அன்புள்ள ஜெ
ஒரு நல்ல வாசகன் முழுமையறிவு நிகழ்த்தும் முகாம்களில் ஒரே சமயம் சைவதத்துவம், மேலைத்தத்துவம், அத்வைதம், இஸ்லாமிய தத்துவம், பௌத்தம் எல்லாவற்றையும் கற்றால் அவனுக்குக் குழப்பம் வராதா? அவன் தனக்குரியதைத் தானே தேர்வுசெய்து கற்கவேண்டும்?
அமர் ராஜ்
அன்புள்ள அமர்,
தனக்குரியதை எப்படி தெரிவு செய்வது? எதையுமே தெரியாமல் ஒன்றை தெரிந்துகொள்ள முடியுமா என்ன? அந்த தெரிவுசெய்யும் செயலுக்கே கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?
அந்த அடிப்படைகளை மட்டும்தான் இங்கே அறிமுகம் செய்கிறோம். இருநூறாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச்சூழலில் தத்துவக்கல்விக்கு இடமே இல்லை. ஆகவே தத்துவம் சார்ந்த அறிமுகமே இல்லை. அந்த மொழிநடை, தர்க்கமுறை ஆகியவை எவருக்கும் பழக்கமில்லை.
அத்துடன் இங்குள்ள பக்தி இயக்கம் தத்துவத்தை எதிர்நிலையில் வைத்துப்பார்க்கும் உளப்பாங்கையும் உருவாக்கி நிலைநிறுத்தியுள்ளது. இங்கே கட்சியரசியல், முற்போக்கு அரசியல் அனைத்திலுமுள்ளது அந்த பக்தி இயக்க மனநிலைதான். அதாவது கண்மூடித்தனமாக ஒன்றை கொண்டாடுவது, ஏற்று ஒழுகுவது, உணர்ச்சிகரமான ஈடுபாடு கொண்டிருப்பது, அதற்கு எதிர்நிலையில் ஆய்வையும் தர்க்கத்தையும் நிறுத்துவது.
இக்காரணங்களால் நாங்கள் நடத்தும் எளிய தத்துவ அறிமுக வகுப்புகளே தீவிரமான தத்துவ வகுப்புகள் என தோற்றமளிக்கின்றன. ஆகவே சிலர் தயங்குகிறார்கள். உங்கள் தயக்கமும் அதிலிருந்து வந்தததே
இவற்றைப்போல இன்னொரு வகுப்பு இன்று தமிழில் இல்லை. ஆர்வமுள்ள ஒருவருக்கு வேறு வாய்ப்பே இல்லை. அதை பயன்படுத்திக்கொள்ள இப்போது தவறுபவர்களுக்கு என்றென்றைக்கும் அது இழப்பே
ஜெ