மரபின்பம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

வணக்கம். முதன்முறையாக வெள்ளிமலையில் நடக்கும் வகுப்பில் கலந்துகொண்டேன். இது போன்றதொரு கற்கும் சூழலை உருவாக்கித் தந்தமைக்கு உங்களுக்கு என்னுடைய தனிப்பட்ட நன்றிகள்.

வெள்ளிமலை ஏறும்போதே குளிர்ச்சியும் தென்றலுமாய் சூழல் இனித்தது. ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் வகுப்பைத் துவங்கிய பாணி நேர்த்தியானது. ஒரு நீச்சல் குளத்தை உவமையாக்கி, முதலில் நடுவில் குதிக்க விரும்புகிறீர்களா அல்லது படிப்படியாக நடுஆழம் செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டு ஆரம்பித்தார். ஒரு முறையான பயிற்சியின் முறையான துவக்கம்

தெரிந்ததைக் கொண்டும், எளிமையானதைக் கொண்டும் பெரிய விஷயத்தை விளங்க முற்படுதல் ஒரு சிறந்த கற்றல் வழி. ஆசிரியர் அவ்வாறான ஒரு காலப் பயணத்தின் வழி எங்களை அழைத்துச் சென்றார். அவர் வகுப்பில் கற்பித்தவை பாதி ரசனையைத் தந்தது என்றால், வகுப்பு அல்லாத நேரங்களில் அவருடன் இருந்தது மேலும் ரசனையையையும், நகைச்சுவையையும் தந்தது

அவர் சொல்லச் சொல்ல நாங்கள் கவிதை உருவான காலத்திற்க்கே சென்று வந்தோம். மற்றும் கவிதையின் ஓசை நிலைகளை அவரே படித்துக் காண்பித்து எங்களையும் படிக்க வைத்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

கவியுள்ளம் காணுதல் பற்றி அவர் விளக்கிய பாங்கு தனித்தன்மை வாய்ந்தது

அந்தியூர் மணி அண்ணாவின் பேச்சும், கவனிப்பும், அவரின் நன்கு விளைந்த முகமும், முகிழ்ந்த சிரிப்பும் நான் இதுவரை காணாத ஒன்று. மிகவும் கவர்ந்த ஒன்று

மொத்தத்தில் வெள்ளிமலை வகுப்பில் நான் கண்டுகொண்டவை, தேவையில்லாத எதிர்பார்ப்புகளாலும் ஆசைகளாலும் வாழ்வின் இனிமையை நழுவவிட்டிருக்கிறேன். இனி எளிய வாழ்வை நோக்கி முன்னேறுவேன். மற்றும் இலக்கியம் என்பது காலந்தோறும் ஆற்றப்பட்ட சிறந்த செயல்களால் உண்டானவை. ஒரு இலக்கிய ரசிகனின் கடமை இலக்கியமாக வாழ்வது என்று கண்டுகொண்டேன்

மீதம் இருக்கும் ஏற்பட்ட அனுபவத்தை சொல்லப் போனால் அந்த மூன்று நாட்களில் நடந்த ஒவ்வொரு நிமிடத்தையும் எழுத வேண்டும்.

இத்தகைய சிறந்த வாய்ப்பை தந்த ஜெ அவர்களுக்கும், ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கும் நன்றிகள்.

ராம்குமார் 

பொன்னமராவதி.

முந்தைய கட்டுரைஊழும் அநீதியும்
அடுத்த கட்டுரைஇஸ்லாம் – குழப்பங்களும் விளக்கங்களும் | நிஷா மன்சூர்