நவீன இலக்கிய வகுப்புகள்

அன்புள்ள ஜெ,

வகுப்புகளின் பட்டியலைப் பார்க்கும்போது இவற்றில் நவீன இலக்கியத்துக்கான வகுப்புகள் குறைவாக உள்ளன என்ற எண்ணம் உருவாகியது. ஆன்மிகம்,மதம்,தத்துவம்,யோகம் என்றுதான் நிறைய நிகழ்வுகள் உள்ளன. நீங்கள் அடிப்படையில் ஓர் நவீன இலக்கியவாதி என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும். மேலும் சினிமாவுக்கான வகுப்புகளும் நிகழவில்லை.

கிருஷ்ணா

அன்புள்ள கிருஷ்ணா,

நவீன இலக்கிய வாசகர் நவீன இலக்கியத்தை ஓரளவு அறிமுகம் செய்துகொள்கிறார். சமகால இலக்கியம் அவரிடம் சென்றுசேர்ந்துவிடுகிறது. ஆனால் அதற்குமேல் அவரால் நகர முடிவதில்லை. காரணம், அவருக்கு மரபோ, மெய்யியலோ, தத்துவமோ அறிமுகமாவதில்லை. அதை அறிமுகம் செய்வதே எங்கள் முதன்மைநோக்கம்.

இன்னொன்று, பங்கேற்பாளர்கள். நவீன இலக்கியம் சார்ந்த பயிற்சிகளுக்குப் பங்கேற்பாளர்கள் மிகக்குறைவு. ஆலயக்கலை, யோகம் போன்றவற்றுக்கே பங்கேற்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிகமானபேர் ஆர்வம் காட்டும் நிகழ்வுகளை கூடுதலாக நிகழ்த்துகிறோம்.போதிய பங்கேற்பில்லாத நிகழ்வுகள் எங்களுக்கு இழப்பு ஏற்படுத்துபவை. அவை அடிக்கடி நிகழ முடியாது.

நவீன இலக்கியம் சார்ந்து இன்னொரு சிக்கலும் உண்டு. நவீன இலக்கியங்களைச் சொல்லிக்கொடுக்கும் ஆற்றல்கொண்டவர்கள் மிக அரிது. நவீன இலக்கியவாதிகளாக புகழ்பெற்றவர்கள் பெரும்பாலும் எதையும் பிறருக்குக் கற்பிக்கும் மனநிலையோ பயிற்சியோ அற்றவர்கள். வெறுமேபேசிக்கொண்டிருக்கவிரும்புபவர்கள். ஒரு கட்டண வகுப்பை அப்படி நிகழ்த்த முடியாது

பார்ப்போம். மேலும் வகுப்புகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைதியான யோக வழிகளும் ஆலயங்களும்
அடுத்த கட்டுரைஜெர்மானிய தத்துவம்- கடிதம்