அன்புள்ள ஜெ,
நலம்தானே?
நான் ஓர் கணிப்பொறியாளன். இலக்கியம், அரசியல், கிரிக்கெட் ஆர்வம் உண்டு. அரசியல் வழியாக உங்கள் தளத்துக்கு வந்தேன். இலக்கிய ஆர்வம் வந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கேள்வி இதுதான். நீங்கள் பல்வேறு மதவகுப்புகளை நடத்துகிறீர்கள். சைவசித்தாந்தம், வைணவம் எல்லாம் நடத்துகிறீர்கள். இந்த வகுப்புகள் ஒரு நவீன இளைஞனுக்கு ஏன் அவசியமென நினைக்கிறீர்கள்? நான் இவற்றில் ஆர்வம் காட்டவேண்டுமா என்ன?
கிருஷ்ணமூர்த்தி நாராயணன்
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
எல்லா இளைஞர்களுக்கும் இவையெல்லாம் தேவையில்லை. சாதாரணமாக ஒரு தொழில்நுட்பத்துறை சார்ந்த தொழிலும் எளிய கேளிக்கைகளும் மட்டுமே கொண்ட வாழ்க்கை வாழ்பவர்கள் இவற்றைக் கற்கவேண்டிய தேவை இல்லை. (அவர்கள் நாங்கள் நடத்தும் யோகம் தியானம் வகுப்புகளில் மட்டும் கலந்துகொள்ளலாம். அன்றாடவாழ்க்கைக்கு அது உதவும்)
ஆனால் கொஞ்சமாவது அறிவார்ந்த தேடலும், ரசனையும் கொண்டவர்களுக்கு இவை மிக இன்றியமையாதவை. மூன்று காரணங்களுக்காக
- இலக்கியம், தத்துவம், கலை ஆகியவை நிகழ்காலத்தை மட்டுமே சார்ந்தவை அல்ல. அவற்றுக்கு ஒரு தொடர்ச்சி உண்டு. தொல்பழங்காலத்திலேயே அவை தொடங்கிவிட்டன. அறுபடாத ஒரு சரடாக இன்றுவரை நீடிக்கின்றன. அவற்றை நாம் முழுமையாகவே கற்றுக்கொள்ள முடியும். நேற்றைய இலக்கியம், தத்துவம், கலை ஆகியவை மதத்தில்தான் உள்ளன. மதத்தை அறியாமல் அவற்றை கற்கவே முடியாது. கற்காவிட்டால் இலக்கியம், தத்துவம் ,கலை ஆகியவற்றில் உண்மையான அறிமுகமே நிகழாமல் போய்விடும் என்பதே உண்மை
- நாம் அறிவார்ந்து கற்பது கல்வியின் ஒரு பக்கம் என்றால் நம் ஆழ்மனம் நம்மை அறியாமலேயே உருவாகி வந்திருக்கும் என்பது இன்னொரு பக்கம்.நம் ஆழ்மனம் நம் மரபிலிருந்து வருவது. அதிலிருந்தே நம்முடைய சிந்தனைகள் ,கற்பனைகள் ஆகியவை உருவாகின்றன. நம் ஆழ்மனதை நாம் அறிவதற்கு நம் மரபை அறியவேண்டும். மரபு என்பது மதங்களின் வடிவிலேயே உள்ளது
- மதங்கள், மரபு ஆகியவையே அரசியல்வாதிகளால் அதிகாரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. மக்களை கும்பலாகத் திரட்ட அவற்றை அவர்கள் எளிய சார்புநிலைகளாகவும்ம் மிகையுணர்ச்சிகளாகவும், ஒற்றைவரிக் கருத்துக்களாகவும் ஆக்கிவிடுகின்றனர். ஆகவே அவை பலவாறாக திரிக்கப்பட்டும், காழ்ப்புகள் ஏற்றப்பட்டும்தான் நமக்கு கிடைக்கின்றன. நம்மிடம் மதம் பற்றி இருக்கும் எல்லா புரிதல்களும் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட பிழையான கருத்துக்கள்தான். அறிவார்ந்த தேடலும் ரசனையும் கொண்ட ஒருவர் உண்மையிலேயே மதங்களின் கருத்துக்களும், மதங்களின் அடிப்படை உருவகங்களும் என்ன என்று தெரிந்துகொண்டாகவேண்டும்.
இப்படி தெரிந்துகொள்ள நம் சூழலில் பல தடைகள் உள்ளன. அந்தத் தடைகளை கடந்து அவற்றைப் பயிலவேண்டியிருக்கிறது. அவை இவை
- மதங்கள் இங்கே நம்பிக்கைகளாகவே கற்பிக்கப்படுகின்றன. மதங்களிலுள்ள வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் தத்துவங்கள் பெரும்பாலும் கற்பிக்கப்படுவதில்லை. நம்பிக்கையை வலியுறுத்தாமல் மதங்களிலுள்ள வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் தத்துவங்கள் ஆகியவற்றை மட்டுமே கற்பிக்கும் அமைப்பாகவே இவ்வகுப்புகள் உள்ளன.
- மதங்கள் இங்கே நம்பிக்கைகள், ஆசாரங்கள், சடங்குகள் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளன. சாதியாகவும், மதக்குறுங்குழுவாகவும் பிரிந்துள்ளன. அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் மதங்களைக் கற்கமுடியாத சூழல் உள்ளது. சைவசித்தாந்தத்தைக் கற்க ஒருவர் விபூதி அணிந்து, சைவ ஆசாரங்களை கடைப்பிடிக்கவேண்டும் என்றும்; சைவசமயத்தின் உயர்சாதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்றும் பல இடங்களில் சொல்லப்படுகிறது. அந்நிலையில் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர் அதை கற்கமுடியாது. சாதிரீதியான அவமதிப்புகள் நிகழ வாய்ப்புண்டு. ஆகவே மதச்சடங்குகள் இல்லாமல், சாதியாசாரங்கள் ஏதுமில்லாமல், எவரும் கற்கும் வகையில் இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வழிபாடு ஏதும் கட்டாயமில்லை. முழுக்கமுழுக்க அறிவார்ந்து மட்டுமே இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
- இந்தியாவில் தன் மதம் சார்ந்த கல்வியை ஒருவர் அடையமுடியும். இன்னொரு மதம் சார்ந்த கல்வி அவருக்கு மறுக்கப்படும். ஆனால் அறிவுத்தேடல் கொண்ட ஒருவர் எல்லா மதங்களின் அடிப்படைகளையும் அறிந்திருக்கவேண்டும். ஒட்டுமொத்தமான அறிவு ஒவ்வொரு மதத்தையும் தெளிவாக அறியச்செய்யும். அனைவருக்கும் அனைத்து மதங்களையும் கற்பிக்கும் ஓர் அறிவார்ந்த முயற்சியே இங்கு செய்யப்படுகிறது.
எங்கள் வகுப்புகளில் தேர்ந்த ஆசிரியர்கள் மதங்களின் இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறார்கள். சைவ இலக்கியம் (மரபின்மைந்தன் முத்தையா ) சைவ தத்துவம் (அ.வே.சாந்திகுமார சுவாமிகள்) , வைணவ இலக்கியம் (ஜா.ராஜகோபாலன்), கிறிஸ்தவ மெய்யியல் (சிறில் அலெக்ஸ்) இஸ்லாமிய மெய்யியல் (நிஷா மன்சூர்) ஆகியவற்றுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஜெ
வரவிருக்கும் வகுப்புகள்
இஸ்லாமிய அறிமுக வகுப்புகள் நிஷா மன்ஸூர் ஜூலை 12 13 மற்றும் 14
வைணவ அறிமுக வகுப்புகள் ஜா.ராஜகோபாலன் ஜூன் 28, 29 மற்றும் 30
கிறிஸ்தவ அறிமுக வகுப்புகள் சிறில் அலெக்ஸ் ஜூன்21 22 மற்றும் 23
சைவ அறிமுக வகுப்புகள் அ.வே.சாந்திகுமார சுவாமிகள் ஜூன் 7, 8 மற்றும் 09
தொடர்பு [email protected]
எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்
எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்
எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta