எழுதவிருப்பவரின் கடிதம், ஒரு பதில்…

எழுதவிருப்பவரின் கடிதம்…

அன்புள்ள சபரீஷ்,

உங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. முதல் சிறு மகிழ்ச்சி என்பது என் கொள்கை ஒன்று மெய்யாவதைப் பற்றியது. ஆங்கிலம் வழியாகக் கற்று, தமிழ் அறியாதிருக்கும் ஓர் இளைஞர், இயல்பான மொழித்திறனும் அறிவும் கொண்டவர் என்றால் ஓரிரு வாரங்களிலேயே நேரடியாக தீவிரமான தமிழ் வாசிப்புக்குள் வந்துவிட முடியும். சிறப்பான உரைநடை எழுத மேலும் ஒரு மாதம் ஆகலாம். உங்கள் கடிதத்தின் நடையில் உள்ள ஒழுங்கும் கூர்மையும் அபாரமானது. வாழ்த்துக்கள்.

உங்கள் கடிதம் சார்ந்து இரண்டு விஷயங்களைச் சொல்லவேண்டியுள்ளது.

ஒன்று, நீங்களும் கல்விநிலையங்களும்.

உங்களுடைய தேவை அறிவார்ந்தது. ஓர் எழுத்தாளராக, சிந்தனையாளராக ஆகவிழையும் மாணவரின் உள்ளம் உங்களுடையது. அதற்கான வாய்ப்பு நம் கல்விநிலையங்களில் இல்லை. நம் கல்விநிலையங்கள் இங்குள்ள வெவ்வேறு வேலைகளுக்கான அடிப்படைப்பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்கும் நோக்கம் கொண்டவை. அவை மொழி, கணிதம், அடிப்படைத் தொழில்நுட்பம், சமூகப்பழக்கம் ஆகியவற்றில் பயிற்சியை அளிக்க உத்தேசிக்கப்பட்டவை .அவற்றை அவை அளிக்கின்றனவா என்பது முற்றிலும் வேறொரு கேள்வி. அவற்றை அளிப்பவையே சிறந்த கல்விநிலையங்கள்.

நீங்கள் அவற்றிடம் தவறான கேள்வியைக் கேட்டீர்கள். அவை பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவற்றிடம் பதில் இல்லை. அவை எவற்றை அளிக்க முடியுமோ அவற்றை மட்டுமே கேட்டிருக்கவேண்டும். அவற்றை உங்களுக்கு ஒரு வருமானம் அளிக்கும் வேலையை உருவாக்கி தரும் கல்வியைப் பெற மட்டுமே பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்தத் தெளிவு இருந்திருந்தால் உங்களுக்கு அந்த அமைப்பிடம் மோதல் உருவாகியிருக்காது. அதை உங்கள் வாழ்க்கையின் ஒரு பக்கமாக வைத்துவிட்டு உங்கள் தனித்தேடல்களை வேறுபக்கம் செலுத்தியிருப்பீர்கள்.

நாளை, உங்களுக்கு ஒரு வேலை அமையுமென்றால்கூட அது வேலை மட்டுமே, உலகியலில் ஓர் இடம் அளிப்பது மட்டுமே என்னும் தெளிவு உங்களிடமிருக்கவேண்டும். நீங்கள் உங்கள் சாதனைக்கும் அகநிறைவுக்கும் உங்களுக்கான களங்களை தெரிவுசெய்துகொள்ளவேண்டும். அங்கேயே பணியாற்றவேண்டும். அதிருஷ்டவசமாக தொழிலும் உங்கள் களம் சார்ந்ததாக அமையலாம். ஆனால் அது இன்று சாதாரணமாக நிகழ்வதில்லை. பல அறிவுக்களங்களில் ஒரு தொழிலாக அமையும் அளவுக்கு பொருளியல் அடிப்படை கிடையாது.

இரண்டு, உங்கள் உலகியல்

இந்தக் கடிதம் காட்டும் சபரீஷ் ஓர் எளிய மாணவன் அல்ல. உங்கள் முதல் கடிதத்திலேயே ஆழமான பல வரிகள், கூர்ந்த அவதானிப்புகள் உள்ளன. ஆகவே நீங்கள் இப்போதே ஒரு சிந்தனையாளர்தான். குழந்தையின் கொலுசு போல அழகான படிமங்கள் பல இக்கடிதத்தில் இயல்பாக அமைகின்றன. நீங்கள் எதிர்காலத்தில் ஆற்றல்மிக்க எழுத்தாளர் ஆகக்கூடும்.

அதுதான் எனக்கு ஓர் எச்சரிக்கை உணர்வை அளிக்கிறது. எழுத்தாளர்களின் மண்டை எளிதில் நெருப்பாகி விடக்கூடியது. ஒன்றிலேயே அதிகமான ஈடுபாடு கொள்ளக்கூடியது, அதன்பொருட்டு பிறவற்றை விட்டுவிடக்கூடியது. நீங்கள் கொண்டுள்ள இந்த தீவிரம் உங்கள் உலகியலைப் பாதிக்கலாகாது. இன்று நீங்கள் உடனடியாக ஒரு படிப்பை முடித்து, ஒரு நல்ல வேலைக்குச் செல்லும் தேவையுடன் இருக்கிறீர்கள். இந்தத் தீவிரம் அதற்குத் தடையாக அமையக்கூடாது. ஒரு சமநிலை தேவை.

நான் பலமுறை சொல்வதுதான், இலக்கியத்துக்காக உலகியலை விட்டவர்கள் ஒரு கட்டத்தில் உலகியலுக்காக இலக்கியத்தை விட்டுவிட நேரும். ஆகவே இன்று செய்யவேண்டிய உலகியல் பணிகளை ஒரு நிமிடம்கூட ஒத்திப்போடவேண்டாம். முழுத்தீவிரத்துடன் முயன்று அதிலும் வெற்றி காணவும். உங்கள் விருப்பக்களங்களில் செயல்படுவதற்கான எல்லா அடிப்படையையும் அந்த உலகியல்வெற்றி அமைத்துத் தரும்

 

ஜெ

முந்தைய கட்டுரைசைவசித்தாந்த அறிமுக வகுப்புகள்
அடுத்த கட்டுரைமேலைத்தத்துவம், ஒரு புதுக்கேள்வி