அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளியில் உங்கள் நோக்கம் என்ன, எதன் பொருட்டு இத்தனை தீவிரமாகச் செயல்படுகிறீர்கள் என்று பேசி இருந்ததைக் கண்டேன். அரசியல்வாதிகளை பொருத்தவரை ஒருவர் அத்தனை தீவிரமாக செயல்படுவார் என்றால் அதற்கு அதிகாரம் காரணமாக இருக்கு.ம் வேறெந்த காரணமும் இருக்காது. பணம் இன்னொரு வகையான அதிகாரம் தானே? அல்லது வெறும் கருத்தியல் செல்வாக்குகூட ஒரு அதிகாரம் தான்.
வியாபாரிகளை பொறுத்த வரை ஒருவர் தீவிரமாக செயல்படுகிறார் என்றால் அதற்கு ஒரே நோக்கம் அவர் பணம் சம்பாதிக்க விரும்புகிறார் என்பதுதான்.
இவை இரண்டும் இல்லாமல் ஒருவர் சமூக பணியாற்ற முடியும், இலக்கியப் பணியாற்ற முடியும், சேவை என்ற ஒன்று உலகத்தில் உண்டு என்பதை அவர்களால் நம்ப முடியாது. ஆகவே அவர்கள் இலக்கியப் பணிகளையும் சமூகப் பணிகளையும் அதிகார செயல்பாடாகவோ அல்லது வணிகமாகவோதான் பார்க்கிறார்கள் அவர்கள் தொடர்ந்து சமூகப் பணியை இலக்கியப் பணியை இழிவு படுத்திக் கொண்டே இருப்பதற்கான காரணம் இது தான்.
நான் பல நண்பர்களிடம் பேசி இருக்கிறேன். ஒருவர் தனக்கு செயலாற்றுவதில் உள்ள மகிழ்ச்சி மற்றும் நிறைவு அன்றி அதிகாரமோ பணமோ தேவையில்லை என்று சொல்ல முடியும் என்று அவர்கள் நம்ப முடியவில்லை என்பதை கண்டேன். அதெல்லாம் பாவலா என்று தான் அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக இளைய தலைமுறையினர் இடதுசாரி இயக்கங்களுக்குள் ஒருமுறை சென்று விட்டார்கள் என்றால் இந்த மாயையில் இருந்து அவர்கள் வெளிவரவே முடியாது. அவர்கள் சமூக சேவை செய்தால் கூட அது அதிகாரத்தின் பொருட்டாக மட்டும் தான் இருக்கும்.
எம்.பாஸ்கர்









