அன்புள்ள ஜெ,
அஜிதன் நடத்தவிருக்கும் ஜெர்மானிய தத்துவ வகுப்புகள் ஒரு நல்ல முயற்சி. அதைப்போலவே சில மேலைத்தத்துவ வகுப்புகளை நடத்தலாம். தத்துவ வகுப்பு என்று ஆரம்பத்திலேயே பிளேட்டோ அரிஸ்டாட்டில் என ஆரம்பிப்பது தவறு. அது சரித்திர பாடம் போல ஆகி சலிப்பூட்டும். தத்துவத்தை பாடமாக நடத்தக்கூடாது. எவர் என்னென்ன சொன்னார் என்று சொல்லக்கூடாது. தத்துவப் பிரச்சினைகளைச் சொல்லி அதை நடத்தவேண்டும்.
அந்த பிரச்சினையில் பழைய தரப்பாக பிளேட்டோ அரிஸ்டாட்டில் வரலாம். பிற தரப்புகள் வரலாம். அதுதான் தத்துவத்தைச் சுவாரசியமான வாழ்க்கை விவாதமாக ஆக்கும். நம் கல்லூரிகளில் பாடங்கள் சலிப்பூட்டுவது தத்துவம் தத்துவ வரலாறாகக் கற்பிக்கப்படுவதனால்தான். அமெரிக்கப் பள்ளிகளில் சமகாலத்தைய தத்துவப்பிரச்சினைகளை கற்பிப்பதன் வழியாகவே தத்துவத்தை அறிமுகம் செய்கிறார்கள்.
உதாரணமாக அமெரிக்காவில் தனிமனித உரிமை பற்றிய கவலை ஜாஸ்தி. தனிமனித உரிமை எப்படி உருவாகி வந்தது, எந்த எல்லை வரை என்பதை விவாதித்தால் உடனே ஐரோப்பிய தத்துவம் உள்ளே வந்தாகவேண்டும்.
ஜெர்மானிய தத்துவத்தை கற்பிப்பது சிறப்பான விஷயம். ஏனென்றால் இன்றைய அரசியல், சமூகவியல் சிந்தனைகளின் பல அடிப்படைகளை ஜெர்மானிய தத்துவத்தில்தான் விவாதித்தார்கள். ஃப்ரீவில், சூப்பர்மேன், வரலாற்றின் நோக்கம் போன்ற சில அடிப்படைகளை அறியாமல் இன்றைய ஜனநாயகத்தையோ அரசியலையோ நம்மால் புரிந்துகொள்ள முடியாது. மார்க்ஸ் கூட ஒரு ஜெர்மானிய தத்துவசிந்தனையாளர்தான்.
இதேபோல பிரிட்டிஷ் தத்துவத்தையும் கற்பிக்கலாம். அறவியலில் அவர்களுக்கு முக்கியமான பங்களிப்பு உண்டு
ஶ்ரீனிவாஸ்
அன்புள்ள ஶ்ரீனிவாஸ்,
பலவற்றை அறிமுகம் செய்யும் திட்டம் உள்ளது. எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பதை ஒட்டியே மேற்கொண்டு யோசிக்க முடியும்.
ஜெ
ஜெர்மானிய தத்துவம்- அஜிதன் நடத்தும் வகுப்புகள்
ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)