்றாலும் உண்மையில் இந்த உவமை தந்த, தருகிற அல்லது ஏற்படுத்திக்கொண்டிருக்கிற ஒரு தியான உணர்வை இதுவரை என்னால் கடக்க முடியவில்லை. அன்றாடங்களின் பலத் தருணங்களில் நானதைப் பொருத்திப் பார்த்து மகிழ்கிறேன். நண்பர்களோடு, உறவினரோடு, சக எழுத்தாளர்களோடு அது பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதுவொரு முடிவிலி போல அது பற்றி சொல்லி முடித்துவிட்ட நிறைவைத் தராது புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. அந்த உவமை ஒரு சுடர்.
கொடு வெயிலில் களைவெட்டும் விவசாயி புங்கை நிழலில் ஓடிவந்து, அம்மரத்தில் கை ஊன்றி கொஞ்ச நேரம் நின்றுவிட்டு மீண்டும் களைவெட்டத் திரும்புவது போல என் அன்றாடங்களில் லௌகீக இருப்புக்கும் படைப்பு மனதிற்கும் இடையேயான அலைகழிப்பின் வெயிலில், புங்கை நிழல் போல அந்த உவமை இருந்துக்கொண்டிருக்கிறது. ஓடித் திரும்பிக்கொண்டிருக்கிறேன். விவசாயி அந்த நிழலைச் சிலாகிப்பது இல்லை. அது அவனது உரிமை. புங்கையின் தொழில் அல்லது இயல்பு அது. அதை எந்தவிதத்திலும் மகிமைப்படுத்தாமல் வந்து நின்று செல்வது அவனுக்கும் புங்கைக்குமான உறவின் அடர்வு.
அதுபோல அந்த உவமை எனக்குப் பயனாகிக் கொண்டிருக்கிறது. அந்த உரையை நான் கேட்டு 5 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னமும் புதுப் புது நிழல் அதில்.
இன்னும் ஒவ்வொரு உரையிலும் அதுபோன்ற பல நிழல்கள்.
நேற்று கேட்ட செயல்வழி ஞானத்தில், //சொல் எதிரில் இருப்பவரின் அகங்காரத்தைத் தூண்டும், செயல் சிந்திக்க வைக்கும், பின்பற்றவைக்கும் காந்தி அதைச் செய்தார்//
இந்த ஞானம், இந்த ஞான வெளிப்பாடு எப்படி எல்லோரும் போலான ஒரு மனிதருக்கு எல்லோரையும் போலான சமகாலத்தை வாழ்பவர்க்குக் கூடுகிறதென வியக்கிறேன்.
இது பீடிகை என்றால் ஆம் ?!
நிகழ் அரசியல் குறித்துத் தங்களது காணொளிகளையும் அவ்விதம் கண்டுவருகிற சமயத்தில் அதில் எதிர்மறை புரிதலோடு வினையாற்றுபவர்க்கு நீங்கள் அளிக்கும் பதில்களையும் காண்கிறேன்.
ஆனால் நீங்கள் ஏன் அந்தப் புங்கை போல் எந்த விளக்கமும் தராமல் நிழலைப் போட்டுவிட்டுப் போய்க்கொண்டிருக்கக் கூடாது ?! உங்கள் படைப்பின், அறிதலின் விஸ்திரணத்தின் சம விளிம்பிலோ, அதை ஒரு நூல் தாண்டியோ நிற்பவர்க்கு நீங்கள் அளிக்கும் பதில் நியாயமானது. அவசியமானது. ஆனால் இது போன்றவர்கள் மிக எளியவர்கள். ஒரு உணவு விடுதியின் எந்நேரமும் காய்ந்துக்கொண்டிருக்கிற தோசைக் கல்லைப் போல, ஒரு துளி விழுந்தாலும் ஓலமிட்டு விழுங்கி மீண்டும் காய்கிற அந்தக் கல்லைப் போன்று எளியவர்கள்.
அவர்களுக்கும் பதில் சொல்வதை அல்லது விளக்கம் அளிப்பதை நீங்கள் மறந்து போகலாம். இதுபோன்று ஆயிரம் லட்சம் அவதூறுகளைக் கடந்திருப்பீர்கள். போலவே இதே போன்று ஆயிரம் லட்சம் சகாயக் கருத்துக்களையும் கூட.
ஆனால் அந்த எளியவர்களுக்கு பொருட்டாகிற விளக்கங்கள் அந்தக் கல்லில் படுகிற துளி ஈரம் என்பதை ஞாபகப்படுத்த விழைகிறேன்.
இதை எனது புரிதலின் தெளிந்த மனதிலிருந்தே எழுதுகிறேன். எனக்குள் எந்த வழிபாட்டு உணர்வும் இல்லை. உங்கள் உரைகள், கருத்துக்கள், வாசிப்பில் இன்னும் ஆழத்திற்குள் நுழையாமல் அலை விளையாட்டு ஆடும் எனக்குப் பெருங்கடல்களின் பறவைக் கோண காட்சியைத் தருகின்றன. அக் காட்சிகளிலிருந்து துளிர்க்கும் நல்லுணர்வின் அடிப்படையில் இதை எழுதத் தோன்றிற்று.
நான் மதிக்கும் கண்ணியத்தை பிறர் மதிக்க வேண்டுமென்பதில்லை. அது அவரவர் அளவீடுகளால் ஆனது. ஆனால் அதை இன்னொரு இடத்தில் வைத்துப் பார்ப்பதும் முடியவில்லை. அசௌகரியமானதாகத் தெரிகிறது.
அலமாரியிலிருந்துத் தவறி விழும் மிகப் பிடித்தக் கவிதை நூலை கொஞ்சம் கூடுதல் அக்கரையுடன் அதன் இடத்தில் வைத்துவிடுகிற சடுதி நேசம் இந்தக் கருத்துக்கள். அறிவுறுத்தலோ ஆலோசனையோ அல்ல. அதற்கெல்லாம் இன்னும் எத்தனை தூரம் பயணிக வேணுமோ தெரியவில்லை.
மிக்க அன்பும் நன்றியும்.
அன்புடன்
அன்புள்ள இயற்கை அவர்களுக்கு,
வணக்கம் தங்கள் கடிதங்களுக்கு ஏற்கனவே என் காணொளிகள் வழியாக பதில் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபடுவதும், தொடர்ச்சியாக அதில் ஏதேனும் பேசிக் கொண்டிருப்பதும் என்பது அவர்களின் கனவுச் செயல்களை அனைத்தையும் தடுக்கும் ஒரு பெரும் இடர்
ஒன்று அரசியலை பற்றி அவர்கள் எந்த கருத்து சொன்னாலும் அதற்கு எதிரான கருத்துள்ளவர்களிடம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இரண்டு அவர்கள் தாங்களே ஒரு தரப்பை எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல அனைத்து பக்கங்களையும் பார்க்க முடியாதவர்கள் ஆகிறார்கள்.
ஆகவே அரசியலில் இருந்து விலகி நிற்பது மட்டுமே நான் செய்யக் கூடுவது. ஓர் எழுத்தாளன அவன் கருத்து சொல்லதக்க ஒரு களத்திற்கு அதாவது அவர் செயல்படும் களத்திற்கு அரசியல் சார்ந்து ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் அதற்கு மட்டும் தான் கருத்தை எழுத்தாளனாக மட்டுமே நின்று சொல்லிவிட்டு விலகிவிடவேண்டும்
அதையே செய்கிறேன். இனியும் அப்படியே.
ஜெ












