ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பத்துநாட்கள் ஒரு கருத்தரங்கு நடந்தது. வெளிநாட்டு நிதியுதவியுடன் கிறிஸ்தவ மதப்பரப்புநர்கள் முன்னின்று அதை நடத்தினர். அதன் தலைப்பு ‘சனங்களின் சாமிகள்’ அதில் தமிழகம் எங்குமிருந்து ஏராளமான எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர்.
பெரும் பொருட்செலவில் நடந்த அந்த கருத்தரங்கில்தான் முதல்முறையாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதில் இந்தியாவிலுள்ள நாட்டுப்புறச் சிறுதெய்வங்கள் இந்து தெய்வங்கள் அல்ல என்றும், அவற்றை இந்துமதம் கைப்பற்றி அழிக்கப்பார்க்கிறது என்றும் சொன்னார்கள். அந்த நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபடுபவர்கள் இந்துக்கள் அல்ல என்றும், அவர்களை இந்துக்களாக ஆக்க இந்துக்கள் முயல்கிறார்கள் என்றும் அங்கே கூறப்பட்டது.
அதில் பங்கெடுத்த மார்க்ஸியக் கட்சிச் செயல்பாட்டாளரான ச.தமிழ்ச்செல்வன் அந்தக் கருத்தரங்கு தன் கண்ணை திறந்தது என்று 2009ல் எழுதினார். இவர்களின் கண்ணை எல்லாம் யார் வந்து திறந்துவிட வேண்டியிருக்கிறது என்று பாருங்கள்.
அந்த கருத்தரங்கு நடைபெறுவது வரை நாட்டுப்புறச் சிறுதெய்வங்கள் இந்து தெய்வங்கள் அல்ல என்ற எண்ணமே எவருக்கும் தமிழகத்தில் இல்லை. இங்கே பகுத்தறிவு பேசியவர்கள் எல்லாம் அத்தெய்வங்களை இழிவுசெய்து வசைபாடினர். அந்த தெய்வங்கள் மீதான பக்தியையும் சடங்குகளையும் இந்துமத மூடநம்பிக்கை என்றும் காட்டுமிராண்டி வழிபாடு என்றும் தான் சொல்லிக்கொண்டிருந்தனர். இந்து மதத்தை தாக்குவதென்றால் உடனடியாக மாடசாமியையும் முனியசாமியையும்தான் சுட்டிக்காட்டி இழிவுசெய்தனர். பதினெட்டாம்நூற்றாண்டு கிறிஸ்தவ மதபோதகர்கள் முதல் 1990 வரையிலான பகுத்தறிவாளர்கள் வரை அனைவருமே அதைச் செய்தனர்.
ஆனால் அக்கருத்தரங்கு நடந்தபின் சில ஆண்டுகளிலேயே அந்த நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபடுவது முற்போக்கானது என்று சொல்ல ஆரம்பித்தனர். அந்த நாட்டுப்புற தெய்வங்கள் எல்லாம் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றும், அவர்கள் எல்லாரும் மூதாதையர் என்றும் விளக்கம் அளிக்கலாயினர்.
அதன்பின்னர் அந்தப்போக்கு மேலும் வலுப்பெற்றது. முருகன் இந்துக்கடவுள் அல்ல, முருகன் ஒரு தமிழர், தமிழ்த்தெய்வம் என்றார்கள். அதன்பின் மேலும் பத்தாண்டுகள் கடந்து சிவன் இந்து கடவுள் அல்ல, சைவம் இந்து மதம் அல்ல என்று சொன்னார்கள். அடுத்து விஷ்ணு இந்துக்கடவுள் அல்ல, அது மால்வழிபாடு என்றனர். அதன்பிறகு பழைய தமிநூல்களில் சொல்லப்படும் வேதங்கள் என்பவை ரிக்,யஜூர், சாம, அதர்வண வேதங்கள் அல்ல என்று சொன்னார்கள். அதாவது மொத்த இந்துமதத்தையே இந்துமதம் அல்ல என்று சொல்லிவிட்டார்கள். இவர்களுக்கு என்னதான் பிரச்சினை? இவர்களுக்குப் பின்னணியில் எல்லாம் ஒரே சக்திகள்தான் என்பதே அதன் பதில்.
மாடனும் முனியனும் இந்து தெய்வங்களா? அவை இந்து தெய்வங்கள் என்றால் விஷ்ணுவும் சிவனும் இந்து தெய்வங்களா? இரண்டு வகை தெய்வங்கள் எப்படி ஒரே மதத்தில் இருக்கமுடியும்? இந்த ஐயம் சிலருக்கு உருவாகலாம். அதற்கான பதிலாக ஒரு கேள்வியை கேட்கலாம். இந்து மதத்தின் மையத்திலேயே இரண்டுவகை தெய்வங்கள் உள்ளன. ஒன்று, அருவான தெய்வம். அதாவது நிர்குணப் பிரம்மம். அறியவேமுடியாத, எந்த வகையிலும் விளக்கிவிட முடியாத பரம்பொருள். இன்னொன்று, உருவம் கொண்ட தெய்வம். அதாவது சகுணபிரம்மம்
ஓர் இயற்கை மதம் எப்படி உருவாகியதோ அந்த மூலச்செயல்பாடு அதற்குள் எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்று சொன்னேன். ஆகவே அது தொடர்ச்சியாக பிற் தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் உள்ளிழுக்கும். அவற்றை அழிக்காமல் அப்படியே தனக்குள் வைத்திருக்கும். அப்படி உள்ளிழுக்கப்பட்ட தரப்புகளுக்குள் தத்துவ உரையாடல் நடக்கும். அந்த தெய்வங்களும் வழிபாட்டுமுறைகளும் தத்துவார்த்தமாக தொடந்து விளக்கப்படும். அந்த இணைப்பையும் விளக்கத்தையும் நிகழ்த்தும் ஞானதத்துவங்களும் அதற்குள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
அதாவது ஓர் இயற்கைமதத்தின் ஒருபகுதி எப்போதுமே பழங்குடிப் பண்பாட்டில் இருக்கும். இன்னொரு பகுதி மிகமிக நுண்மையானதும் அறிவார்ந்ததுமான தத்துவ தரிசனமாக இருக்கும். வால் ஓர் எல்லையில், தலை இன்னொரு எல்லையில். ஆனால் எது வால் எது தலை என சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஒரு வட்டம். ஓயாது சுழன்றுகொண்டிருப்பது
இந்த இரண்டு புள்ளிகளுக்கும் நடுவேதான் இயற்கைமதத்தின் வழிபாடு, தத்துவம் ஆகிய எல்லா அம்சங்களும் இருந்துகொண்டிருக்கும். அந்த ஒட்டுமொத்தத்தைத்தான் நாம் இந்து மரபு என்கிறோம்.
ஆகவே இந்து மரபில் மூன்றுவகை தெய்வங்கள் உண்டு
அ. நடைமுறைத் தெய்வங்கள் (Functional Gods). இவை சிறுதெய்வங்கள் என்று சொல்லப்படுகின்றன. சம்ஸ்கிருதத்தில் ’தேவர்’ என்றும் ‘தேவதா’ என்றும் சொல்லப்படுகின்றன. நம்முடைய நாட்டுப்புற தெய்வங்கள், குலதெய்வங்கள் எல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை. வேதகால தெய்வங்களான இந்திரன், வருணன், சோமன்,யமன் போன்றவையும் இவ்வகையைச் சேர்ந்தவைதான். இவை ஒரு குறிப்பிட்ட செயல்களுக்குரிய தெய்வங்கள். ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுக்குள் நின்றுவிடுபவை. ஒரு குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட இடம் ஆகியவற்றுக்குரியவையும் உண்டு.
ஆ. முழுமுதல் தெய்வங்கள். (Almighty Gods) படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்யும் தெய்வங்கள் இவை. பிரபஞ்சத்தின் மேல் முழுமையான கட்டுப்பாடு கொண்டவை. பெருந்தெய்வங்கள். சிவன், விஷ்ணு, பராசக்தி போன்றவை
இ. தத்துவார்த்தமான தெய்வங்கள். (Philosophical gods) ஒரு தத்துவ உருவகமாகவே உணரப்படும் தெய்வங்கள். ஒரு கருத்தாகவே இவை நிலைகொள்கின்றன. உதாரணம், பிரம்மம்.
சிறுதெய்வம் நம் தெருக்கள்தோறும் இருக்கும். நம் வீட்டுக்குள்ளும்கூட இருக்கும். ஒரு தெய்வம் விளைச்சலுக்கு உதவும். இன்னொரு தெய்வம் நோய்வராமல் காக்கும். இன்னொரு தெய்வம் வழித்துணையாக இருக்கும். பெரும்பாலும் பலி, கொடை போன்ற எளிய வழிபாட்டுமுறைகளே இருக்கும்.
பெருந்தெய்வம் கோயிலில் கருவறையில் இருக்கும். அதற்கு உருவமும் எல்லா அருளியல்புகளும் இருக்கும். அதைச்சுற்றி பெரிய வழிபாட்டு அமைப்பு இருக்கும்.
தத்துவ தெய்வத்துக்கு உருவம் இருக்காது. அது தத்துவார்த்தமாகவோ தியானம் வழியாகவோ உணரப்படும் ஒன்றாகவே இருக்கும்
இந்துக்கள் ஒரேசமயம் இந்த மூன்று தெய்வங்களையும் வழிபடுபவர்கள். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்படி தொகுத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள், அவ்வளவுதான்.
இந்துவுக்கு குலதெய்வம், ஊர்த்தெய்வம், காவல்தெய்வம் ஆகியவை உண்டு. அவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதேபோல, ஆஞ்சனேயர், சண்டிகேஸ்வரர், சக்கரத்தாழ்வார், நவக்கிரகங்கள் போல பல துணைத்தெய்வங்களையும் இந்து வழிபடுவதுண்டு.
இந்து அந்த தெய்வங்களுடன் கூடவே, சிவனையும் விஷ்ணுவையும் வழிபடுவார். அவை முழுமுதல் தெய்வங்கள். அந்த இது வழிபடும் சிவ, விஷ்ணு தோத்திரங்களை எடுத்துப் பார்த்தால் அத்தெய்வங்களை பிரம்மத்தின் வடிவம் (பிரம்ம ஸ்வரூபம்) என்று சொல்லப்பட்டிருப்பதை காணலாம். பிரம்மம் தத்துவத் தெய்வம்.
சைவர்கள் சுடலைமாடனையும், சிவனையும் வணங்குவார்கள். கூடவே தூய தத்துவமான சைவசித்தாந்தமும் பேசுவார்கள். வைணவர்கள், ஆஞ்சநேயரை வணங்கும்போதே விஷ்ணுவை வணங்குவார்கள். விசிஷ்டாத்வைதம் என்னும் தூய தத்துவமும் பேசுவார்கள்.
நீங்கள் ஒரு கணபதி ஹோமம் செய்தால்கூட அந்த அந்தணர் உங்களிடம் ‘பித்ரு, குலதேவதா, காவல்தேவதா மூன்றையும் வணங்ங்குங்கள்’ என்று சொல்வார். அதன்பிறகுதான் ஹோமம் நடைபெறும்.
இந்த மூன்றடுக்கு நம்பிக்கை இருப்பதனால்தான் இந்து தர்மம் என்பது மதம் என ஐரோப்பியர் சொல்லும் வரையறைக்குள் வராமல் இருக்கிறது. சைவமோ வைணவமோ கூட ஐரோப்பியர் சொல்வதுபோன்ற மதங்கள் அல்ல. சைவமதம் சிவன் என்னும் ஒற்றை தெய்வ வடிவை வணங்குவது அல்ல. சைவ மரபுக்குள் சிவம் அல்லது பதி என்னும் தூய தத்துவமும் உண்டு. நானே சிவம் (சிவோஹம்) என்று சொல்லும் அபேதவாத சைவரும் இருப்பார். சிவனை கோயிலில் வழிபடும் பக்தரும் இருப்பார். கூடவே, சுடலைமாடனும் முத்தாலம்மனும் சைவத்திற்குள் உண்டு.
ஒரு சைவருக்கு இந்த மூன்றும் வேறுவேறல்ல. பதி எனப்படும் சிவதத்துவமே சிவன் என்னும் வடிவம் ஆகிறது என்பார். சுடலைமாடன் சிவ அம்சம் என்பார். மூன்றையும் ஒன்றாக இணைப்பார். இந்த இணைப்புச்செயல்பாடுதான் இந்து மரபு. இது ஐம்பதாயிரம் அறுபதாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இங்கே நடைபெறுகிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிகிறது.
இந்து மரபையும், அதற்குள் உள்ள மதங்களையும் ஐரோப்பிய பாணியிலான ரிலிஜன் அல்லது மதம் என்று சொல்லிச் சொல்லி நிறுவியவர்கள் ஐரோப்பியர்கள்தான். சட்டம், நடைமுறை இரண்டுக்காகவும் இந்து மதம் என நாமும் சொல்கிறோம். சைவ மதம் வைணவ மதம் என நம் முன்னோர்கள் அளித்த அர்த்தத்தில் சொல்கிறோம். ஆனால் இந்து மதம் என்பது ஐரோப்பியர் சொல்வதுபோன்ற மதம் அல்லது ரிலிஜன் அல்ல, அது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு ஞானச்செயல்பாடுதான் என நாம் அறிந்திருக்கவேண்டும். சைவம், வைணவம் எல்லாம் மூன்று அடுக்குகளாகச் செயல்படும் ஞானச்செயல்பாடுகள் என நமக்கு தெளிவு இருக்கவேண்டும்.
இந்து மரபை ஒரு ‘மதம்’ (ரிலிஜன்) என்று சொல்பவர்கள் ஏன் அதை அப்படி நம்மிடமும் வலியுறுத்துகிறார்கள்? அதை மதம் என்று சொன்னதுமே அதற்கு ஒரு தெய்வம், ஒரு வழிபாட்டுமுறை எல்லாம் வந்துவிடுகிறது. அதன்பின் இவர்கள் அதிலுள்ள ஒரு தெய்வம் அல்லது ஒரு வழிபாட்டுமுறையை மட்டும் அந்த மதம் என சொல்வார்கள். அதன்பின் மற்றவை எல்லாம் அதில் வந்துசேர்ந்தவைதான் என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். அந்த மற்ற தெய்வங்களை எல்லாம் இந்துமதம் ஆக்ரமிக்கிறது என்று வாதிடுவார்கள்.
அதை முதலில் சொன்னவர்கள் மிக நன்றாக ’எல்லாம் தெரிந்த’ அறிஞர்கள். அவர்களுக்கு திட்டவட்டமான அரசியல் நோக்கங்களும் மதநோக்கங்களும் இருந்தன. அதைக்கேட்டு கூச்சலிடுபவர்கள்தான் ஒன்றும் தெரியாத அரசியல்வாதிகள்.
இருசாராரிடமும் நம்மால் விவாதிக்க முடியாது. அவர்களின் மூர்க்கம் நம்மால் தாங்கக்கூடியது அல்ல. நமக்கே தெளிவு இருக்கவேண்டும். இவர்களின் நோக்கம் இந்து மரபு என நாம் சொல்லும் இந்த தொடர்ச்சியான ஞானச்செயல்பாட்டை நிறுத்துவதுதான். அதை பல துண்டுகளாக உடைப்பதுதான்.
ஆனால் நாம் உணர்ந்திருக்கவேண்டும். ஒரே சமயம் மூன்று அடுக்குகளிலாக இருக்கும் இந்துமதம் இறையுணர்வின் மூன்று வாய்ப்புகளை வழங்குகிறது. இன்னொரு கோணத்தில் பார்த்தால் இறையுணர்வை மூன்றுநிலைகள் வழியாக முழுமையாக அடைய வழிவகுக்கிறது. மூன்றுநிலைகளிலும் ஒரே சமயம் நிலைகொள்பவரே மெய்யுணர்ந்தவர். சிறந்த உதாரணம் ராமகிருஷ்ண பரமஹம்சர். இறைத்தத்துவமான பிரம்மத்தை ஆழ்ந்துணர்ந்த அத்வைதி அவர். கூடவே கிருஷ்ணனை வழிபட்டார். காளிகோயில் பூசகராகவும் இருந்தார்.