அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக குழந்தைகளைப் பற்றிய உங்கள் காணொளி நானே பல கோணங்களில் இன்று யோசித்துக் கொண்டிருப்பது. இந்த உலகமே தனக்காக படைக்கப்பட்டிருக்கிறது என்றும், உலகத்தில் அனைவரும் தனக்கு பணிவிடைகள் செய்ய காத்திருக்கிறார்கள் என்றும் நமது குழந்தைகளை எண்ணும்படி செய்து இருக்கிறோம். நம் குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் பெற்றோர் அந்த செல்போன்களை அவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள என்பதுதான் .செல்போன் அவர்களிடம் இல்லை என்றால் அவர்கள் பண்ணும் அதிகாரத்தை தாங்க முடியாது என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.
இன்று பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்லும் நிலையில் குழந்தைகளை கையாளுவது என்பது மிக மிகக் கடினமானதாக இருக்கிறது. குழந்தைகளுக்கு அறத்தையும் ஒழுக்கத்தையும் கற்பிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்று அல்ல. இன்று குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது ஒன்றுதான் பெற்றோருக்கு விடுதலையாக அமைகிறது. ஆனால் பள்ளிக்கூடத்திற்கு போவதனாலேயே பள்ளிகூடத்துக்கு போகாத நேரங்களில் எல்லா குழந்தைகள் பெற்றோர் ஒரு சர்வாதிகாரத்தனமான கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருக்கின்றன
குழந்தைகளை பெற்று வளர்ப்பதனாலையே பெற்றோர் தங்களுடைய அனைத்து ஆர்வங்களையும் மொத்த வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் தியாகம் செய்ய வேண்டும் என்று அந்த குழந்தைகளை எதிர்பார்க்கும் நிலை இன்று உருவாகி இருக்கிறது. இந்த நிலைபற்றிய நடைமுறை நோக்கிலான சிந்தனையை நாம் இன்று வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை அதன் போக்கில் விட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் குழந்தைகளுக்கும் வாழ்க்கையில் பொறுப்பு உண்டு என்று கற்பிக்காவிட்டால் குழந்தைகளுக்கு பொறுப்பை ஏற்கும் திராணி இல்லாமல் போய்விடும் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
ஜெயராஜன்












